ஆன்மிகம்
அட்சயபுரீஸ்வரர் கோவில்

ஆனந்தத்தை அள்ளித்தரும் அட்சயபுரீஸ்வரர் கோவில்

Published On 2020-07-24 04:28 GMT   |   Update On 2020-07-24 04:28 GMT
தஞ்சாவூர் பேராவூரணி தாலுகாவில் விளங்குளம் என்ற கிராமத்தின் நடுவே, ‘அட்சயபுரீஸ்வரர்’ என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அபிவிருத்திநாயகி உடனாய அட்சயபுரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் சிவபெருமான் அருள்பாலித்து வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகாவில் விளங்குளம் என்ற கிராமம் இருக்கிறது. எழில் கொஞ்சும் அந்த அழகிய கிராமத்தின் நடுவே, ‘அட்சயபுரீஸ்வரர்’ என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அபிவிருத்திநாயகி உடனாய அட்சயபுரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் சிவபெருமான் அருள்பாலித்து வருகிறார்.

‘அட்சயம்’ என்றால் பொன், பொருள், உணவு உள்ளிட்ட தேவையானவற்றை அள்ள அள்ள குறையாத வகையில் வழங்கும் பாத்திரம் என்பதாக இலக்கியங்களும், புராணங்களும் சித்தரிக்கின்றன. அந்த வகையில் இங்குள்ள சிவபெருமானும், கருணையையும், அருளையும், நீண்ட ஆயுளையும், செல்வச் செழிப்பையும், புகழையும், நல்ல வாழ்க்கையையும் அள்ளி அள்ளி கொடுப்பவராக சிவலிங்க திருமேனியோடு அருள்பாலிக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை தினத்தன்று, இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் மனதார வேண்டி வழிபடும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் இத்தல அட்சயபுரீஸ்வரர் வாரி வழங்குவதாக ஐதீகம். அன்றைய தினம் அன்னதானம் செய்தாலோ, ஏழை-எளியவர்களுக்கு உதவிகள் செய்தாலோ, சிறிய அளவில் தங்கம் வாங்கினாலோ, உப்பு வாங்கினாலோ, தியானம் மற்றும் தவம் செய்தாலோ, சுப நிகழ்ச்சிகளை நடத்தினாலோ, அவை அனைத்தும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் பெருகும் என்பது இறைவனின் வரமாகும்.

பூரம் நட்சத்திரக்காரர்கள் வந்து வழிபட வேண்டிய மிகச் சிறந்த தலமாக, இந்த அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இத்தலத்தில் வீற்றிருக்கும் சனீஸ்வர பகவான், ஆயுதங்கள் ஏதுமின்றி மங்கள சனீஸ்வரராக அருள்பாலிக்கிறார். சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சனீஸ்வரன், இங்கு தன்னுடைய இரு மனைவியர்களான நீலாதேவி மற்றும் பிரதியுக்‌ஷா தேவி ஆகியோருடன் காணப்படுகிறார். இந்த சனீஸ்வரரை வழிபட்டு வந்தால், எம பயம், விபத்து போன்ற ஆபத்துகள் நீங்கி மங்களகரமான வாழ்வு அமையும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும். பிரிந்து சென்ற தம்பதிகள் ஒன்றிணைய வாய்ப்பு உருவாகும்.

இந்த சிவாலயத்திற்குள் நுழைந்ததுமே ஒருவர் வாழ்வில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நிதர்சனமான உண்மை என்கின்றனர், பக்தர்கள். அபிஷேகப் பிரியராக இருக்கும் சிவபெருமானுக்கு, இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று சிறப்பான வழிபாடுகள் செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கும் வளமும், சகல ஐஸ்வர்யமும் கிடைக்க இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்து வரலாம்.
Tags:    

Similar News