ஆன்மிகம்
பூரி ஜெகந்நாதர் கோவில்

மோட்சத்தை தரக்கூடிய சிறப்புமிக்க பூரி ஜெகந்நாதர் கோவில்

Published On 2020-07-21 02:20 GMT   |   Update On 2020-07-21 02:20 GMT
கலியுகத்தில் வாழும் தெய்வமாக பூரி ஜெகந்நாதர் போற்றப்படுகிறார். இந்த தலத்தில் உள்ள தீர்த்தமானது, மோட்சத்தை தரக்கூடிய சிறப்புமிக்கது என்கிறார்கள்.
வடக்கே பத்ரிநாத், தெற்கே ராமேஸ்வரம், மேற்கே துவாரகாநாத், கிழக்கே ஜெகந்நாத் பூரி ஆகிய ஆலயங்கள், மிகவும் முக்கியமான புண்ணிய தலங்களாக கருதப்படுகின்றன. இந்த நான்கிலும் ஜெகந்நாத் பூரியே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. பத்ரிநாத், துவாரகாநாத், ராமேஸ்வரம் ஆகிய ஆலயங்களை தரிசனம் செய்த பிறகே, பூரி ஜெகந்நாதரை வழிபட வேண்டும் என்பது மரபாக இருக்கிறது. மற்ற மூன்று தலங்களிலும் நீராடல், நித்திரை போவது, அலங்காரம் செய்துகொள்வது போன்ற செயல்களைச் செய்யும் இறைவன், பூரியில் மட்டும், வயிறார உணவை ஏற்றுக்கொள்பவராக அருள்புரிகிறார். கலியுகத்தில் வாழும் தெய்வமாக பூரி ஜெகந்நாதர் போற்றப்படுகிறார். இந்த தலத்தில் உள்ள தீர்த்தமானது, மோட்சத்தை தரக்கூடிய சிறப்புமிக்கது என்கிறார்கள்.

சத்ய யுகத்தில் பண்டு வம்ச அரசரான இந்திரத்துயும்னன், அவநிதி நகரை ஆண்டு வந்தான். விஷ்ணுவின் தீவிர பக்தனான இந்த மன்னன், மகாவிஷ்ணுவுக்கு ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தான். அதற்கு இறைவனிடம் அனுமதி கேட்டான். அப்போது அங்கே ஒரு அசரீரி ஒலித்தது. “பாங்கி நதி ஓடும் பகுதியில் நீரில் ஒரு மரக்கட்டை மிதந்து வரும். அந்த கட்டையில் என்னுடைய உருவத்தை செதுக்கி வழிபட்டு வா” என்றது அந்த குரல்.

அசரீரியின் வாக்குப்படியே, பாங்கி நதியில் ஒரு மரக்கட்டை கிடைத்தது. அந்த கட்டையில் இறைவனின் சிற்பத்தை வடிக்க பல சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர். ஆனால் யாரும் அந்த பெரும் முயற்சியை செய்ய முன்வரவில்லை. அப்போது ஒரு முதியவர், தான் இறைவனின் உருவத்தை செதுக்கித் தருவதாக கூறியதோடு, சில நிபந்தனைகளையும் விதித்தார். அதன்படி தன்னை ஒரு தனி அறையில் வைத்து பூட்டிவிடும் படியும், 21 நாட்கள் கழித்து அந்த அறையை திறக்கும்படியும் கூறினார். இடையில் அறைக் கதவை திறக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

அதன்படியே அந்த முதியவர், நதியில் மிதந்து வந்த கட்டையுடன், தனி அறையில் அடைக்கப்பட்டார். 15 நாட்கள் ஆன நிலையில், மன்னனின் மனைவிக்கு அந்தச் சிலை எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிய ஆவல் உண்டானது. மனைவியின் வற்புறுத்தல் காரணமாக, முதியவர் சொல்லிய சொல்லை மீறி, அந்த அறையின் கதவை மன்னன் திறந்தான். அங்கு சிற்பியைக் காணவில்லை. இதைக் கண்டு மன்னனும், மக்களும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அங்கே ஜெகந்நாதர், பலராமர், சுபத்திரா ஆகியோரின் உருவங்கள் அரைகுறையாக செதுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.

மனைவியின் வற்புறுத்தலால் தான் செய்துவிட்ட பிழையை எண்ணி மன்னன் வருந்தினான். அப்போது மீண்டும் அங்கே ஓர் அசரீரி ஒலித்தது. “இங்கே அரைகுறையாக இருக்கும் சிலைகளையே வைத்து, ஆலயம் அமைத்து வழிபடு” என்றது அந்தக் குரல். முகத்தோற்றம் முழுமையாக செய்யப்பட்ட நிலையில், உடல் பகுதி நிறைவுபெறாத அந்தச் சிலையே பூரிஜெகந்நாதர் ஆலயத்தில் மூர்த்தங்களாக வைக்கப் பட்டன.

சத்ய யுகத்தில் இந்திரத்துயும்னன் கட்டிய ஆலயம், காலப்போக்கில் அழிந்து போனது. இதையடுத்து கி.பி. 1200-ம் ஆண்டு அனந்தவர்மன் என்ற அரசனால் தற்போதுள்ள ஆலயத்தின் கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்டன. அந்தப் பணிகள் அனந்தவர்மனின் பேரன் அனங்க பீம்தேவ் ஆட்சிக்காலத்தில் முடிவடைந் ததாக சொல்லப்படுகிறது. ஆலயத்தின் நான்கு புறமும் வாசல்கள் அமைந்துள்ளன. ஆலயத்தின் உட்பிரகாரத்தில் பல தெய்வங்களின் சன்னிதிகள் இருக்கின்றன. ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் பிரமாண்டமான மடப்பள்ளி உள்ளது. இது உலகின் மிகப்பெரிய சமையலறை என்று பெயர் பெற்றது. இதில் தினமும் 600 சமையல்காரர்கள் பிரசாதம் தயாரிக்கும் பணி களை மேற்கொள்வார்களாம். இங்கு சமைக்கப்படும் உணவானது, ஜெகந்நாதருக்கு நைவேத்தியமாக படைக்கப்பட்ட பிறகு, அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

அமைவிடம்

வங்காள விரிகுடா கடலின் கரையில் பூரி நகரம் அமைந்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்திலும், கட்டாக்கில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலும் இந்தத் தலம் உள்ளது. பூரி ரெயில்நிலையத்தில் இருந்து தென்கிழக்கு ரெயில் மார்க்கத்தில் ஹவாடாபுரி ரெயில் நிறுத்தத்தில் இறங்கினால், நகரின் உட்பகுதியில் ஜெகந்நாதர் ஆலயம் இருக்கிறது.
Tags:    

Similar News