ஆன்மிகம்
ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோவில்- திருக்கடன்மல்லை

ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோவில்- திருக்கடன்மல்லை

Published On 2020-10-15 01:26 GMT   |   Update On 2020-10-15 01:26 GMT
சென்னையிலிருந்து சுமார் 55 கிமீ தொலைவில், சிற்பங்களுக்குப் புகழ் பெற்ற மஹாபலிபுரத்தில் அமைந்துள்ள இத்திருக்கோவில், 108 வைணவ திவ்யதேசங்களுள் 93ஆவது திவ்யதேசமாக விளங்கும் சிறப்புடையது.
சென்னையிலிருந்து சுமார் 55 கிமீ தொலைவில், சிற்பங்களுக்குப் புகழ் பெற்ற மஹாபலிபுரத்தில் அமைந்துள்ள இத்திருக்கோயில், 108 வைணவ திவ்யதேசங்களுள் 93ஆவது திவ்யதேசமாக விளங்கும் சிறப்புடையது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப் பெற்றது. பூதத்தாழ்வார் பிறந்தது இவ்விடத்தில்தான்.

ஸ்தலபுராணம்

மல்லையில் எம்பிரானுக்கு மலரால் அர்ச்சனை செய்வதற்காக புண்டரிக மஹரிஷி செல்கையில் வழியில் கடல் குறுக்கிட்டது. இவ்வுலகத் துன்பம் எதுவாயினும் எம்மான் அகற்றுவான் என்ற எண்ணத்தில் ரிஷி தம் கையாலேயே கடல் நீரை செம்பால் எடுத்து வழி காண முயன்றார். அப்போது அங்கு ஒரு முதியவர் வடிவில் வந்த மணிவண்ணன், அவரிடம் உணவு யாசிக்க, மஹரிஷி தம் கரத்திலிருந்த மலர்களை அவர் கையில் கொடுத்து விட்டு அன்னம் சம்பாதிக்கச் சென்றார்.

சென்றவர் திரும்ப வரும்போது தானளித்த மலர்களையே சூடி, தக்கார் தனக்கொருவர் இல்லாத திரிவிக்கிரமன், பாற்கடலில் தான் இருக்கும் காட்சியினை அக்கடலிலேயே சயனித்துக் காட்டி ஸ்தலசயனப் பெருமாள் என்னும் திருநாமம் பெற்றான்.

உற்சவருக்கு அழகுதமிழில் உலகுய்ய நின்றான் எனப்பெயராம் தாயாரின் திவ்யநாமம் நிலமங்கைத் தாயார் என்பதாகும்.

தலச்சிறப்பு

108 திவ்ய தேசங்களிலும் கையில் தாமரை மொட்டுடன் காட்சிதரும் பெருமாள் இவர் ஒருவரே, புண்டரி மஹரிஷிக்காக் கையில் கொண்ட மாலையுடன் தன்னை வந்தடையும் அடியவருக்கு அருள் பாலிப்பது வேறெங்கும் காணா அரிய காட்சியாகும்.

வலக்கரத்தை மார்பில் தாங்கி உபதேச முத்திரையுடன் கூடிய இப்பெருமாளை தரிசிப்பது வைகுண்டவாசனை நேரடியாக தரிசிப்பதற்கு ஒப்பானதாகும். இத்தலமே பூவுலகில் அமைந்த திருப்பாற்கடல் என்பர். திருமணத் தடைகளை நீக்கும் தலமென்றும் கூறுகின்றனர்.

Tags:    

Similar News