கோவில்கள்
திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில்

திருமண தடைகளை நீக்கும் திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில்

Published On 2022-01-22 01:16 GMT   |   Update On 2022-01-22 01:16 GMT
திருமணம் சார்ந்த அனைத்து தோஷங்களையும் நீக்கும் “திருப்பைஞ்ஞீலி” கோவில் பற்றியும், இந்த கோவிலில் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் இருக்கும் புகழ் பெற்ற மிகவும் பழமையான கோவில் தான் “திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோயில்”.”ஞீலி” என்றால் சாமானிய மனிதர்கள் உண்ண தகுதியற்ற இறைவனுக்கு மட்டுமே படைக்கப்படும் “கல்வாழை” எனப்படும் அறிய வகை வாழை மரத்தின் பழம். இந்த கல்வாழை மரம் தான் இந்த திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலின் “தல விருச்சம்” ஆகும். இங்கிருக்கும் வாழை மரங்கள் நிறைந்த தோட்டம் “ஞீலிவனம்” என அழைக்கப்படுகிறது. திருமண தடை மற்றும் திருமணம் காலதாமதம் ஆகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமணம் விரைவில் நடக்கச் செய்யும் சிறந்த பரிகார தலமாக இருக்கிறது.

புராணங்களின் படி இக்கோவிலில் “சப்த கன்னிமார்கள்” பார்வதி தேவியை குறித்து தவமியற்றிய போது, அவர்களுக்கு காட்சி தந்த பார்வதி தேவி, சப்த கன்னியர்களையும் இக்கோவிலிலேயே கல்வாழை எனப்படும் அதிசய வாழை வடிவில் இருந்து, வழிபடும் பக்தர்களின் குறைகளை தீர்க்குமாறு அருளினார். எனவே திருமண தடை மற்றும் கால தாமதம் ஆகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த தெய்வீக வாழைமரங்களுக்கு செய்யப்படும் பூஜை சடங்குகளால், சப்த கன்னியர்கள் ஆசீர்வாதம் கிடைக்க பெற்று திருமண தோஷம் நீங்குகிறது.

திருமணம் தடை மற்றும் தாமதம் ஆகும் ஆண் மற்றும் பெண் இந்த திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்று கிழமை தினங்களில் பரிகாரம் செய்ய செல்வது சிறந்தது. சீக்கிரம் திருமணம் நடக்க விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் திருமண தடை பரிகார பூஜைக்கான தொகையை செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். பின்பு கோவில் நிர்வாகத்தால் இப்பரிகார பூஜைகளை நியமிக்கபட்டுள்ள அர்ச்சகர்கள், வழிகாட்டிகள் நமக்கு கூறும் முறைப்படி பரிகார பூஜைகளை செய்ய வேண்டும். பூஜை முடிந்த பின்பு நமக்கு பரிகார பூஜைகளை செய்ய உதவி புரிந்த அர்ச்சகர்கள், வழிகாட்டிகளுக்கு தட்சணை அளிப்பது நல்லது. இந்த பூஜை சடங்குகளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணிக்குள்ளாக செய்து முடித்து விடுவது நல்லது.

பின்பு கோவிலின் தெய்வங்களான “திருப்பைஞ்சீலி நீலிவனநாதர், ஸ்ரீ விஷாலக்ஷி அம்பாளையும்” அர்ச்சனை செய்து வழிபட்டு, கோவில் பிரசாதங்களை வாங்கி கொள்ள வேண்டும். பின்பு நேரே நமது இல்லங்களுக்கு திரும்பி அக்கோவில் பிரசாதங்களை பூஜையறையில் வைத்து வழிபட்டு, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் குங்குமம், திருநீறு போன்றவற்றை திருமணம் நடக்க வேண்டிய ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் தங்களின் நெற்றியில் இட்டு வர வேண்டும். இந்த பரிகார முறைகளை சரியாக கடைபிடிக்கும் பட்சத்தில் திருமண தடை, தாமதங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் திருக்கோவில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் அமைந்திருக்கிறது.
Tags:    

Similar News