ஆன்மிகம்
பாடி திருவல்லீஸ்வரர் திருக்கோவில்

தோஷங்களைப் போக்கும் பாடி திருவல்லீஸ்வரர் திருக்கோவில்

Published On 2020-11-01 01:22 GMT   |   Update On 2020-11-01 01:22 GMT
சென்னை பாரிமுனையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது பாடி என்ற ஊர். இங்கு திருவல்லீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
சென்னை பாரிமுனையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது பாடி என்ற ஊர். இது தேவாரம் பாடிய சமயக் குரவர்களின் காலத்தில் ‘திருவலிதாயம்’ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இங்கு வல்லீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மூலவரின் பெயர் ‘திருவல்லீஸ்வரர்’, ‘திருவலிதமுடையநாயனார்’ என்பதாகும். அம்மனின் பெயர் ‘ஜெகதாம்பிகை’, ‘தாயம்மை’. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 254-வது தலம் ஆகும். தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 21-வது தலம்.

பரத்துவாஜ முனிவர் கருங்குருவி (வலியன்) யாக வந்து, இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் ‘திருவலிதாயம்’ என்றும், இறைவன் ‘வலிதாயநாதர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவில் சுமார் 1000 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் முதலியோரால் பாடல் பெற்ற தலமாக இது உள்ளது. மூலவர் சுயம்பு மூர்த்தி. இவருக்கு மேல் உள்ள விமானம் கஜபிருஷ்ட (யானையின் பின்புறம்) அமைப்புடையது.

வியாழ பகவான் எனப்படும் குரு, தான் செய்த தவறால் தனது சகோதரனின் மனைவி மேனகையின் சாபத்தைப் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால், பாவம் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்று வழிகாட்டினார். அதன்படி இங்கு வந்த வியாழ பகவான், இத்தல புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார். இதனால், இது குரு தலம் என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறது. குரு பகவானுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. குரு பரிகார தலங்களாக சொல்லப்படும் தலங்களில், திருவலிதாயமும் ஒன்றாகும்.

இத்தலத்தில் முருகப்பெருமான் நான்கு கரங்களுடன் வள்ளி-தெய்வானை சமேதராக எழுந்தருளியுள்ளார். வெளிப் பிரகாரத்தில் இருந்து உள் மண்டபத்தில் நுழைந்தவுடன், மூலவர் திருவலிதாயநாதர் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. உள்பிரகாரத்தின் வலது புறம் தெற்கு நோக்கியபடி அம்பாள் சன்னிதி இருக்கிறது. அம்பாளின் திருநாமம் ‘தாயம்மை’ என்பதாகும். அம்பாள் சன்னிதிக்கு நேர் எதிரே தெற்கு வெளிப் பிரகாரத்தில் சிம்ம வாகனம் அம்பாளை நோக்கியவாறு உள்ளது.

ஒரு நாட்டைச் சார்ந்த மன்னன், மற்றொரு நாட்டு மன்னனோடு போர் தொடுத்துச் செல்லும் போது, தமது படைகள் தங்குவதற்கென்று ஓர் இடத்தை ஏற்பாடு செய்து அங்கு தங்கியிருப்பது வழக்கம். இந்த மாதிரி இடங்களை ‘பாடிவீடு’ என்று குறிப்பிடுவார்கள். மேற்கூறியவற்றுள் இந்த பாடி என்ற ஊரின் பெயர், போர்க்கால பாடி வீட்டின் அடிப்படையில் அமைந்திருக்கலாம். சோழ மன்னர்களும், விஜய நகர மன்னர்களும் இவ்வூரை பாடிவீடாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இத்தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கிட தோஷங்கள் நீங்கும். இத்தல குருபகவானை வணங்கினால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. பிரம்மபுத்திரிகளான கமலி, வல்லி ஆகிய இருவரையும், விநாயகர் இத்தலத்தில்தான் திருமணம் செய்து கொண்டார் என வரலாறு கூறுகிறது. இதற்கு சான்றாக இங்கு கமலை, வல்லிகளுடன் இருக்கும்படியான விநாயகரின் உற்சவர் சிலை உள்ளது. திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கோவில் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
Tags:    

Similar News