கோவில்கள்
கரூர் பசுபதீஸ்வரர் கோவில்

கரூருக்கு பெருமை தரும் சைவ, வைணவ கோவில்கள்

Published On 2022-05-25 04:07 GMT   |   Update On 2022-05-25 04:07 GMT
தென் திருப்பதி என்று பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடராமசாமி கோவில் கரூர் தாந்தோணி மலையில் சிறு குன்றின்மேல் அமைந்துள்ளது.
வரலாற்று புகழ்பெற்ற பழமையான சோழர்கால நகரம் கரூர். சோழர்களும், மதுரை நாயக்க மன்னர்களும், கடைசியாக ஆங்கிலேயரும் கரூரை ஆண்டனர். முற்காலத்தில் கரூர் தங்க நகை வேலைப்பாடுகளுக்கும் வைரம் பட்டை தீட்டுவதற்கும் வர்த்தக மையமாகவும், நகரமாகவும் விளங்கியுள்ளது. அந்த நாட்களில் ரோம் நகரில் இருந்து கரூரில் தங்கம் இறக்குமதியாகி உள்ளது. படைக்கும் கடவுளான பிரம்மா இங்குதான் தனது படைப்புத் தொழிலை தொடங்கினார் என்பது ஐதீகம். வடக்கே நாமக்கல், தெற்கே திண்டுக்கல், மேற்கே திருச்சி, கிழக்கே ஈரோடு என பல மாவட்டங்களை எல்லையாகக் கொண்டுள்ளது கரூர்.

கல்யாண வெங்கடராமசாமி கோவில்

தென் திருப்பதி என்று பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடராமசாமி கோவில் கரூர் தாந்தோணி மலையில் சிறு குன்றின்மேல் அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்தின் முக்கியமான கோவில்களில் இதுவும் ஒன்று. கரூர் நகரில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள இக்கோவிலுக்குப் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பர். அந்த அளவுக்கு இது தெய்வீகம் ததும்பும் ஆலயம்.

பசுபதீஸ்வரர் கோவில்

அதேபோல் புண்ணிய சிவத்தலங்கள் ஏழில் ஒன்று கரூர் பசுபதீஸ்வரர் கோவில். இந்தப் பெருமையைப் தேடித்தந்தது பசுபதீஸ்வரர் கோவில். இங்கு சிவபெருமான் ஐந்தடி உயர லிங்க வடிவில் சுற்றுச் சிற்பங்களுடன் பிரமாண்டமாக எழுந்தருளியுள்ளார். இந்த லிங்கத்தின் மீது மடி சொரியும் பசுவும் ரங்க மாதா சிற்பமும் சிறந்த வேலைப்பாடுகளுடன் தனித்தன்மை கொண்டதாக திகழ்கிறது.

மாரியம்மன் கோவில்

புகளுர் வேலாயுதம்பாளையம் குன்றில் உள்ள கோவிலில் சுப்ரமணியர் எழுந்தருளி உள்ளார். இது கரூருக்கு வடமேற்கில் அமைந்துள்ளது. கரூரின் இதயப் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் பெரும் புகழ்பெற்றது. இந்த அம்ம னுக்கு வருடா வருடம் மே மாதம் சாதி வேறுபாடின்றி அனைத்து மக்களும் கும்பம் எடுப்பார்கள். இந்த கும்பங்கள் கோவிலில் இருந்து அமராவதி ஆற்றுக்கு எடுத்து செல்லும் வண்ணமயமான காட்சி காண் போரை மெய்சிலிர்க்க வைக்கும். இறைவனுக்கு கும்பம் எடுப்பது தமிழர்களிடம் ஆதி முதல் தொடர்ந்து வரும் ஆன்மிகச்சிறப்பு.

சைவமும், வைணவமும் சம கால எழுச்சியுடன் கோவில் கொண்டுள்ள இடம் கரூர். பெருமாள், சிவன், அம்மன் கோவில்கள் கரூருக்கு என்றென்றும் பெருமை சேர்க்கும் தலங்கள் என்பதில் ஐயமில்லை. தொழில் நகரில் கால் பதிக்கும் யாரும் இந்த கோவில்களுக்கு சென்று தங்கள் தொழில் சிறந்து தளைத்தோங்க வேண்டிய பின்னரே தடம் பதித்த வர லாறும் உண்டு என்கிறார்கள் இங்கு வழிபட்டோர் பலர்.
Tags:    

Similar News