தலைப்புச்செய்திகள்
சாந்தோம் ஆலயத்தில் ராட்சத கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்

களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் இன்றிரவு சிறப்பு பிரார்த்தனை

Published On 2021-12-24 13:03 IST   |   Update On 2021-12-24 13:03:00 IST
இன்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை வரை கிறிஸ்துமஸ் வழிபாடுகள் ஆலயங்களில் நடக்கின்றன. கத்தோலிக்க திருச்சபைகளில் நள்ளிரவில் தொடங்கும் வழிபாடு அதிகாலை 2 மணி வரை நடைபெறும்.
சென்னை

ஏசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு நிகழ்ச்சிகள் மிக எளிமையாக கொண்டாடப்பட்டன. இந்த வருடம் தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால் வழிபாடு நடத்துவதற்கு தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதாலும் விமரிசையாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.

டிசம்பர் மாதம் தொடக்கத்திலேயே வீடுகளில் நட்சத்திரங்களை தொங்கவிட்டும், குடில்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்தும் பண்டிகை கொண்டாட ஆயத்தமானார்கள்.

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன. அனைத்து ஆலயங்களும் அலங்கார மின் விளக்குகளால் நேற்று இரவு முதலே அலங்கரிக்கப்பட்டன.

இன்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை வரை கிறிஸ்துமஸ் வழிபாடுகள் ஆலயங்களில் நடக்கின்றன. கத்தோலிக்க திருச்சபைகளில் நள்ளிரவில் தொடங்கும் வழிபாடு அதிகாலை 2 மணி வரை நடைபெறும்.

தென் இந்திய திருச்சபை ஆலயங்கள், மெத்தடிஸ்ட், ஆர்க்காடு லூத்ரன், பெந்தேகோஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ திருச்சபைகளில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு வழிபாடு தொடங்கி, காலை 6, 7 மணி வரை நடைபெறும்.

சென்னையில் சாந்தோம் தேவாலயம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.ஆலயத்தின் வெளிபுறமும், உள்புறமும் விதவிதமான அலங்காரங்கள் செய்யப் பட்டு இருந்தன.

சென்னை- மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி கிறிஸ்துமஸ் சிறப்பு நற்செய்தி வழங்குகிறார்.

இதேபோல பெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி ஆலயம், பாரிமுனை அந்தோணியார் ஆலயம், பரங்கிமலை மாதா ஆலயம், பெரம்பூர் லூர்துமாதா ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கத்தோலிக்க திருச்சபை ஆலயங்களில் இன்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

இதேபோல சி.எஸ்.ஐ. கதிட்ரல் பேராலயம், சூளை தூய பவுல் ஆலயம், சிந்தாதரிப்பேட்டை சியோன் ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி, டவுட்டன் ஹார்வுட்ரா, தூய ஆன்ட்ரூஸ், தக்கர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் அதிகாலை நடக்கிறது.

கதிட்ரல் பேராலயத்தில் சி.எஸ்.ஐ. சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்குகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி கொட்டும் பனி மற்றும் குளிரிலும் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. இதில் பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் உற்சாகமாக பங்கேற்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் வழிபாடு முடிந்ததும், ஒருவருக்கொருவர் சமாதானத்தை தெரிவிக்கும் வகையில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.

தற்போது ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருவதால், ஆலயங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. அனைவரும் முகக்கவசம் அணிந்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஆலயங்களும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

வழிபாட்டுக்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தவும் கிருமிநாசினி நுழைவாயிலில் வைக்கப்படுகின்றன.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்று இரவு முதல் முக்கிய ஆலயங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Similar News