ஆன்மிகம்
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோவில்

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்

Published On 2021-02-24 01:30 GMT   |   Update On 2021-02-24 01:30 GMT
பாண்டிய மன்னன் குலசேகரனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு எழுப்பப்பட்ட திருக்கோயிலே அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலாகும்.
இறைவன் : அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி
இறைவி : காமாட்சியம்மன்
தலவிருட்சம் : வில்வ மரம்
தீர்த்தம் : பஞ்சநதி தீர்த்தக்குளம்

தலசிறப்பு

செட்டிகுளம் ஊரின் நடு நாயகமாக விளங்குகின்ற அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலும், ஊரின் கீழ்புறம் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலும் வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோயிலாகும். உறையூர் சோழன் பராந்தகனுக்கும் பாண்டியமன்னன் குலசேகரனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு எழுப்பப்பட்ட திருக்கோயிலே அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலாகும். மலையின் மீது அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி தன் கையில் 11 கணுக்களை உடைய செங்கரும்பினை ஏந்தி காட்சி அளிப்பது சிறப்பு அம்சமாகும்.

தன் ஆணைக்கு இணங்க அசுரர்களை அழித்த முருக பெருமானுக்கு தன் கையில் இருந்த கரும்பை பரிசாக வழங்கி அன்னை காமாட்சியம்மன் ஆசி வழங்கினார். அன்று முதல் இத்தலத்தில் கரும்பு ஏந்திய கண்ணனாய் கலைகள் களையும் தோழனாய் அருள்பாலித்து வருகிறார். அதனாலே இத்தளத்திலுள்ள காமாட்சியம்மன் கையில் கரும்பு இல்லாமல் காட்சி தருகிறார்.
சூரிய பூஜை

அருள்மிகு ஏகாம்பரேஸ்வர் திருக்கோயில்i கிழக்கு நோக்கியும், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலையின் மீது தன் தந்தையை பார்த்து மேற்கு நோக்கியும் காட்சி கொடுப்பது தனிச்சிறப்பாகும். அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் சுவாமியின் மீது பங்குனி மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் காலைநேர கதிரவனின் ஒளி விழும் இந்த ஒளியானது சுவாமி மீதிருந்து நகர்ந்து சற்று நேரத்தில் அம்பாள் மீது ஒளிப்படும். இக்காட்சியை காண பக்தர்கள் பெருமளவில் கூடுவர். தண்டாயுத சுவாமி மீது மாசி மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் சூரியன் மறையும்போது ஒளிக்கதிர்கள் விழும் வகையிலும், சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா பெருந்திருவிழாவாகும். மலைகோயிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா பெருந்திருவிழாவாகும். மலைக்கோயிலில் இருந்து பங்குனி உத்திர திருவிழாவின்போது மட்டும் உற்சவர் மலையில் இருந்து இறங்கி பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் விமர்சையாக கொண்டாடப்படும் பங்குனி உத்திர திருவிழா ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே அறிவிக்கை செய்யப்பட்ட திருவிழா ஆகும். கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாட்கள் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் காலை மற்றும் இரவு என சுவாமி திருவீதிஉலா நடைபெறுகிறது. இவ்விழாவில் திருக்கல்யாண உற்சவமும் ஒவ்வொரு நாளும் குதிரை வாகனம், வெள்ளி மயில் வாகனம், புஸ்ப பல்லாக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

குழந்தைப்பேறு பிரார்த்தனை ஸ்தலம்

மழலைபேறு வேண்டுவோர் சஷ்டியில் விரதம் இருந்து மலைமீதுள்ள தலவிருட்சமான வில்வமரத்தில் தொட்டில்கட்டி வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து மலையேறி தங்கள் வேண்டுதலை நிறைவு செய்கின்றனர்.

12 இராசிகளுக்குமான குபேரன்

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் அம்பாள் சன்னதிக்கு எதிரில் குபேரனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு குபேரன் சித்ரலேகாவுடன் தாமரை மலர்மேல் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இந்த சன்னதியில் பக்தர்களுக்கு பச்சை குங்குமம் பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது வேறு எந்த திருக்கோயிலிலும் இல்லாத சிறப்பாகும். இதுவன்றி 12 ராசிகளுக்கும் குபேரன் ஓம் வடிவில் ஆலய தூண்களில் அமைந்துள்ளனர். குபேரனுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்வது சிறப்பு.

இதன் மூலம் குபேர சம்பத்துக்கு வழிகாட்டும் தளமாக இது திகழ்கின்றது. குபேரனின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று குபேர ஹோமமும், சிறப்பு வழிபாடும் வெகு சிமர்சையாக நடைபெற்று வருகிறது.

வெள்ளித்தேர்


அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி வீற்றிருக்கும் மலையின் வெளி பிரகாரத்தில் மாலை 6.00 மணிக்கு வெள்ளி ரதம் பவனி வருகிறது. வெள்ளிரத புறப்பாட்டு கட்டணமாக ரூ. 1000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ரூ. 20,000/-ம் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தி ஆண்டுக்கு ஒருமுறை தாங்கள் விரும்பிய நாளில் வெள்ளிரத புறப்பாடு செய்யலாம்.

அழகிய மலை மீது அழகன் முருகன் அருள்பாளிக்கிறார். இம்மலை மீது ஏறிசெல்ல தனிப்படிகளும், இறங்கி வர தனிப்படிகளும் வாகனங்கள் செல்ல தனிப்பாதையும் அமைந்துள்ளது.
Tags:    

Similar News