கோவில்கள்

1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில்- கோயம்புத்தூர்

Published On 2023-06-05 08:19 GMT   |   Update On 2023-06-05 08:19 GMT
  • இங்குள்ள குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமானது.
  • இந்தத் திருக்கோவில் எமனின் சாபம் நீக்கிய சிறப்பு வாய்ந்த தலம் என்ற சிறப்பு பெற்றது.

அபிஷேக பிரியரான சிவனுக்கு, கோவில்களில் விதவிதமான அபிஷேகம் செய்து பூஜை செய்வர். சிவன் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் சில தலங்களில் மூலிகையால் தைலாபிஷேகம் செய்வர். ஆனால், கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் உள்ள காலகாலேஸ்வரர் கோவிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

மார்க்கண்டேயரின் ஆயுளை முடிக்கச்சென்ற எமதர்மன், தவறுதலாக சிவன் மீது பாசக்கயிறை வீசினான். கோபம் கொண்ட சிவன், பணியை சரியாக செய்யாத எமனின் பதவியை பறித்து சாதாரண மனிதனாக பிறக்கும்படி செய்துவிட்டார். பூலோகம் வந்த எமன் விமோசனம் பெறுவதற்காக பல தலங்களில் சிவனை வழிபட்டு வந்தார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது, சிவ வழிபாடு செய்ய எண்ணினார். ஆனால், இங்கு லிங்க வடிவம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, மணலால் லிங்கம் செய்ய நினைத்து, ஒரு குச்சியால் தரையை தோண்டினார்.

அப்போது, நுரை பொங்கியது. மணலையும், நுரையையும் சேர்த்து அவர் லிங்கமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். சிவன் அவருக்கு காட்சி தந்து, பறிக்கப்பட்ட எமலோக தலைவர் பதவியை மீண்டும் கொடுத்தார். காலனுக்கு (எமன்) காலம் (வாழ்க்கை, பதவி) கொடுத்தவர் என்பதால் இத்தலத்து ஈசன், காலகாலேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இத்தலத்தில் சுவாமி, மணல் லிங்கமாக இருப்பதால், அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

கோவை கோவில்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சுமார் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமானது. இந்த கோவில் கொங்கு மண்டல குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

கோவை மாநகரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோவில் பாளையம் என்ற சிற்றூர். பேருந்து நிலையத்தில் இருந்து சில நிமிட நடை தூரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில்.

தொன்மை வாய்ந்த இந்தத் திருக்கோவில் எமனின் சாபம் நீக்கிய சிறப்பு வாய்ந்த தலம் என்ற சிறப்பு பெற்றது . மேலும் இங்குள்ள குருபகவான் இந்தக் கோவிலின் சிறப்பு. இந்தத் தலம் அதி சிறப்பு வாய்ந்த குரு பரிகார ஸ்தலம் ஆகும். ஆளுயர குரு பகவான் சிலை கண்டதும் நம் மனதில் சொல்ல இயலாத அமைதியை ஏற்படுத்தும் . ஒவ்வொரு குருப் பெயர்ச்சியும் இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடபடுகிறது.

இங்கு சூரியன், சந்திரன், குரு, சனீஸ்வரர் என தனித்தனி சன்னதி அமைந்திருக்கிறது.

முகவரி

அருள்மிகு காலகாலேஸ்வரர் கோவில்,

கோவில்பாளையம்,

கோயம்புத்தூர் மாவட்டம்.

Tags:    

Similar News