ஆன்மிகம்
மாணிக்கம் விற்ற லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் மீனாட்சி அம்மன், எழுந்தருளினார்.

மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா: மாணிக்கம் விற்ற திருவிளையாடல்

Published On 2018-08-18 03:16 GMT   |   Update On 2018-08-18 03:16 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவின் 3-ம் நாளான நேற்று ‘மாணிக்கம் விற்ற லீலை’ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. விழாவின் 3-ம் நாளான நேற்று ‘மாணிக்கம் விற்ற லீலை’ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.

‘மாணிக்கம் விற்ற திருவிளையாடல் லீலை‘ பற்றிய புராண தகவல் வருமாறு:-

மதுரையில் வீரபாண்டியன் நீதியுடன் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு ஒரு ஆண் மகன் பிறந்தான். அந்த சமயத்தில் ஒரு நாள், அரசன் வேட்டையாடச்சென்ற போது புலிக்கு இரையாகி இறந்தான். இதனை அறிந்த அரசனின் காமக்கிழத்தியர்களின் பிள்ளைகள் அரண்மனைக்குள் புகுந்து சகல செல்வங்களையும், மணி மகுடத்தையும் திருடிச்சென்றனர். இதனையடுத்து இளவரசனுக்கு முடிசூட்டலாம் என்று அமைச்சர்கள் முடிவு செய்தனர்.

மணிமகுடம் உள்ளிட்ட பொருட்கள் களவு போனதை இறைவனிடம் முறையிட எண்ணி கோவிலுக்கு சென்றனர். வழியில் இறைவன் சோமசுந்தரப்பெருமானே, நவரத்தின வியாபாரியாக அவர்கள் முன் தோன்றினார். அரண்மனையில் நடந்ததை அவர்களிடம் கேட்டு அறிந்தார். பின்னர் புதிய மணிமகுடம் செய்வதற்காக விலை உயர்ந்த நவமணிகளை அவர்களிடம் கொடுத்தார். மேலும் அந்த மணிகளின் வரலாறு, குணம், குற்றங்கள், யார் எந்த மணியை அணிய வேண்டும் என்பதையும் எடுத்துச்சொன்னார். புதிய மகுடத்தை சூட்டி இந்த குமாரனை அபிடேகபாண்டியன் என்று அழையுங்கள் என கூறி மறைந்தார்.

அமைச்சர்கள் மகிழ்ச்சி அடைந்து திரும்பிச்சென்றனர். அதன்பின் திருடப்பட்ட செல்வங்களும், மணிமகுடமும் மீண்டும் கிடைக்கப்பெற்றன. அபிடேகபாண்டியனுக்கு மகுடம் சூட்டப்பட்டது. செங்கோல் வழுவாமல் ஆட்சி புரிந்தான். மக்கள் நலமுடன் வாழ்ந்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று இரவில் சாமி கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி பாண்டிய வேளாளர் தெரு, மேலமாசி வீதி, மேல, வடக்கு கீழ ஆவணி மூலவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 
Tags:    

Similar News