ஆன்மிகம்
திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் திருக்கோவில்

பிரம்மனால் வழிபடப்பட்ட திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் திருக்கோவில்

Published On 2020-10-17 01:27 GMT   |   Update On 2020-10-17 01:27 GMT
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது திருவேதிக்குடி திருத்தலம். இங்கு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது திருவேதிக்குடி திருத்தலம். இங்கு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல்பெற்ற தலங்களில் காவிரி தென்கரையில் அமைந்த 14-வது சிவதலமாகும். இந்த ஆலயத்தில் பிரம்மனும், வேதங்களும் வழிபாடு செய்ததாக தல வரலாறு சொல்கிறது. திருவையாறை தலைமையாகக் கொண்ட சப்தஸ்தான தலங்களில் இது 4-வது திருத்தலமாக விளங்குகிறது. வேதியன் எனப்படும் பிரம்மன், சிவபூஜை செய்த தலம் என்பதால் ‘வேதிக்குடி’ என்றானதாக ஊருக்கு பெயர் காரணம் சொல்லப்படுகிறது.

இத்தல இறைவன், வாழை மடுவில் உற்பத்தியான காரணத்தால், ‘வாழைமடுநாதர்’ என்றும் அழைக்கப்படுகிறார். வேதங்கள் வழிபாடு செய்த காரணத்தால் ‘வேதபுரீஸ்வரர்’ என்ற பெயர் நிலைத்து காணப்படுகிறது. கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. ஆலயத்திற்கு வெளியே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. ராஜகோபுரத்தைக் கடந்து கோவிலுக்குள் சென்றால் மகாமண்டபம் வரும். அங்கு நடராஜர் சபை இருக்கிறது. உள் பிரகாரத்தை வலம் வரும்போது செவிசாய்ந்த விநாயகர், 108 சிவலிங்கங்கள் இருப்பதைப் பார்க்கலாம்.

அம்பாள் மங்கையர்கரசி என்ற திருநாமத்துடன், கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் தெற்கு நோக்கி வீற்றிருந்து அருள்கிறாள். அம்பாள் சன்னிதியை ஒட்டினாற்போல் வசந்த மண்டபம் இருக்கிறது. கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, விநாயகர், முருகன் மற்றும் மகாலட்சுமி ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் மூலவர் வேதபுரீஸ்வரர் காட்சி தருகிறார். கோவிலில் சப்தஸ்தான தல லிங்கங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரியனுடைய கிரணங்கள் சிவலிங்கத்தின் மீது படுவது சிறப்புக்குரியதாகும். அதனை சூரியன், சிவபெருமானை பூஜை செய்வதாக சொல்கிறார்கள்.

இத்தலத்தில் சூரியன், பிரம்மா, குபேரன் ஆகியோர் தவமிருந்து வேதபுரீஸ்வரர் அருள் பெற்றிருக்கின்றனர். இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனை தலமாக கருதப்படுகிறது. பிரம்மன் பூஜித்த தட்சிணாமூர்த்தியை நாமும் வழிபட்டால் கல்வி -கேள்விகளில் சிறந்து விளங்கலாம். 4 வேதங்களும் இங்கு இறைவனை வழிபட்டுள்ளன. இத்தலத்துப் பிள்ளையார் வேதம் கேட்க சாய்ந்திருக்கும் நிலையில் காணப்படுகிறார். எனவே இவருக்கு ‘வேதபிள்ளையார்’ என்றும், ‘செவிசாய்ந்த விநாயகர்’ என்றும் பெயர். இத்தலத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வர கோலம் சற்று வித்தியாசமாக உள்ளது. பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு அம்மன் வலது புறமும், சிவன் இடது புறமும் இணைந்துள்ள வித்தியாசமான அர்த்தநாரீஸ்வரரைக் காணலாம்.

முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவில் கல்வெட்டில், இறைவனின் பெயர் ‘வேதிக்குடி மகாதேவர்’ என்றும், ‘பரகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாதேவர்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் தல விருட்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக வேத தீர்த்தமும் காணப்படுகிறது. இந்தக் கோவில் தினமும் காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

அமைவிடம்

திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் திருக்கண்டியூர் வரும். அங்கிருந்து வீரசிங்கன்பேட்டை வழியாக தென்கிழக்கே 4 கிலோமீட்டர் தூரம் சென்றால், திருவேதிக்குடி சிவ தலத்தை அடையலாம். திருசோற்றுத்துறை என்ற பாடல் பெற்ற சிறப்புமிக்க சிவாலயமும், இந்தக் கோவிலின் அருகிலேயே அமைந்திருக்கிறது. திருவையாறில் இருந்து நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருக்கண்டியூரில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது. திருக்கண்டியூரில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருவேதிக்குடி.
Tags:    

Similar News