ஆன்மிகம்
திரிபுரசுந்தரி, திரிகாலேஸ்வரர், ஆலய தோற்றம்

தீவினைகளை அகற்றும் திரிகாலேஸ்வரர் கோவில்

Published On 2020-09-16 01:28 GMT   |   Update On 2020-09-16 01:28 GMT
மூன்று காலத்துக்கும் அதிபதியாக இருக்கும் காரணத்தால், இத்தல இறைவன் ‘திரிகாலேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். மூலவரான சிவபெருமான், லிங்க உருவில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கிறது, வாலாஜா. இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது ஒழுகூர். இங்கு முன்வினை போக்கும் வல்லமை கொண்ட திரிகாலேஸ்வரர், கோவில் கொண்டுள்ளார்.

இந்தக் கோவில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழர்களாலும், தொண்டைமான் அரசர்களாலும் திருப்பணி செய்யப்பட்டதாக தெரிகிறது. ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழனிடம் படைத்தளபதியாக இருந்தவன், பார்த்தவேந்திராதிவர்மன். இவன் வீரபாண்டியன் என்ற அரசனுடன் போரிட்டு அவன் தலையைக் கொய்த காரணத்தால், ‘வீரபாண்டியனின் தலை கொய்த பரகேசரிவர்மன்’ என்ற பட்டத்தைப் பெற்றவன். பின்னர் இவன், சோழ அரசனால் தொண்டை நாட்டை தனியாக ஆளும் அனுமதியைப் பெற்றான். இவனும் இந்தக் கோவிலுக்கு திருப்பணியைச் செய்திருக்கிறான்.

வேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கத்தில் கோவில் கொண்டுள்ள ஏகாதச கணபதியைப் போல, ஒழுகூரிலும் மூன்று பிள்ளையார்கள் சுயம்புவாக இருப்பது விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. இந்த மூன்று கணபதியும் ‘மாகம் பிள்ளையார்’ என்று அழைக்கப்படுகின்றனர். மகாராஜன் என்னும் பார்த்தவேந்திராதிவர்மன் வழிபட்டதால், ‘மகாராஜப் பிள்ளையார்’ என்று பெயர்பெற்று, பின்னாளில் அதுவே மருவி ‘மாகம் பிள்ளையார்’ என்றானதாக தெரிகிறது.

இந்தக் கோவில் கஜபிருஷ்ட விமானத்துடன் அமைந்திருக்கிறது. ‘கஜபிருஷ்டம்’ என்றால், தமிழில் ‘தூங்கானை மாடம்’ என்று பொருள். தூங்கும் யானையின் பின்புறம் போல் இந்த விமானம் அமைந்திருக்கும்.

‘திரிகாலம்’ என்பது இரண்டு வகையாக குறிப்பிடப்படுகிறது. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றையும் ‘திரிகாலம்’ என்பது ஒரு வகை. அதே போல் காலை, மாலை, இரவு ஆகிய மூன்றையும் கூட ‘திரிகாலம்’ என்றே சொல்வார்கள். இப்படி மூன்று காலத்துக்கும் அதிபதியாக இருக்கும் காரணத்தால், இத்தல இறைவன் ‘திரிகாலேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். மூலவரான சிவபெருமான், லிங்க உருவில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். சுயம்பு வடிவத்துடன் பெரிய பாணம் கொண்டு, சதுர வடிவ ஆவுடையாரில் இந்த லிங்கம் அருள்கிறது.

திரிபுரசுந்தரி என்ற பெயருடன் அம்பாள் அருள்கிறாள். அம்பிகை தெற்கு நோக்கி வீற்றிருக்கிறாள். நான்கு திருக்கரங்களுடன் நான்கடி உயரத்தில் காணப்படும் இந்த அம்பிகையின் முகம் வசீகர தோற்றத்தில் உள்ளது. அம்பிகை சன்னிதி வாசல் உயரம் சற்றே குறைவாக உள்ளது. எனவே முதுகை வளைத்துதான் உள்ளே நுழைய வேண்டும். இந்த சன்னிதி பிற்காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டு, உட்கோவிலாக இணைக்கப்பட்டதாக தெரிகிறது.

கோவில் வெளிச்சுற்றில் சப்த மாதர்களின் திருமேனிகள் காணப்படுகின்றன. பழமையான உற்சவ மூர்த்திகள், கோஷ்ட மூர்த்திகள் கிடைக்கப்பெறாததால், புதியதாக செய்யப்பட்டு வழிபாட்டில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு பாறையில் செதுக்கப்பட்ட அழகான விநாயகர் ஒன்று காணப்படுகிறது. இந்த பிள்ளையார், பிள்ளையார்பட்டி விநாயகரைப் போல காட்சியளிக்கிறார். இந்தக் கோவில் ராஜகோபுரம் 2 நிலைகளுடன் காணப்படுகிறது.

சிவன் கோவில் அருகிலேயே லட்சுமிநாராயணர் கோவில் ஒன்றும் உள்ளது. லட்சுமியை மடியின் மீது வைத்துக் கொண்டு கிழக்கு நோக்கியபடி லட்சுமி நாராயணர் வீற்றிருக்கிறார். சமீபத்தில் சிவன் கோவிலுக்கும், பெருமாள் கோவிலுக்கும் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News