ஆன்மிகம்

ஒரு மனிதன் சித்தராக மாறுவது எளிதா?

Published On 2018-12-06 04:32 GMT   |   Update On 2018-12-06 04:32 GMT
ஒரு மனிதன் சித்த நிலை அடைவது, பல பிறவிகளாக அவன் செய்த தியானம், தவம், நற்செயல், தானதர்மம் போன்றவையே அவனை இறைநிலையான சித்த நிலைக்கு அழைத்து செல்லும்.
ஒரு மனிதன் சித்த நிலை அடைவது, ஒரே பிறவியில் கிடைக்கும் பொக்கிஷம் இல்லை. பல பிறவிகளாக அவன் செய்த தியானம், தவம், நற்செயல், தானதர்மம் போன்றவையே அவனை இறைநிலையான சித்த நிலைக்கு அழைத்து செல்லும்.

உதாரணமாக புத்தர் ஞானம் பெறுவதற்கு முன்பாக, அவர் அதற்கு முன்பு எடுத்த முன்னூறு பிறவிகள் அவருக்கு புலப்பட்டதாம்.

அதேபோல தான் பல பிறவிகளில் பெற்ற ஞானம், தவவலிமை ஆகியவற்றுடன் தான் ஒருவன் பிறப்பான். ஆனால் அவை அனைத்தும் பல பூட்டுகளால், அவனுள்ளேயே அடைத்து வைக்கப்பட்டிருக்கும்.

உதாரணமாக பண ஆசை, பெண் ஆசை, பொருள் ஆசை போன்ற எல்லா ஆசைகளும் அவனுக்குள் எழும். அவையெல்லாம் அவன் அனுபவித்து வெறுத்து வர வேண்டும் என்பதற்காக தரப்படுபவையே.

அருணகிரிநாதர் முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்கு முன்பாக, பெண் பித்தனாக இருந்தார். அவர் சகோதரி கூறிய ஒரு வார்த்தை, அவர் பெண் ஆசையை வெறுக்க காரணமாக அமைந்தது. பின் மகானாக மாறி பல சித்துகளையும் முருகப்பெருமானிடம் பெற்றார். அதனால் தான் ‘நதி மூலம் ரிஷி மூலம் பார்க்காதே’ என்றார்கள். முன்கால கர்மவினையானது, நம்மை பக்குவ நிலைக்கு அழைத்துச் செல்வதற்காக கடுமையானதாகவும், மோசமானதாகவும் இருக்கலாம் அதை நாம் பார்ப்பதில் பலனில்லை. சமைத்த உணவே நாவிற்கு ருசியை கொடுக்கும். சமைக்கும் முன் அதன் ருசியை அறிய இயலாது.

அதுபோல ஒவ்வொறு ஆசையையும் வெறுக்க வெறுக்க ஒவ்வொறு பூட்டாக உடைபடும். அனைத்து பூட்டுகளும் உடைபடும் போது, மனம் உடலோடு அலையும்.

ஆமாம்.. அனைத்தையும் வெறுத்து, துறந்த மனிதன் ஏதோ ஒன்றைத் தேடி அலைந்து திரிவான். அவன் ஓடி, ஓடி ஒடுங்கும் நிலையில், குரு தன் கருணையால் அதை திறந்து விடுவார். அக்கணம் முதல் காற்றாட்டு வெள்ளம் போல் ஞானம் பெருக்கெடுத்து ஓடும். பலரின் ஆன்ம தாகங்களையும் கூட அவன் தீர்த்துவைப்பான். சிலரை தன்னோடு ஞான ஆற்றில் அடித்தும் செல்வான். அவனே சித்தன் என்று அழைக்கப்படுவான்.
Tags:    

Similar News