ஆன்மிகம்

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் தெப்ப திருவிழா

Published On 2019-02-06 13:38 IST   |   Update On 2019-02-06 13:38:00 IST
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாங்குநேரியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வானமாமலை பெருமாள் கோவில் உள்ளது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள வானமாமலை பெருமாள் சுயம்பாக தோன்றியவர் ஆவார். பிரசித்திப் பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் தெப்பத் திருவிழா நடப்பது வழக்கம். இதன் படி இந்தாண்டு தெப்பத் திருவிழா நேற்று இரவில் நடைபெற்றது.

இதையொட்டி வான மாமலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதனைதொடர்ந்து இரவில் பெருமாள் தெப்ப உற்சவத்திற்கு புறப்பட்டார். ரதவீதிகள் வழியாக தெப்ப குளத்திற்கு வந்தார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வானமாமலை பெருமாள் வரமங்கை நாச்சியாருடன் எழுந்தருளி சுற்றி வந்தார். விழாவை மதுரகவி வானமாமலை மடத்தின் ஜீயர் தொடங்கி வைத்தார்.

விழாவை முன்னிட்டு தெப்பம் பல வண்ண மின் விளக்குகளாலும், மலர் களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இதில் நாங்குநேரி மற்றும் சுற்றுபுற பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News