ஆன்மிகம்

பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் கோவிலில் தீர்த்தவாரி

Published On 2018-09-14 03:22 GMT   |   Update On 2018-09-14 03:22 GMT
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தி விழாவில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி தினந்தோறும் இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கடந்த 9-ந் தேதி மாலை கஜமுஹாசுர சம்ஹாரமும், 12-ந்தேதி மாலை தேரோட்டமும் நடைபெற்றது. தேரோட்டம் அன்று மாலை மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று காலை 10 மணிக்கு உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் திருக்குளக்கரை எதிரே எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து திருக்குளத்தில் அங்குச தேவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க பூக்களால் அலங்கரிக்கப்பட்டு 3 முறை குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வந்தார். பின்னர் மதியம் 1.30 மணிக்கு மூலவர் கற்பக விநாயகருக்கு முக்குறுணி மெகா கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகளின் திருவீதி உலா நடைபெற்றது.

விழாவையொட்டி காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு சிறப்பு பஸ்கள் விடப்பட்டன. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
Tags:    

Similar News