வழிபாடு

திருமங்கை ஆழ்வார் எழுந்தருளிய காட்சி

நாங்கூரில் இன்று 11 பெருமாள் கருட சேவை உற்சவத்தையொட்டி எழுந்தருளிய திருமங்கை ஆழ்வார்

Published On 2023-01-22 06:05 GMT   |   Update On 2023-01-22 06:05 GMT
  • கருட சேவை உற்சவம் இன்று இரவு நடக்கிறது.
  • மேளம் தாளம் முழங்கிட திரளான பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டார்.

சீர்காழி அருகே நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் 11 பெருமாள் கருட சேவை உற்சவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது. இதில் 11 பெருமாள்களைப்பற்றி திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்கள் பட்டாச்சாரியார்களால் பாடப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெறும். இதுவே கருட சேவை விழாவாகும். இந்த விழாவில் பங்கேற்பதற்காக குமுதவல்லி நாச்சியார் சமேத திருமங்கை ஆழ்வார் குமுதவல்லி திருநகரி கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவிலில் இருந்து நேற்று அதிகாலை மேளம் தாளம் முழங்கிட திரளான பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டார்.

காலை நேரடியாக திருமங்கையாழ்வார் அவதரித்த திருக்குரவலூர் கிராமத்திற்கு வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து அவர் உக்கிர நரசிம்ம பெருமாள் கோவிலில் எழுந்தருளினார். அப்போது கோவில் பட்டாச்சாரியார் பார்த்தசாரதி தலைமையில் வேத மந்திரங்கள் முழங்கிட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நரசிம்மரை வழிபட்ட பின்னர் மங்கை மடம் வீர நரசிம்ம பெருமாள் கோவில், காவலம்பாடி கண்ணன் கோவில், திருமேனி கூடம் வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்ற ஆழ்வார் மேல்நாங்கூர் மஞ்ச குளிமண்டபத்தில் எழுந்தருளி உள்ளார். அங்கு அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன

இதனை அடுத்து நாங்கூர் பகுதிக்கு வருகை தந்த திருமங்கையாழ்வாருக்கு பட்டாசுகள் வெடித்து பக்தர்கள் வரவேற்றனர். பின்னர் நாங்கூர் பகுதியில் உள்ள 6 பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபட்ட பின்னர், இன்று நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார். இதில் நாகை மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், கிராம பொது நல சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

11 பெருமாள் கருட சேவை உற்சவ ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News