ஆன்மிகம்
தொட்டமளூர் நவநீதகிருஷ்ணன் திருக்கோவில்

தொட்டமளூர் நவநீதகிருஷ்ணன் திருக்கோவில்- கர்நாடகா

Published On 2020-08-12 02:20 GMT   |   Update On 2020-08-12 02:20 GMT
குழந்தை வரம் அருளும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் கர்நாடக உள்ள தொட்டமளூர் நவநீதகிருஷ்ணன் ஆலயமும் ஓன்று. இவற்றில் தொட்டமளூர் நவநீதகிருஷ்ணன் திருக்கோவில் பற்றி இங்கு காண்போம்.
குழந்தை வரம் அருளும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் தமிழ்நாட்டில் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை ஆலயமும், கர்நாடக மாநிலத்தில் தொட்டமளூர் நவநீதகிருஷ்ணன் ஆலயமும் முக்கியமானவைகளாக அறியப்படுகின்றன. இவற்றில் தொட்டமளூர் நவநீதகிருஷ்ணன் திருக்கோவில் பற்றி இங்கு காண்போம்.

கிருஷ்ணர் மதுராவில் பிறந்து, கோகுலத்தில் வளர்ந்து, துவாரகையில் இருந்து அரசாட்சி செய்தவர். சிறுவயதில் கண்ணன் தவழ்ந்து வரும் அழகை அவனைப் பெற்ற தேவகிக்குக் கூட பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. காரணம் அவள் சிறையில் இருந்தாள். நள்ளிரவில் சிறையில் கண்ணன் பிறக்க, அந்த இரவிலேயே ஆயர்பாடியில் இருந்த யசோதையிடம் இடம் பெயர்ந்து வளர்ந்து வந்தார், கிருஷ்ணர். அதனால்தான் சிறுவயதில் கண்ணன் தவழும் திருக்கோலத்தை யசோதையும், அங்கிருந்த ஆயர்பாடி மக்களுமே கண்டு தரிசித்து நற்பேறு பெற்றனர்.

ஆயர்பாடியில் சிறுகுழந்தை வடிவில் தவழ்ந்த அதே திருக்கோலத்தில், தொட்டமளூர் திருத்தலத்தில் அருள்கிறான், கண்ணன். நான்காம் நூற்றாண்டில் ராஜேந்திர சிம்ம சோழன் எனும் மன்னன் இக்கோவிலைக் கட்டியுள்ளார். ராஜராஜசோழன் காலத்துக் கல்வெட்டுக்களும் இங்கே காணப்படுகின்றன. கிழக்குப் பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால், மூலவரை தரிசிக்கலாம். இங்கு மூலவராக ராமஅப்ரமேயர் எழுந்தருளி உள்ளார். இந்தப் பெருமாளை, ராமர் வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. ‘அப்ரமேயன்’ என்ற சொல்லுக்கு ‘எல்லையில்லாதவன்’ என்று பொருள்.

மூலவருக்கு அடுத்தபடியாக தனிச் சன்னிதியில் கிழக்குப் பார்த்தவண்ணம் அரவிந்தவல்லி தாயார் அருள்பாலிக்கிறார். இவரை வெள்ளிக்கிழமை தோறும் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால் செல்வம் சேரும். நவராத்திரி, வரலட்சுமி விரதம் ஆகிய நாட்களில் தாயாருக்கு சிறப்பாக திருமஞ்சனம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளை யில் இத்தல அரவிந்தவல்லி தாயாரை வில்வார்ச்சனை செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் தரித்திரம், பீடை, வறுமை அகலும்.

அடுத்து பிரகார வலம் வருகையில் கிழக்கு பார்த்தவண்ணம் கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு, குழந்தை கிருஷ்ணர் தலையை திருப்பி தவழும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுருட்டைத் தலைமுடி, கழுத்தில் முத்துமாலை, அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு அணிந்து தவழும் அந்த நவநீத கிருஷ்ணன், அப்படியொரு அழகு. சாளக்கிராமக் கல்லில் உருவான இத்தல நவநீத கிருஷ்ணனை, மகான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்துள்ளார். மகான் ராகவேந்திரர் இங்கு வந்து தங்கி வழிபாடுகள் செய்துள்ளாராம்.

ஒரு முறை மகான் புரந்தரதாசர், தொட்டமளூர் தவழும் குழந்தை கண்ணனை தரிசிக்க வந்தபோது கோவில் மூடப்பட்டிருந்தது. உடனே அவர் வெளியில் இருந்தபடியே ‘ஜகத்தோதாரணா அடிசிதள யசோதா’ என்னும் கீர்த்தனையைப் பாடியதும், ஆலயக் கதவு திறந்துகொண்டது. புரந்தரதாசரின் பாடல் வரியைக் கேட்டுதான் தவழும் கோலத்தில் இருந்த கண்ணன், தன் தலையை திருப்பிப் பார்ப்பதாக தல வரலாறு சொல்லப்படுகிறது. நவநீத கிருஷ்ணன் சன்னிதி அருகில் துலாபாரம் அமைக்கப்பட்டு உள்ளது. புத்திர பாக்கிய தடை உள்ளவர்கள், இங்கு வந்து நவநீத கிருஷ்ணனுக்கு தொட்டில் கட்டி வெண்ணைய் நைவேத்தியம் செய்து வேண்டி வழிபடுகிறார்கள். புத்திரப் பாக்கியம் கிட்டியதும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். தங்கம், வெள்ளி, மரத்தினால் ஆன தொட்டில்களையும் கண்ணன் சன்னிதியில் நன்றியுடன் சமர்ப்பிப்பவர்கள் ஏராளம்.

அமைவிடம்

பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலை யில் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சென்னப்பட்டினா என்னும் ஊரில் இருந்து, 3 கிலோமீட்டர் தூரம் சென்றால் தொட்டமளூரை அடையலாம். சென்னை - மைசூர் ரெயிலில் சென்று சென்னபட்டினா ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் பயணம் செய்தால் பத்து நிமிடத்தில் கோவில் வாசலில் இறங்கலாம்.
Tags:    

Similar News