ஆன்மிகம்
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்

குரு பகவானின் சிறப்புக்குரிய ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்

Published On 2020-11-23 01:29 GMT   |   Update On 2020-11-23 01:29 GMT
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில், குரு பகவானுக்குரிய சிறப்பு வாய்ந்த திருத்தலமாக பார்க்கப்படுகின்றது. இந்த தலத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில், குரு பகவானுக்குரிய சிறப்பு வாய்ந்த திருத்தலமாக பார்க்கப்படுகின்றது. குருப்பெயர்ச்சி தினத்தில் குருவருள் பெற பக்தர்கள் தேடி வரும் கோவில்களில் முதன்மையானதாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இந்தக் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் இறைவன் ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்றும், அம்மன் ‘ஏலவார் குழலி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். சுயம்பு லிங்கமாக தோன்றிய இத்தல இறைவன், குருவின் அம்சமாக பார்க்கப்படுகிறார். குருப்பெயர்ச்சி, தை பூசம், பங்குனி உத்திரத்தின் போது தட்சிணாமூர்த்திக்கு தேர்திருவிழா, சித்ரா பவுர்ணமி விழா ஆகியவை இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

இங்குள்ள அம்பிகை, இந்த தலத்தில் தவம் இருந்து இறைவனைத் திருமணம் செய்துகொண்டதாக தல வரலாறு சொல்கிறது. விஸ்வாமித்திரர், முகுந்தர், வீரபத்திரர் வழிபட்ட புண்ணிய தலம் இது. சோழர்களால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவில், குரு பகவானின் சிறப்புக்குரிய தலங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை, மகாகுரு வாரமாக கொண்டாடப்படுகின்றது. இந்தக் கோவிலில் உள்ள குருபகவானுக்கு மாசி மாதம் வரும் வியாழக்கிழமைகளில் மட்டும்தான் அபிஷேகம் நடத்தப்படுகின்றது. குருப்பெயர்ச்சி தினத்தை விட, மாசி மாத வியாழக்கிழமை வழிபாடு இந்த தலத்தில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

தட்சிணாமூர்த்தி ஆலகால விஷத்தை குடித்து தேவர்களை காத்ததால், இந்தத் தலத்திற்கு ‘ஆலங்குடி’ என பெயர் வந்தது. இங்கு ஆலமரத்திற்குக் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்தபடி காட்சி தருகிறார், தட்சிணாமூர்த்தி. மாதா, பிதா என்பதற்கு அடுத்ததாக குருவை வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்தக் கோவிலுக்குள் நுழைந்ததும் முதலில் அம்மன் சன்னிதியை தரிசிக்கலாம். அதன் பின்னர் சுவாமி சன்னிதியை வழிபடலாம். அதற்கு பிறகு குருவின் சன்னிதி இருக்கிறது.

திருவாரூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, ஆலங்குடி திருத்தலம். திருவாரூரில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன.
Tags:    

Similar News