ஆன்மிகம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா: பக்தர்கள் குவிந்தனர்

Published On 2017-01-11 13:56 IST   |   Update On 2017-01-11 13:56:00 IST
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான, ஆருத்ரா தரிசனம் இன்று மாலை நடக்கிறது.
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் 9-வது நாளான நேற்று தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர் கீழவீதியில் உள்ள தேர் நிலை திடலை அடைந்தது.

அதைத்தொடர்ந்து சிவகாமசுந்தரி அம்மன், நடராஜருக்கு 21 முறை தீபாராதனை நடந்தது. பின்னர் நடராஜர், சிவகாம சுந்தரி அம்மன் ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு இரவு 7 மணிக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியும், 10-வது நாள் திருவிழாவுமான ஆருத்ரா தரிசனம் இன்று மாலை நடக்கிறது. ஆருத்ரா தரிசனத்தையொட்டி இன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி அம்மனுக்கும், நடராஜருக்கும் மகா அபிஷேகம் நடந்தது.

அதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், 12 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது.

இன்று மாலை ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. நடராஜரின் ஆருத்ரா தரிசனத்தை காண காலை முதலே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நாளை(வியாழக்கிழமை) இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதியுலா காட்சியும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தெப்பல் உற்சவமும் நடை பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

Similar News