ஆன்மிகம்
ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்

Published On 2019-02-05 05:32 GMT   |   Update On 2019-02-05 05:32 GMT
தை அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
ராமேசுவரத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களான ஆடி அமாவாசை, தை அமாவாசை, மாசி சிவராத்திரி போன்ற நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னிதீர்த்த கடல் மற்றும் கோவிலில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடுவது வழக்கம். தைஅமாவாசையொட்டி நேற்று கார், வேன், பஸ் போன்றவற்றின் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்தனர். அதனை தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

தை அமாவாசையையொட்டி ராமர் தங்க கருட வாகனத்திலும், சாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். அதன் பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

கடலில் புனித நீராடிய பக்தர்கள் கோவிலின் உட்புறத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடுவதற்காக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதனை தொடர்ந்து சாமி-அம்பாளை தரிசனம் செய்தனர். அமாவாசையை முன்னிட்டு நாள் முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு இருந்தது.

சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி ஆணையர் குமரேசன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, துணை சூப்பிரண்டு மகேஷ் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 
Tags:    

Similar News