கோவில்கள்

900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுந்தர நாயகி சமேத அக்னீஸ்வரர் கோவில்

Published On 2022-08-11 06:05 GMT   |   Update On 2022-08-11 06:05 GMT
  • பரணி நட்சத்திரக்காரர்களுக்கு இந்த கோவில் சிறந்த பரிகார தலமாகும்.
  • மேற்கு திசைநோக்கி அமைந்த சிவாலயங்களில் இந்த கோவிலும் ஒன்று.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாறு அருகே நல்லாடை கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுந்தர நாயகி சமேத அக்னீஸ்வரர் கோவில் உள்ளது.

பரணி நட்சத்திர பரிகார தலமான இந்த கோவிலில் அக்னீஸ்வரருக்கு மேற்கு திசை நோக்கியும், சுந்தரநாயகிக்கு தெற்கு திசை நோக்கியும் சன்னதிகளுக்கு செல்ல தனித்தனியாக இரண்டு வழிகள் உள்ளன. இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோவிலில் உள்ள நல்லாடை அக்னீஸ்வரர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நல்வாழ்வை அளிப்பார் என்பது ஐதீகம்.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரருக்கு வடபகுதியிலும், பரசலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்துக்கு தென்புறத்திலும், இந்த கோவில் அமைந்து உள்ளது.

சோழவள நாட்டை பல மன்னர்கள் ஆண்டு வந்தபோதும் இரண்டாம் குலோத்துங்க சோழரின் புதல்வரான இரண்டாம் ராஜராஜ சோழன் கி.பி. 1146-ம் ஆண்டு முதல் 1163-ம் ஆண்டு வரை இந்த பகுதியை ஆட்சி செய்து வந்துள்ளார். இதனால் நல்லாடை என தற்போது அழைக்கப்படும் இந்த ஊர் முற்காலத்தில் 'ஜெயங்கொண்ட சோழ வளநாட்டில் நல்லாடை மங்கள குலோத்துங்க சோழபுரம்' என்று அழைக்கப்பட்டு உள்ளது.

இந்த கோவிலின் கருவறை கருங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. சிவபெருமானின் மனைவியான உமையவளின் சாபம் பெற்று ஒளியை இழந்த அக்னிபகவான் சிவனை போற்றி பணிந்து மனமுருகி வேண்டினார். அப்போது சிவபெருமான் எழுந்தருளி இத்தலத்தின் தெற்கே இருக்கும் தீர்த்தத்தில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடினால் இழந்த ஒளியை மீண்டும் பெறுவாய் என்று கூறினார். அதன்படி இந்த கோவில் குளத்தில் நீராடி அக்னி பகவான் இழந்த ஒளியை மீண்டும் பெற்றதால் இந்த கோவில் குளம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இங்குள்ள இறைவன் அக்னீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

முற்காலத்தில் இந்த கோவிலில் சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திரத்தில் இயற்கையின் சீற்றம் குறைய தீர்த்தவாரியும், வைகாசி விசாக விழாவும், மார்கழி மாதத்தில் திருவாதிரை விழாவும், திருவாதிரை விழாவின்போது மாணிக்கவாசக பெருமானை அலங்கரித்து விழாவாக ஊர்வலம் நடத்துவதும் வழக்கம்.

மிருகண்ட மகரிஷி தனக்கு குழந்தை வரம் வேண்டி இத்தலத்துக்கு வந்து யாகம் செய்வதற்காக பொருள் உதவியை விசித்திர வீரசோழனிடம் கேட்டார். உடனே மன்னரும் மனம் மகிழ்ந்து மிருகண்ட மகரிஷிக்கு பொருள் உதவி அளித்தார். இந்த கோவிலின் கிழக்கு பகுதியில் குண்டம் அமைத்து மாசி மாத மகா சிவராத்திரி யாகத்தை மிருகண்ட மகரிஷி தொடங்கினார். அப்போது நான்காம் கால பூர்ணாஹூதி நிறைவு நேரத்தில் சாலிய மாமுனிவர் என்ற சிவனடியார் ஒரு நவரத்தின பரிசுத்த பட்டாடை ஒன்றை மன்னரிடம் அளித்தார். அதை ஏற்ற மன்னர் ரிஷிகளிடம் கொடுத்தார். ரிஷி பட்டாடையை பூர்ணாஹூதியுடன் ஹோமத்தில் செலுத்த அதைக்கண்ட சாலிய மாமுனிவர் பட்டாடையை தீயிலிட்டதைக் கண்டு மனம் வருந்தினார்.

அப்போது மிருகண்ட மகரிஷி, 'சாலிய மாமுனிவரைப் பார்த்து பக்தா... மனம் வருந்தாதே! நீ கொடுத்த ஆடையை அக்னிக்கு அளிக்கவில்லை. இறைவனுக்கே அளித்தோம்'. நாளை இறைவனின் திருமேனியில் இந்த ஆடையை நீ காண்பாய் என கூறினார். அதன்படி இந்த ஆலயத்தில் உள்ள ஈசனின் திருமேனியில் தீயிலிட்ட ஆடை நல்ஆடையாக இருந்தது. இதைக்கண்டு மனம் மகிழ்ந்த முனிவர் 'அன்பருக்கு அன்பனே,அருள் சுரக்கும் திருநல்லாடை தரித்த நாதரே' என்று மகிழ்ச்சி பொங்க பாடினார். இந்த யாகத்துக்கு பின்னால் மிருகண்ட மகரிஷிக்கு மார்க்கண்டேயர் மகனாக பிறந்தார். மிருகண்ட மகரிஷி குண்டம் வைத்த அந்த இடம் இன்றும் குண்டம் குளம் என்று வழக்கத்தில் உள்ளது.

இந்த யாகம் நிறைவு பெற்று மிருகண்ட மகரிஷியின் எண்ணம் நிறைவேறிய நாள் பரணி நட்சத்திர தினம் என்பதால் இந்த ஆலயம் பரணி நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார தலமாக போற்றப்படுகிறது.

கணவன்-மனைவி ஒற்றுமைக்கு வழிபட வேண்டிய தலம்

நல்லாடை அக்னீஸ்வரர் கோவில் சிறப்புகள் வருமாறு:-

* மார்கண்டேயனை பெற மிருகண்ட மகரிஷி தவமிருந்த தலம் இந்த கோவில் ஆகும்.

* சோழ மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலமாகவும் இந்த கோவில் உள்ளது.

* அர்த்தநாரீஸ்வரர் அனைத்து ஆலயங்களிலும் நின்ற கோலத்தில் இருப்பார். ஆனால் இந்த கோவிலில் மட்டும் அமர்ந்த கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர் உள்ளார்.

* கணவன்-மனைவி ஒற்றுமைக்கு வழிபட வேண்டிய தலம்.

* மேற்கு திசைநோக்கி அமைந்த சிவாலயங்களில் இந்த கோவிலும் ஒன்று.

பரணி நட்சத்திரத்தில் தோஷ பரிகார சிறப்பு யாக பூஜை

இந்த கோவிலில் மூலவராக அக்னீஸ்வரர் சுந்தரநாயகியும் மற்றும் விநாயகர், முருகன், லெட்சுமி, சரஸ்வதி, மகாவிஷ்ணு, சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சனீஸ்வரர், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர் ஆகிய சாமிகள், தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். தல விருட்ச மரமாக வன்னிமரம் உள்ளது. நல்லாடை அக்னீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பரணி நட்சத்திரத்தில் தோஷ பரிகார சிறப்பு யாகபூஜை நடைபெறுகிறது.

கோவிலுக்கு செல்வது எப்படி?

நலவாழ்வு அருளும் நல்லாடை அக்னீஸ்வரர் கோவில் மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோவில், பரசலூர், திருவிளையாட்டம் வழியாக காரைக்கால் மார்க்கத்தில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோவில், பரசலூர், திருவிளையாட்டடம் வழியாகவும், பொறையாரில் இருந்து சங்கரன்பந்தல் வழியாகவும் சென்றும் நல்லாடை கிராமத்தை அடைந்து இறைவனை தரிசிக்கலாம்.

இரண்டாம் ராஜராஜ சோழனால் 900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டு கடந்த 1999-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந் தேதி குடமுழுக்கு நடந்தது. தற்போது 22 ஆண்டுகள் கடந்து மீண்டும் குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி பாலாலயம் செய்யப்பட்டு தற்போது கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது.

Tags:    

Similar News