ஆன்மிகம்

கடந்த வாரம் 3 நாட்கள் வி.ஐ.பி. தரிசனம் ரத்து: திருப்பதியில் கூடுதலாக 7 ஆயிரம் பக்தர்கள் வழிபாடு

Published On 2017-04-19 10:32 GMT   |   Update On 2017-04-19 10:32 GMT
கடந்த வாரம் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக வந்ததால், இலவச தரிசன பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வி.ஐ.பி. தரிசனம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

திருமலை, ஏப்.19-

திருமலையில் உள்ள அன்னமயபவனில் தேவஸ்தான அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு கலந்து கொண்டு பேசினார்.

கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக வந்ததால், இலவச தரிசன பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வி.ஐ.பி. தரிசனம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால், கோவிலில் இலவச தரிசனத்தில் 7 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக வழிபட்டனர். மேலும் 300 ரூபாய் டிக்கெட்டிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்காக பரிசு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 80 ஆயிரம் பக்தர்களும், சனிக்கிழமை 93 ஆயிரம் பக்தர்களும், ஞாயிற்றுக்கிழமை 96 ஆயிரம் பக்தர்களும் சாமி தரிசனம் செய்துள்ளனர். வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தேவஸ்தான சூப்பிரண்டு என்ஜினீயர் சுதாகர்ராவ், துணை அதிகாரிகள் கோதண்டராமாராவ், ராஜேந்திரா, வரவேற்பு அதிகாரிகள் ஹரேந்திரநாத், ஜான்சி, பறக்கும்படை அதிகாரிகள் ரவீந்திராரெட்டி, விமலகுமாரி, தோட்டத்துறை அதிகாரி சீனிவாஸ், அன்னதானத்திட்ட அதிகாரிகள் செஞ்சுலட்சுமி, சாஸ்திரி மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News