ஆன்மிகம்

பள்ளி கொண்ட அரங்கநாதர் கோவில் தேரோட்டம்

Published On 2019-04-20 03:21 GMT   |   Update On 2019-04-20 03:21 GMT
இடிகரையில் உள்ள பள்ளி கொண்ட அரங்கநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டம் இடிகரை கிராமத்தில் பள்ளி கொண்ட அரங்கநாதர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர்த்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து பெருமாள் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் போன்ற வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் திருக் கல்யாணம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காலை 10.15 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சின்ன தேரில் ஆண்டாள் எழுந்தருளினார். பெரிய தேரில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் எழுந்தருளினார். ஆண்டாள் தேர் முன்னால் செல்ல அதை தொடர்ந்து பெருமாள் தேர் சென்றது. தேர் திருவீதிகளில் உலா வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கோவிலை சுற்றிலும் ஆங்காங்கே இலவசமாக நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News