ஆன்மிகம்
குகைக்கோவில் விநாயகர்

தடைகளை தகர்த்தெறியும் குகைக்கோவில் விநாயகர்

Published On 2020-08-03 02:32 GMT   |   Update On 2020-08-03 02:32 GMT
மும்பையில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் லேண்யாத்ரி கிராமத்தில் உள்ளது கிரிஜாத்மக விநாயகர் கோவில். மலைக்கோவிலான இந்த ஆலயத்தை அடைய, 307 படிகள் ஏறிச்செல்ல வேண்டும்.
புனேவில் இருந்து வடக்கே 94 கிலோமீட்டரில், குக்கடி நதிக்கரையில் அமைந்திருக்கிறது லேண்யாத்ரி என்ற ஊர். இந்த ஊர் கணேஷ புராணத்தில் ஜீர்ணாபுரம், லோகன்பர்வத் ஆகிய பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மும்பையில் இருந்து ஜுன்னூர் 155 கிலோமீட்டர் ஆகும். ஜுன்னூர் செல்ல மும்பையில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன. அங்கிருந்து லேண்யாத்ரி கிராமம் வெறும் 8 கிலோமீட்டர் தான். இந்த ஊரில்தான் கிரிஜாத்மக விநாயகர் கோவில் அமைந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் உள்ள அஷ்ட விநாயகர் தலங்களில் இதுவும் ஒன்று. மலைக்கோவிலான இந்த ஆலயத்தை அடைய, 307 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். படியேறிச் செல்ல முடியாதவர்களுக்காக, டோலி வசதியும் உள்ளது.

‘விநாயகப்பெருமான், தனக்குப் பிள்ளையாக வரவேண்டும்’ என்று நினைத்த பார்வதிதேவி, அதற்காக லேண்யாத்ரி மலையின் குகையில் அமர்ந்து கடுமையான தவம் செய்தாள். பல ஆண்டுகள் செய்த தவத்தின் பயனாக, பார்வதியின் முன்பு கணேஷ மூர்த்தி தோன்றினார். “உன் விருப்பம் போலவே உன் மகனாகத் தோன்றி, அனைவரது துன்பங்களையும் நீக்கி, விருப்பங்களை நிறைவேற்றுவேன்” என்று கூறி மறைந்தார்.

அதன்பிறகான ஒரு சதுர்த்தி நாளில், பார்வதிதேவி தன்னுடைய கையில் இருந்து சந்தனத்தைக் கொண்டு ஒரு உருவத்தைப் படைத்தாள். அது உயிர்ப்பெற்று விநாயகப்பெருமானாக மாறியது. அந்தக் குழந்தைக்கு ‘கணேஷ்’ என்று பெயர் சூட்டினாள். எந்த ஒரு பணியையும் தொடங்கும் முன்பாக, கணேஷனை நினைத்து வழிபட்டபிறகு தொடங்கினால், அந்த காரியம் தடையின்றி நடைபெறும் என்று பார்வதிதேவி ஆசீர்வதித்ததாக இந்த ஆலய வரலாறு சொல்கிறது.

இந்தக் கோவில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது இது ஒரு குகைக் கோவில் ஆகும். ஆலயத்தின் முன்பு பெரிய விசாலமான சபா மண்டபம் அமைந்துள்ளது. அங்குள்ள தூண்கள் அனைத்தும் சித்திர வேலைப்பாடுகளுடன் பார்ப்பதற்கு கண்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. விநாயகரின் திருமுகம் தெற்கு நோக்கியபடி இருக்கிறது. விநாயகரின் இரு பக்கங்களிலும், அனுமனும், சங்கரரும் இருக்கிறார்கள். இந்த கருவறையில் உள்ள விநாயகருக்கு, பக்தர்கள் தங்கள் கைகளினாலேயே பூஜை செய்து வழிபடலாம் என்பது சிறப்பம்சமாகும்.

இந்த விநாயகருக்கு தினமும் காலையில் பஞ்சாமிர்தம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் மற்றும் மாசி மாதங்களில் வரும் வளர்பிறை சதுர்த்தியில் பிரமாண்டமான முறையில் உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. சந்ததுக்காராம் மற்றும் அவரது குரு ராகவ சைதன்யர் ஆகியோர் இத்தல விநாயகரை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News