ஆன்மிகம்
கோவில் தோற்றம், காளகஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை

சப்தரிஷிகளின் சாபம் நீக்கிய ஞானாம்பிகை உடனாய காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில்

Published On 2020-09-09 02:20 GMT   |   Update On 2020-09-09 02:20 GMT
சக்திவாய்ந்த தெய்வமாக அருள்பாலித்து வரும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே கத்தரிநத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது, ஞானாம்பிகை உடனாய காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில்.
‘கங்கையிற் புனித காவிரி’ பாயும் சோழவளநாட்டின் தலைநகரான தஞ்சாவூர், உலகமே வியக்கும் வகையில் சைவநெறிச் செம்மல், திருமுறை கண்ட ராஜராஜ சோழனால் நிர்மாணிக்கப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த பெரிய கோவிலை தன்னகத்தே கொண்டுள்ளது. நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை தரணியில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக அருள்பாலித்து வரும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே கத்தரிநத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது, ஞானாம்பிகை உடனாய காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில்.

ஒரு காலத்தில் இந்தக் கிராமம் ‘சப்தரிஷி நத்தம்’ என்று பெயர் பெற்று இருந்தது. திருக்காளத்தி எனும் காளகஸ்திக்கு நிகரானதும், தென் காளகஸ்தியாகவும் அமைந்துள்ள இக்கோவிலில், ஞானாம்பிகை என்ற பெயருடைய தேவியுடன், காளகஸ்தீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்தக் கோவில் ராகு, கேது பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோவிலின் எதிரில், பெரிய குளம் ஒன்று உள்ளது. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்று சுவடுகளை தன்னுள் பொதித்து கொண்டு இந்த சிவாலயமும், அம்மன் ஆலயமும், திருக்குளமும் திகழ்கின்றன. மிகவும் பழமைவாய்ந்த இந்தக் கோவில் செங்கல்லால் ஆன ஒற்றை திருச்சுற்று மதிலுடன் கம்பீரமாக எழுந்துள்ளது.

இந்த சிவாலயம் சோழர் காலத்தில் திகழ்ந்த ஒன்றாகும். இந்த கோவிலில் உள்ள விநாயகர், சுப்பிரமணியர், இறைவன் காளகஸ்தீஸ்வரர், இறைவி ஞானாம்பிகை, கயிலாய தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், காலபைரவர், நந்தீஸ்வரர் ஆகிய திருமேனிகள் மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன் காலத்திய சிறப்பு படைப்புகளாகும். பழங்காலம் முதற்கொண்டு இந்தக் கோவில், செங்கல் தளியாகவே இருந்து வந்துள்ளது. தற்போதுள்ள கட்டுமானம் தஞ்சையை ஆண்ட மராட்டியர் காலத்தில் கி.பி. 18-ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோவிலின் முன்மண்டபத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன், முதலாம் துக்கோஜி எனும் துளஜா என்பவரின் கல்வெட்டு சாசனம் ஒன்று உள்ளது. இந்த சாசனம் ஆங்கீரஸ ஆண்டு கார்த்திகை மாதம் பதினேழாம் நாளில் எழுதப்பெற்றதாகும். அது கி.பி. 1752-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் நாளாகிய செவ்வாய்க்கிழமையை குறிப்பதாகும். ராய மானிய துக்கோஜி மகாராஜா, சப்தரிஷிநத்தம் என்னும் ஊரில் உள்ள ஸ்ரீ காளகஸ்தீஸ்வர சுவாமிக்கு சர்வமானியமாக நிலம் அளித்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

ஒரு சமயம் இறைவனுடைய சாபத்தால் பிடிக்கப்பட்ட சப்தரிஷிகளாகிய மரீசி, அத்ரி, புலத்தியர், பிருகு, ஆங்கீரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகியோர், பல்வேறு ஊர்களுக்கு அலைந்து திரிந்தும் சாபவிமோசனம் பெற முடியாமல் தவித்தார்கள். அதன் பிறகு அந்த 7 பேரும் சப்தரிஷிநத்தம் என்ற இந்தத் திருத்தலத்திற்கு வந்து இங்குள்ள காளகஸ்தீஸ்வரரை வழிபட்டு வந்தனர்.

ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள் இந்த கோவில் குளத்தில் நீராடி காளகஸ்தீஸ்வரரை வழிபட்டு வந்தனர். இதனால் அவர்களின் சாபம் நீங்கப்பெற்று கடுமையான நோயும் நீங்கப்பெற்றனர் என தல புராணம் தெரிவிக்கிறது.

திருமண தடை நீக்கும் பரிகார தலமாக திகழும் இக்கோவிலில், ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலத்தில் திருமண தடையை நீக்கும் பரிகார பூஜை நடைபெறுகிறது.

குடும்ப ஒற்றுமைக்கு இக்கோவிலில் அர்த்தநாரீஸ்வரர் வழிபாடும், நோயற்ற வாழ்வு மற்றும் குறைவற்ற செல்வத்திற்கு ஸ்ரீ காலபைரவர் வழிபாடும், சிறப்பான பிரதோஷ வழிபாடும் இக்கோவிலில் விசேஷமாக நடந்து வருகிறது.

அமைவிடம்

தஞ்சாவூர்- நாகப்பட்டினம் சாலையில் அமைந்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சை நகரில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும் கத்தரிநத்தம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு பஸ் வசதி ஏதும் இல்லை. புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங் களிலோ, நடந்தோ சென்று வரலாம்.

டி. ஆரூண், பிள்ளையார்பட்டி.
Tags:    

Similar News