ஆன்மிகம்
பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோவில்

அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோவில்- பள்ளிகொண்டான்

Published On 2021-02-26 01:27 GMT   |   Update On 2021-02-26 01:27 GMT
பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம் என்பதால், இவ்வூர் “பள்ளி கொண்டான்” எனப்பட்டது. பெருமாள் “உத்தர ரங்கநாதர்” எனப்படுகிறார்.
மூலவர்     –     பள்ளி கொண்ட பெருமாள்
தாயார்     –     ரங்கநாயகி
பழமை     –     500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்     –     பள்ளி கொண்டான்
மாவட்டம்     –     வேலூர்
மாநிலம்     –     தமிழ்நாடு

மகாலட்சுமிக்கும், சரஸ்வதிக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு தீர்ப்பு கூறும்படி இருவரும் பிரம்மனிடம் சென்றனர். மகாலட்சுமி தான் பெரியவர் என பிரம்மா தீர்ப்பு கூறினார். இதனால் சரஸ்வதிக்கு கோபம் ஏற்பட்டு, பூலோகத்திலுள்ள சாசிய மலையில் தனது நிலை உயர வேண்டி தவம் செய்யத் தொடங்கினாள். இந்நிலையில் பிரம்மா பெருமாளுக்கு சிறப்பு செய்வதற்காக ஒரு யாகம் தொடங்கினார். நியதிப்படி யாகத்தை தம்பதி சமேதராக நடத்த வேண்டும். ஆனால், சரஸ்வதி யாகத்திற்கு வர மறுத்தாள். எனவே பிரம்மா, சரஸ்வதியின் அம்சமாக ஒரு பெண்ணைப் படைத்து, அவளுக்கு சாவித்திரி என பெயர் சூட்டி, அவளையே மணந்து யாகத்தை தொடங்கினார்.

இதனால் மேலும் கோபமடைந்த சரஸ்வதி, பிரம்மன் ஆரம்பித்த இந்த யாகத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் “க்ஷீரநதி” என்ற பெயரில் நதியாக மாறி, வெள்ளப்பெருக்கெடுத்து யாக குண்டத்தை உடைக்கும் நோக்கத்தில் ஓடிவந்தாள். இதனால் பிரம்மா, பெருமாளின் உதவியை நாடினார். பெருமாள், சரஸ்வதியை சமாதானம் செய்தார். முன்னதாக, அவர் நதியின் ஓட்டத்தை தடுக்க, ஆதிசேஷனை நதியின் குறுக்கே படுக்க வைத்து, அதில் சயனித்தார். பின்னர், பிரம்மா யாகத்தை சிறப்பாக முடித்தார். சரஸ்வதியும் சாவித்திரியும் ஒன்றே என்பதை விளக்கிய பெருமாள், அவளை பிரம்மனுடன் மீண்டும் இணைத்து வைத்தார். பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம் என்பதால், இவ்வூர் “பள்ளி கொண்டான்” எனப்பட்டது. பெருமாள் “உத்தர ரங்கநாதர்” எனப்படுகிறார்.

தனி சன்னதியில் தாயார் ரங்கநாயகி இருக்கிறார். உள்பிரகாரத்தில் உடையவர், இராமர், நவநீதகண்ணன், ஆண்டாள், அனுமன், மணவாள மாமுனிகள், கருடாழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் சன்னதிகள் உள்ளன. பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்தில் இருந்து வந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் முதல்முறையாக அவரைத் தன்னில் சயனிக்க வைத்தார் என்கிறது தலபுராணம். பின்னர் பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டதால், இத்தலத்து ஆறுக்கும் “பாலாறு” என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஒருநாள் இரவு தங்கி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என பிரமாண்ட புராணம் கூறுகிறது. மூலவரின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது.

இக்கோயிலுக்கு தெற்கே 2 கி.மீ. தூரத்தில் பீஜாசலம் என்ற மலைக்குன்று உள்ளது.

இத்தலத்தில் நிறைய திருமணங்கள் நடக்கின்றன. இங்கு திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்பது நம்பிக்கை.

அந்நியர் படையெடுப்பின் போது, இங்குள்ள ரங்கநாதர் மறைக்கப்பட்டு, சிறிய ரங்கநாதர் சிலை செய்து, கோயில் பாதுகாக்கப்பட்டது. இன்றும் கூட சிறிய ரங்கநாதருக்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. இவர் “சோட்டா ரங்கநாதர்” எனப்படுகிறார்.

திருவிழா:

சித்திரையில் பிரமோற்ஸவம், வைகாசி விசாகத்தில் கருடசேவை, ஆனியில் ஜேஷ்டா திருமஞ்சனம். ஆடி வெள்ளிக்கிழமைகளில் திருவாடிப்பூரம். கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி. திருக்கார்த்திகை. வைகுண்ட ஏகாதசி. தை மாதம் கிரிபிரதட்சணம். மாசி தெப்பம். பங்குனி உத்திரம்.

வேண்டுகோள்:

தடைபடும் திருமணங்கள் சிறப்பாக நடக்கவும், பிரிந்த தம்பதியர் ஒன்றாக சேரவும் இங்கு பிரார்த்திக்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருமஞ்சனம் செய்து துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில்,
பள்ளிகொண்டான் – 635 809.
வேலூர் மாவட்டம்

+91- 94439 89668, 94436 86869.
Tags:    

Similar News