ஆன்மிகம்

சிசுபாலனின் தலையை கொய்த கிருஷ்ணன்

Published On 2019-04-18 09:10 GMT   |   Update On 2019-04-18 09:10 GMT
ஜராசந்தனுடன் இணைந்து கிருஷ்ணரை சீண்டுவதையே வேலையாக செய்து வந்த சிசுபாலனை கிருஷ்ணன் தண்டித்த கதையை அறிந்து கொள்ளலாம்.
டமகோசன் என்ற அரசனின் மகன்தான் சிசுபாலன். அவன் பிறக்கும் போதே, 3 கண்களுடனும், 4 கரங்களுடனும் பிறந்தான். ‘தங்களது மகன் சக்தி வாய்ந்தவனாக வளர்வான்’ என்றும், ‘ஒரே ஒருவரால் மட்டுமே அவனுக்கு மரணம் நேரும்’ என்றும், ‘அவனை கொல்லும் நபரின் மடியில் அமரும் போது இவனது 3-வது கண்ணும் 2 கரங்களும் மறைந்து விடும்’ என்பதையும் அவனது பெற்றோர் தெரிந்து வைத்திருந்தனர்.

யாதவ குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், தனது அத்தைக்கு பிறந்த குழந்தையைப் பார்க்கச் சென்றிருந்தார். அங்கு அந்த குழந்தையை வாங்கி தனது மடியில் வைத்திருந்தார். அப்பொழுது குழந்தையின் மூன்றாவது கண்ணும், இரண்டு கைகளும் மறைவதை கிருஷ்ணனின் அத்தை கண்டார். தனது குழந்தைக்கு வாழ்வு அருளும் படி கிருஷ்ணனிடம் அவர் மன்றாடி கேட்டுக் கொண்டார். அதற்கு கிருஷ்ணர், “இந்த குழந்தை வளர்ந்த பின் செய்யும் தவறுகளை, நான் 100 முறை பொறுத்து அவனை மன்னித்து விடுவேன்” என்று கூறினார்.

சிசுபாலன் வளர்ந்த பின் கிருஷ்ணனின் எதிரியான ஜராசந்தனுடன் இணைந்து கிருஷ்ணரை சீண்டுவதையே வேலையாக செய்து வந்தான். பாண்டவர்கள் இந்திரபிரஸ்தத்தில் ராஜசூய யாகம் வளர்த்தனர். அப்பொழுது அவர்கள் கிருஷ்ணருக்கு முதல் மரியாதை செய்ய எண்ணினர். அதை ஏளனம் செய்த சிசுபாலன், சபையினர் முன்பு கிருஷ்ணரை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டான்.

கிருஷ்ணர் அணிந்த மாலையில் இருந்த பூக்களை பிய்த்து போட்டான். அவன் கடைசியாக ஒரு பூவை பிய்த்து போட்டான்; அது தான் கிருஷ்ணர் அவனுக்கு வழங்கும் 100-வது மன்னிப்பு. அவன் பிய்த்து போட்ட அந்த பூ தரையில் விழும் முன் கிருஷ்ணர் தனது சுதர்சன சக்கரத்தால் சிசுபாலனின் தலையைக் கொய்தார்.
Tags:    

Similar News