ஆன்மிகம்

கள்ளழகர் கோவிலில் முப்பழ உற்சவ விழா

Published On 2018-06-30 05:52 GMT   |   Update On 2018-06-30 05:52 GMT
மதுரையை அடுத்துள்ள அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் முப்பழ உற்சவ விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
108 வைணவ திருத்தலங்களில் சிறப்பம்சம் பொருந்தியதும், திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி புகழ்ந்து பெருமை படைத்ததுமானது அழகர்கோவில். இங்கு வற்றாத புனித தீர்த்தமான நூபுரகங்கையுடன் அருள்பாலித்து வருவது கள்ளழகர் கோவிலாகும். இங்கு ஆண்டு முழுவதும், மாதந்தோறும் ஒவ்வொருவிதமான திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதில் முக்கிய அம்சமாக கருதப்படும் திருவிழாக்களில் ஆண்டு தோறும் ஆனி மாதம் நடைபெறும் முப்பழ உற்சவ விழாவும் ஒன்று. இந்தாண்டுக்கான முப்பழ உற்சவ விழா நேற்று கள்ளழகர் கோவிலில் நடந்தது. அதில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து மா, பலா, வாழை ஆகிய முப்பழங்களும் ஒருசேர ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் பெருமாளுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து நெய்வேத்தியம் செய்யப்பட்டது. இதில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இதேபோல இந்த கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலிலும் முப்பழ உற்சவ விழா நடந்தது. கோவில்களில் நடைபெற்ற இந்த விழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக முப்பழங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து உள்பட கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செயதிருந்தனர்.

Tags:    

Similar News