கோவில்கள்

நோய்நொடி தீர்க்கும் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கோவில்- ராமநாதபுரம்

Published On 2023-07-25 06:57 GMT   |   Update On 2023-07-25 06:57 GMT
  • இந்த திருத்தலம் தேவாரப் பாடல் பெற்றது.
  • இத்திருத்தலத்தைச் சுற்றி 64 வகையான மூலிகைகளும் 54 வகையான மலர்களும் உள்ளன.

மூலவர்:ஆதிரத்தினேசுவரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர்

தாயார்:சினேகவல்லி, அம்பாயி அம்மை

தல விருட்சம்:வில்வம்

தீர்த்தம்:சூரிய புஷ்கரிணி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ளது திருவாடானை. இங்குள்ள ஆதிரெத்தினேஸ்வரர் திருத்தலம் தேவாரப் பாடல் பெற்றது. தேவாரப் பாடல்களில் 120 பாடல்கள் அதிபலன் கூடியவை. அவற்றில் முக்கியமானது திருஞானசம்பந்தர் பாடிய திரு வாடானை திருப்பதிகம். திருஞான சம்பந்தர், சேக்கிழார் பெருமான், அருணகிரிநாதர், குமரகுருபரர், வள்ளலார் என அத்தனை பேராலும் பாடல்பெற்ற திருத்தலம் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் திருத்தலம். பிரம்மாவின் வழிகாட்டுதல்படி நீலரத்தின மணியால் சூரியன் ஆதிரெத்தினேஸ்வரருக்குப் பூஜை செய்ததால் இதை ஆதிரெத்தினபுரம் என்றும் சொல்கிறது புராணம்.

இத்திருத்தலத்தைச் சுற்றி 64 வகையான மூலிகைகளும் 54 வகையான மலர்களும் உள்ளன. மணிமுத்தாறு, சூரிய தீர்த்தம், வருண தீர்த்தம், அகத்திய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், வாருணி தீர்த்தம், காமதேனு தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தங்களும் திருக்கோயிலைச் சுற்றிலும் உள்ளன. பெரும்பாலும் திருக்கோயில்களில் ஒரே ஒரு தல விருட்சம் தான் இருக்கும். ஆனால், ஆதிரெத்தினேஸ்வரருக்கு பாரிஜாதம், குருக்கத்தி, கடம்பம், வில்வம் ஆகிய நான்கு தல விருட்சங்கள்.

இறைவன், இறைவி

இங்குள்ள இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் இறைவி சினேகவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர். இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக சூரியனால் உருவாக்கப்பட்ட சூரிய புஷ்கரிணி(நீராவி தீர்தம்) தீர்த்தம் கோயிலுக்கு உள்ளேயும், கோவிலுக்கு முன்பு வருணன் தீர்த்தமும் (தெப்பகுளம்), கோவிலுக்கு மேற்கே வாருணி தீர்த்தமும் (மங்கல நாதன் குளம்), கோவிலுக்கு தெற்கே அகத்தியர் தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், மற்றும் மணிமுத்தாறு(மணிமுத்தா நதி) என்று ஆறு தீர்த்தங்கள் உள்ளன.

வருண பகவானின் மகன் வாருணி சாப விமோசனம் பெற்று முனிவராக பிறப்பெடுத்து உருவான இடம். வாருணியின் மகனே நவகிரகங்களில் ஒருவரான சுக்கிரன்.இங்குள்ள ஆதி ரத்தின லிங்கத்தை பிரதிஷ்டை செய்தவர் சூரியபகவான், மகாபாரத காலத்திற்கு முன்பு கிருஷ்ணர் ராமராக அவதாரம் எடுத்த பொழுது ராமர் ராவணனுடன் போர் செய்ய போவதற்கு முன்பு இங்குள்ள இறைவனை வணங்கி சிவபெருமானிடம் அதற்கான உபதேசத்தை பெற்றார்.

ராமாவதார காலத்தில் இறைவனிடமிருந்து தான் கற்ற இந்த உபதேசத்தை தனது கிருஷ்ண அவதாரத்தின் போது கீதையாக, கிருஷ்ணன் மகாபாரதப் போரில் அர்ஜுனனுக்கு உபதேசித்தார். மார்க்கண்டேயர், காமதேனு, சூரியன், அகத்தியர், திருஞானசம்பந்தர் ஆகியோர் அவரவர் வாழ்ந்த காலங்களில் பல யுகங்களில் தொடர்ந்து இங்குள்ள இறைவனை பலர் வழிபட்டு வந்துள்ளனர்.

நீலரத்தினக்கல் லிங்கம்

என்றும் பதினாறாய் வாழும் வரம் பெற்ற மார்க்கண்டேயன் தனது பெற்றோருடன் வந்து இங்கு தவம் செய்ததாக சொல்லப்படுகிறது. இங்குள்ள ஆதிரெத் தினேஸ்வரர் லிங்கம் நீலரத்தினக் கல்லால் வடிக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பு. தேவி, இங்கே சிநேக வல்லி அம்மையாக வீற்றிருக்கிறாள்.

சாபம் நீங்கிய தலம்

துர்வாச முனிவரால் சபிக்கப்பட்ட தனது மைந்தன் வாருணிக்கு சிவபெருமானிடம் சாப விமோசனம் கேட்கிறார் வருணன். 48 நாட்கள் ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் உள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி ஆதிரெத்தினேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வர சாபம் நீங்கும் என்று உபாயம் சொன்னார் சிவபெருமான். அதுபடியே வாருணிக்கு சாபம் நீங்கியதால் இத்திருத்தலத்தை நோய்நொடி தீர்க்கும் திருத்தலம் இன்றைக்கும் துதிக்கப்படுகிறது. இங்குள்ள தலவிருட்சங்களின் வேரிலிருந்து திருமண் எடுத்து உடம்பில் பூசிக்கொண்டாலும் தண்ணீரில் கலந்து பருகினாலும் நோய் நொடிகள் பறந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

விழாக்கள்

இக்கோவிலில் வைகாசி விசாகத்தில் வசந்த விழா, ஆடிப்பூரத் திருவிழா, நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி உள்ளிட்ட பலவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன

Tags:    

Similar News