கோவில்கள்

திருவலம் வில்வநாதேஸ்வரர் கோவில்

Update: 2022-06-20 04:59 GMT
  • இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் விநாயகர், ‘கனி வாங்கிய பிள்ளையார்’ என்று அழைக்கப்படுகிறார்.
  • திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற தலம் இது.

நாரதர் கொடுத்த ஞானப் பழத்தால் விநாயகப் பெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும் மோதல் ஏற்பட்டது. அவர்களுக்குள் ஏற்பட்ட இந்த மோதலை தவிர்ப்பதற்காக அவர்கள் இருவருக்கும் போட்டி ஒன்று வைக்க முடிவானது. அதன்படி 'உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கே அந்த ஞானப் பழம்' என்று சிவபெருமானும், பார்வதியும் அறிவித்தனர்.

முருகப்பெருமானோ, 'இதோ! ஒரு நொடியில் உலகத்தைச் சுற்றி வருகிறேன்' என்று கூறிவிட்டு தன் வாகனமான மயிலில் ஏறி உலகத்தைச் சுற்றி வரப் புறப்பட்டுச் சென்று விட்டார்.

விநாயகப்பெருமான், ஞானத்தை வடிவமாகக் கொண்டவன் என்பதால் அவரது சிந்தனை பரவிவிரிந்ததாக இருந்தது. அவர் நாரதரிடம் சென்று, 'நாரதரே! உலகம் என்றால் என்ன?, அம்மையப்பன் என்றால் என்ன?' என்ற வினா எழுப்பினார்.

அதற்கு நாரதர், 'உலகம் தான் அம்மையப்பன், அம்மையப்பன் தான் உலகம்' என்று பதிலளித்தார்.

இதையடுத்து சிவ பெருமானையும், பார்வதிதேவியையும் வலம் வந்து ஞானப்பழத்தை பெற்று விட்டார் விநாயகப்பெருமான். தாய், தந்தையரை உலகமாக பார்த்தார் விநாயகர். உலகத்திற்குள் தாய், தந்தையரைப் பார்த்தார் முருகப்பெருமான்.

இந்த புராண வரலாறு நடைபெற்றது திருவல்லம் என்னும் திருத்தலம் என்று புராணக் குறிப்பு தெரிவிக்கிறது. அம்மையப்பனை வலம் வந்து ஞானப்பழம் பெற்ற திருத்தலம் என்பதாலேயே, இந்த தலத்திற்கு 'திருவலம்' என்று பெயர் வந்ததாக பெயர்க் காரணம் கூறப்படுகிறது.

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் விநாயகர், 'கனி வாங்கிய பிள்ளையார்' என்று அழைக்கப்படுகிறார். இவ்வாலயம் இருக்கும் பகுதி ஒரு காலத்தில் வில்வ மரங்கள் நிறைந்த வனமாக இருந்துள்ளது. தினமும் இங்கு ஓரிடத்தில் பசு ஒன்று, ஒரு புற்றின் மீது பால் சொரிந்து வந்தது. நாளடைவில் புற்று கரைந்து, அதற்குள் இருந்து சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. சிவலிங்கம் இருந்த பகுதியிலேயே ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இத்தல ஈசன் 'வில்வநாதேஸ்வரர்' என்னும் திருநாமம் கொண்டுள்ளார். அம்பாள் வல்லாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.

திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற தலம் இது. இத்தல ஈசனை, மகாவிஷ்ணு வழிபட்டுள்ளார். இங்கு சந்திர மவுலீஸ்வரர், சகஸ்ர லிங்கம், வலம்புரி விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பாதாளேஸ்வரர், பைரவர் எனப் பல இறை சன்னிதிகள் உள்ளன. ஆதி வில்வநாதர் சன்னிதி தனிக் கோவிலாக அமையப்பெற்றுள்ளது. இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை, அருணகிரிநாதர் தனது திருப்புகழில் புகழ்ந்துள்ளார். சஷ்டி, கிருத்திகை நாட்களில் இந்த முருகப்பெருமானை பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், செல்வ வளமும் நற்புகழும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இவ்வாலயத்தில் தட்சிணாமூர்த்தியின் சீடனான சனகருக்கு ஜீவ சமாதி உள்ளது. சிவானந்த மவுனகுரு சுவாமிகள், இத்தலத்தின் பலா மரத்தின் அடியில் தவம் இருந்து ஈசனின் அருள் பெற்றுள்ளார்.

பொதுவாக சிவாலயங்களில், சிவலிங்கத்தை நோக்கி இருக்கும் நந்தி, இந்தக் கோவிலில் சிவலிங்கத்தை நோக்காமல், வாசலை நோக்கியபடி கிழக்கு பார்த்த வண்ணம் உள்ளது. இத்தல ஈசனுக்கு, அருகில் உள்ள 'கஞ்சன் கிரி' என்ற மலையில் இருந்து அபிஷேக நீர் எடுத்து வருவது வழக்கம். ஒருமுறை அபிஷேக நீர் எடுக்க வந்த சிவனடியாரை, மலையில் வசித்து வந்த 'கஞ்சன்' என்ற அசுரன் தடுத்தான். சிவனடியார், ஈசனை வேண்டினார். ஈசன் நந்தியை அனுப்பி அசுரனை அழித்தார். மீண்டும் யாராவது வருகிறார்களா? என்பதைப் பார்ப்பதற்காகத்தான், நந்தி பகவான் கிழக்கேயுள்ள அந்த மலையை பார்த்த வண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது.

இத்தலத்தில் உள்ள கனி வாங்கியப் பிள்ளையார் தனது துதிக்கையில் ஞானப்பழத்தை ஏந்தியபடி, வடக்கு பார்த்த வண்ணம் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த விநாயகரை வழிபட்டால், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். வேலைவாய்ப்பு மிக எளிதில் கிட்டும். திருமண தடைகள் அகலும். குழந்தைப்பேறு வாய்க்கும். கடன் தொல்லைகள் விலகும்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டைக்கு அருகில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் சாலையில் 116 கிலோமீட்டர் தூரத்தில் திருவலம் இருக்கிறது.

Tags:    

Similar News