கோவில்கள்
அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோவில்

அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோவில் - திருவாடானை

Update: 2022-06-04 01:37 GMT
ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், “ஆதிரத்தினேஸ்வரர்” எனப் பெயர் வந்தது. இத்தலம் சுக்கிரனுக்குரிய சிறப்புத்தலம்.
மூலவர்     -  ஆதிரத்தினேஸ்வரர்
அம்மன்     -  சினேகவல்லி
தல விருட்சம்  -  வில்வம்
தீர்த்தம்     -  சூரிய புஷ்கரணி, க்ஷீர குண்டம், வருண தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம்
பழமை     -  1000 வருடங்களுக்கு முன்

வருணனுடைய மகன் வாருணி. ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது வாருணியுடன் வந்த நண்பர்கள் ஆசிரமத்தில் உள்ள பூ, பழங்களை வீசி எறிந்து துர்வாச முனிவரின் தவத்தை கலைத்தனர். துர்வாச முனிவர் கோபத்துடன், “வாருணி! நீ வருணனின் மகனாக இருந்தும், பொருந்தாத காரியம் செய்து விட்டாய். எனவே பொருந்தாத தோற்றமான, ஆட்டின் தலையும் யானையின் உடலுமாக மாறுவாய்” என சாபமிட்டார். ஆடு+ஆனை என்பதால் இத்தலம் வடமொழியில் “அஜகஜபுரம்” ஆனது. தன் தவறை உணர்ந்தான் வாருணி. இவனது நிலை கண்ட மற்ற முனிவர்கள், சூரியனுக்கு ஒளி கொடுத்த தலம் பாண்டி நாட்டில் உள்ளது. அத்தலத்து இறைவனை வழிபாடு செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று வாருணியிடம் கூறினர். அதன்படி வாருணியும் இத்தலத்தில் தன் பெயரால் குளம் அமைத்து தினமும் ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினார்.

இறைவனும் இவனது சாபம் நீக்கி, என்ன வரம் வேண்டும் எனக்கேட்க, “கலிகாலம் முடியும் வரை இத்தலம் என் பெயரால் விளங்க வேண்டும்” என வரம் பெறுகிறான். அத்துடன் “பெரியவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு தான் ஒரு உதாரணமாக இருக்க வேண்டும்” என்றும் கேட்கிறான். இறைவனும் அதற்கிசைந்து இத்தலத்தை “அஜகஜசேத்திரம்” ஆடு+ஆனை+புரம் என வழங்க அருள்புரிந்தார். இதுவே காலப்போக்கில் “திரு” எனும் அடைமொழியோடு “திருவாடானை” என ஆனது.

ஒவ்வொரு தலத்திலும் ஒன்று சிறப்புடையதாக இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூன்றுமே சிறப்புடையது. மூர்த்தி சுயம்புலிங்கமாக ஆதிரத்தினேஸ்வரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர் என்ற பெயர்கள் உண்டு.

அம்மன் சிநேகவல்லி, அன்பாயிரவல்லி. தீர்த்தம் சூரியபுஷ்கரணி, வருண, வாருணி, மார்க்கண்டேய, அகத்திய, காமதேனு தீர்த்தங்கள். அர்ஜுனன் வனவாசத்தின் போது பாசுபதாஸ்திரம் பெற்றபின் அதை எவ்விதம் உபயோகிப்பது என்று இறைவனிடம் கேட்க, அதற்கு இறைவன், “திருவாடனைக்கு வா சொல்லித் தருகிறேன்” என்றார். அதன்படி அர்ஜுனனும் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு, தெரிந்து கொள்கிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இங்குள்ள சோமாஸ்கந்தரை அர்ஜுனன் ஸ்தாபித்தான் என்பது ஐதீகம்.

ஒரு முறை சூரியனுக்கு தான் மிகவும் பிரகாசமுடையவன் என்ற கர்வம் ஏற்பட்டது. இறைவனின் சிரசில் சூரிய ஒளி பிரகாசிக்க நந்தியினால் அந்த ஒளி இழுக்கப்பட்டு, சூரியனுக்கு சுய ஒளி போய்விட்டது. மனம் வருந்திய சூரியன், நந்தியிடம் பரிகாரம் கேட்டார். “சுயம்பு மூர்த்தியாக திருவாடானையில் வீற்றிருக்கும் இறைவனை நீல இரத்தினக்கல்லில் ஆவுடை அமைத்து வழிபட்டால் சாபம் நீங்கும்” எனக் கூறினார். ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், “ஆதிரத்தினேஸ்வரர்” எனப் பெயர் வந்தது. இவர் மீது உச்சிக்காலத்தில் பாலபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சியளிப்பார். அம்மன் சிநேகவல்லி சுக்கிரனுக்குரிய அதிதேவதை ஆவார். இத்தலம் சுக்கிரனுக்குரிய சிறப்புத்தலம்.

பாண்டி நாட்டு பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்று. இத்தலத்திற்கு பாரிஜாதவனம் வன்னிவனம் வில்வ வனம் ஆதிரத்னேஸ்வரம் அஜகஜபுரம் பதுமபுரம் முத்திபுரம் என்பன வேறு பெயர்களாகும். கோயில் கோபுரம் மிக உயர்ந்தது 9 நிலை 130 அடி உயரம் கொண்டதாகும். இங்கு விநாயகர், முருகர், சூரியன், அறுபத்து மூவர், தட்சிணாமூர்த்தி, வருணலிங்கம், விசுவநாதர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நடராஜர் மாணிக்கவாசகர், பைரவர், சந்திரன், தண்டாயுதபாணி முதலிய சந்நிதிகள் உள்ளன. அகஸ்தியர், மார்க்கண்டேயர், காமதேனு இங்கு வழிபட்டு சிறப்பு பெற்றுள்ளனர்.

அருணகிரிநாதர் தமது திருப்புகழில் இத்தல முருகனை, “சிற்றின்பம் கலக்காமல் பேரின்ப நிலையில்” பாடியுள்ளார். சூரிய பூஜை நடக்கும் கோயில்களில் இதுவும் ஒன்று.

திருவிழா:

வைகாசி விசாகத்தில் வசந்த விழா 10 நாள், ஆடிப்பூரத்திருவிழா 15 நாள், நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி.

பிரார்த்தனை:

சுவாமி ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினால் முன் செய்த தீவினை நீங்கும். அம்மனுக்கு விசேஷ சுக்கிர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.

சுக்கிர திசை, புத்தி நடப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பானது.

நேர்த்திக்கடன்:

திருவண்ணாமலை, வைத்தீஸ்வரன் கோயில்களில் நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்கிறார்கள்.

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

இருப்பிடம் :

மதுரையிலிருந்து(100 கி.மீ) தொண்டி செல்லும் வழியில் திருவாடானை உள்ளது. சிவகங்கையில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ளது. காரைக்குடியிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. தேவகோட்டையிலிருந்து 10 கி.மீ கடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். மதுரை காரைக்குடி தேவகோட்டை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
Tags:    

Similar News