ஆன்மிகம்
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம்

Published On 2019-01-22 04:32 GMT   |   Update On 2019-01-22 04:32 GMT
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நெல்லை மாவட்டம் உவரியில் சுயம்புலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை விநாயகர் ஊர்வலம், இரவு சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதிஉலா நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருவிழாவான நேற்று காலை நடந்தது. கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேரின் மீது மூன்று முறை கருடன் வட்டமிட்டது. அதனை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து கோஷமிட்டனர். தேரில் சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை ஆகியோர் பவனி வந்தனர்.

விழாவில் ராஜகோபுர திருப்பணி கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன், செயலாளர் வெள்ளையா நாடார், துணை தலைவர் கனகலிங்கம், பொருளாளர் செண்பகவேல் நாடார், தேர் திருப்பணி குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார், வி.வி.மினரல் ஜெகதீசன், தொழிலதிபர் வடமலை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பக்தர்கள் கடல் மண்ணை பெட்டியில் சுமந்து வந்து கடற்கரையில் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பஞ்ச மூர்த்திகள் ஊர்வலமும், இரவு தெப்பத்திருவிழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார். 
Tags:    

Similar News