ஆன்மிகம்
செங்கனூர் மகாதேவர் சிவன் கோவில்

செங்கனூர் மகாதேவர் சிவன் கோவில்

Published On 2020-09-25 01:32 GMT   |   Update On 2020-09-25 01:32 GMT
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிவன் கோயில் தான் செங்கனூர் மகாதேவா கோயில் ஆகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிவன் கோயில் தான் செங்கனூர் மகாதேவா கோயில் ஆகும். எட்டுமானூர் மகாதேவர் கோயில், வைகொம் கோயில், வடக்குநாதன் கோயில் போன்ற கேரளத்தில் இருக்கும் பிரதான சிவன் கோயில்களுள் இந்த செங்கனூர் மகாதேவா கோயிலும் ஒன்றாகும்.

இக்கோவில் செங்கன்னூர் மகாதேவர் கோவில் என்றும், செங்கன்னூர் பகவதி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கிய மகாதேவர் சன்னிதியும், சன்னிதியின் பின்புறம் மேற்கு நோக்கிய பகவதியம்மன் சன்னிதியும் உள்ளன. பரிவார தேவதை சன்னிதிகளாக கணபதி, ஐயப்பன், கிருஷ்ணர், நீலக்கிரீவன், சண்டிகேஸ்வரன், நாகர் மற்றும் கங்கா ஆகியவை உள்ளன.  ஆலயக்கூரையிலும் சில தூண்களிலும், பாரத – இராமயணச் சிற்பங்கள் விளங்குகின்றன… கோயிலில் மாதத்தில் மூன்று நாட்கள் அக்கோயிலில் வீற்றிருக்கும் அம்மனுக்கே மாதவிடாய் என்று சொல்லி கோயிலுக்கு வெளியே வைக்கப்படும் வழக்கம் தொடர்கிறது. செங்கனூர் மகாதேவா கோயில் பற்றி மேலும் அறிந்துகொள்வோம் வாருங்கள்.

செங்கனூர் பகவதியம்மன் கோவில் மாதவிடாய் காலத்தின் சிறப்பு:

உலகில் வேறு எந்த கோயிலிலும் இல்லாத வகையில் இங்கே மாதவிடாய் விழா என்ற ஒன்று நடக்கிறது. செங்கனூர் மகாதேவர் கோயிலில் வீற்றிருக்கும் பார்வதி தேவிக்கு பெண்களுக்கு ஏற்ப்படுவது போலவே மாதவிடாய் ஏற்ப்படுவதாகவும், அந்நாட்களில் பார்வதி தேவியின் வஸ்திரத்தில் ரத்தக்கறை தென்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மூன்று-நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பார்வதி தேவிக்கு மாதவிடாய் ஏற்படுவதாகவும், அப்படி பார்வதி தேவியின் வஸ்திரத்தில் மாதவிடாய்க்கான அறிகுறி தெரிந்ததும் ‘தாழமண்’ மற்றும் ‘வங்கிபுழா’ ஆகிய குடும்பங்களை சேர்ந்த மூத்த பெண்கள் வந்து அம்மனுக்கு மாதவிடாய் ஏற்பட்டதை உறுதிபடுத்துகின்றனர்.

அதன் பிறகு மூன்று நாட்களுக்கு அம்மனின் சந்நிதி மூடப்படுகிறது. அப்போது இக்கோயிலில் வேறொரு இடத்தில் பார்வதி தேவியின் படத்தை வைத்து பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பின்னர் மூன்று நாள் மாதவிடாய் காலம் முடிந்ததும் நான்காம் நாள் அருகில் உள்ள பம்பை ஆற்றுக்கு பார்வதிதேவியின் சிலை கொண்டு செல்லப்பட்டு ‘ஆராட்டு’ என்னும் தூய்மைப்படுத்துதல் நிகழ்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆராட்டு நிகழ்வு தான் ‘திருப்பூதர ஆராட்டு’ என்கிற பெயரில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆற்றில் ஆராட்டு முடிந்தபிறகு பார்வதி தேவியின் சிலை யானை மீது வைக்கப்பட்டு கோயில் வாயிலை அடைகிறது. அங்கே மகாதேவர் சிவபெருமான் யானை மீது வீற்றிருந்து பார்வதி தேவியை கோயிலுக்குள் வரவேற்கிறார். பின்னர் மகாதேவரும், பார்வதி தேவியும் ஒன்றாக யானை மீது அமர்ந்தபடி கோயிலை மூன்று முறை வலம் வந்தபின் அவரவர் சந்நிதிகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றன்ர். பொதுவாக இவ்விழா மார்ச் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. நான்காம் நாள் நடக்கும் ஊர்வலத்தில் பெண்கள் பெரும் திரளாக கைகளில் ‘தளப்போளி’ என்னும் தீபம் ஏந்தி கலந்துகொள்கின்றனர்.

செங்கன்னூரில் அமைந்திருக்கும் பகவதியம்மன் கோவில் குறித்து மூன்று விதமான தல வரலாறுகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் முதல் தல வரலாற்றைப் பார்ப்போம்.

தல வரலாறு

பொதுவாக கோவில்களுக்கு தலபுராணம் என்பது ஒன்றுதான் இருக்கும். ஆனால், கேரளாவின், ஆலப்புழா செங்கன்னூரில் அமைந்திருக்கும் பகவதியம்மன் கோவில் குறித்து மூன்று விதமான தல வரலாறுகள் சொல்லப்படுகின்றன. அவற்றில். முதல் தல வரலாற்றைப் பார்ப்போம்.

பார்வதி தேவியான தாட்சாயிணியின் தந்தை தட்சன், பெரும் வேள்வி ஒன்றை நடத்தத் தொடங்கினான். தாட்சாயிணி அந்த வேள்விக்கு அழைத்துச் செல்லும்படி சிவனிடம் வேண்டினார். அழைப்பில்லாமல் சென்றால் அவமானம் நேரிடும் என்று சிவன் அறிவுரை சொன்னார். ஆனால், தாட்சாயிணி தனியாக அந்த வேள்விக்குச் சென்று, தட்சனால் அவ மதிக்கப்பட்ட நிலையில் வேள்வி அழியும்படி சபித்து விட்டு, வேள்வித் தீயில் குதித்து விட்டாள்.

அதனை அறிந்த சிவன், வேள்வியை அழித்த பின்னர் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு, ஊழித்தாண்டவம் ஆடினார். அவரை அமைதிப்படுத்த நினைத்த மகாவிஷ்ணு, சக்கராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை துண்டு துண்டாக வெட்டினார். தாட்சாயிணியின் உடல் பகுதிகள் பூலோகத்தில் 51 இடங்களில் விழுந்து, அவை அம்பிகையின் 51 சக்தி பீடங்களாக தோற்றம் பெற்றன. அம்பிகை உடலின், இடையின் கீழ்ப்பகுதி விழுந்த இடத்தில் இக்கோவில் அமைந்திருப்பதாக கோவில் தல வரலாறு சொல்கிறது.

செங்கனூர் சிவன் பார்வதி அம்மன் இரண்டாவது தல வரலாறு:- அகத்திய முனிவருக்குத் தங்களது திருமணக் காட்சியைக் காண்பிக்க சிவபெருமானும், பார்வதி தேவியும் தென்பகுதிக்கு வந்திருந்தனர். அவ்வேளையில், இங்கு பார்வதி தேவி வயதுக்கு வந்ததற்கான அடையாளமாக ருது என்ற பூப்பு நிகழ்வு நடந்தது என்பதன் அடிப்படையில், அம்மனுக்கு இங்கு பூப்புனித நீராட்டு விழா என்ற ருது சாந்தி கல்யாணம் நடைபெற்றது. அம்மன் வயதுக்கு வந்த நிகழ்வு நடைபெற்ற இந்த மலைப்பகுதி செந்நிறமாகிப் போனது என்றும், அதனால் இந்த இடம், மலையாளத்தில் செங்குன்னூர் என்று அழைக்கப் பெற்று, பிற்காலத்தில் செங்கன்னூர் என்று மாறி விட்டதாக சொல்லப்படுகிறது.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு போன்று அம்மனுக்கும், மாதவிடாய் ஏற்படும் நாட்களில் அம்மன் சன்னிதி அடைக்கப்பட்டு, உற்சவர் சிலை, கோவிலின் ஒரு பகுதியில் தனியாக வைக்கப்படும். மூன்று நாட்கள் கடந்த பின்னர், நான்காவது நாளில் சிலை மித்ரபுழை கடவு நதிக்குக் கொண்டு சென்று நீராட்டிய பின்னர் அலங்காரத்துடன் ஊர்வலமாக கோவிலுக்குக் கொண்டு வரப்படும்.

செங்கனூர் மகாதேவர் மூன்றாவது தல வரலாறு:- பகவதியின் மற்றொரு தோற்றமாகக் கருதப்படும் கண்ணகி, தனது கணவன் கோவலனுடன் மதுரைக்குச் சென்றார். கோவலன், தான் செய்து வந்த வணிகத்தை தொடங்குவதற்காகக் கண்ணகியின் காற்சிலம்பு ஒன்றை விற்க சென்ற நிலையில், அரசியின் சிலம்பைத் திருடிய பொற்கொல்லன், கோவலனைத் திருடனாகக் குற்றம் சுமத்தி அரசவைக்குக் கொண்டு சென்றான். அங்கு, கோவலனுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு கோவலன் கொல்லப்பட்டான்.

செய்தியறிந்த கண்ணகி, அரசவைக்குச் சென்று வழக்குரைத்தாள். வழக்கின் முடிவில், தனது தவறான தீர்ப்பை அறிந்த மன்னன் உயிர் துறந்தான். அதனைக் கண்டும் கோபம் குறையாத கண்ணகி, தன் கற்பின் வலிமையால் மதுரை நகரை தீக்கிரையாக்கினாள். அதன் பிறகு, கண்ணகி இத்தலம் அமைந்திருக்கும் பகுதிக்கு வந்து, தவமிருந்து, கோவலனுடன் சேர்ந்து தேவலோகம் சென்றதாக ஐதீகம். சேரன் செங்குட்டுவன், அங்கு கோவில் அமைத்து அம்மன் சிலையை நிறுவி, ‘செங்கமலவல்லி’ எனும் பெயரிட்டு வழிபட்டு வந்ததாக வரலாறு.

கோவில் நேரம்:

காலை 4 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இறைவன் மகாதேவருக்கு மூன்று வேளைகள், இறைவி பகவதியம்மனுக்கு இரண்டு வேளைகள் என்று தினமும் ஐந்து வேளை பூஜைகள் செய்யப்படுகின்றன. விஷேச தினங்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு.

இருநூறு வருடங்களுக்கு முன்பு, கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் அம்மன் சிலை பாதிப்படைந்த நிலையில் புதிய ஐம்பொன்சிலை நிறுவப்பட்டது. அதன் பிறகு, வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் மாதவிலக்கு ஏற்பட்டு, திருப்பூத்து விழா நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இக்கோவில் கேரளாவின் தட்சிண கயிலாசமாக குறிப்பிடப்படுகிறது. காக்கை வலிப்பு போன்ற நோய் உடையவர்கள், இக்கோவிலில் வழிபாடு செய்தால், நலம் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், திருமணத் தடைகள் நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் பகவதியை வழிபடுவதும் வழக்கமாக உள்ளது.

அமைவிடம்:

செங்கனூர் மகாதேவா கோயில் ஆலப்புழாவிற்கு கிழக்கே ‘திருவல்லா-பந்தளம்’ சாலையில் அமைந்திருக்கிறது. செங்கனூர் பேருந்து மற்றும் ரயில் நிலையத்திலிருந்து வரும் 1கி.மீ தொலைவில் இக்கோயில் இருக்கிறது. கேரள மாநிலத்தில் தலைநகரமான திருவனந்தபுரத்தில் இருந்து 117 கி.மீ தொலைவில் உள்ளது
Tags:    

Similar News