ஆன்மிகம்
விநாயகர்

துன்பங்களை விலக்கும் சிந்தாமணி விநாயகர் கோவில்

Published On 2020-07-15 02:14 GMT   |   Update On 2020-07-15 02:14 GMT
பூனாவில் இருந்து 24 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, தேவூர். இங்கு ‘சிந்தாமணி விநாயகர் ஆலயம்’ அமைந்திருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
பூனாவில் இருந்து 24 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, தேவூர். இங்கு ‘சிந்தாமணி விநாயகர் ஆலயம்’ அமைந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் உள்ள அஷ்ட விநாயகர் ஆலயத்தில் இதுவும் ஒன்றாகும். இந்த விநாயகரைப் பற்றி ஒரு கதை சொல்லப்படுகிறது. அதைப்பற்றி இங்கே பார்க்கலாம்..

முன்னொரு காலத்தில் அபிஜித் என்ற அரசன் இருந்தான். அவனது மனைவியின் பெயர், குணவதி. இந்த தம்பதியருக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. ஒரு முறை அந்த அரசனை, வைஸம்பாயன முனிவர் சந்தித்தார். அவர் மன்னனிடம், பிரம்ம தேவரை நினைத்து தவம் இயற்றும்படி கூறினார். முனிவர் சொன்னபடியே, தம்பதியர் இருவரும் காட்டிற்குச் சென்று கடுமையான தவம் இருந்தனர். அந்த தவத்தின் பயனாக அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘கண’ என்று பெயரிட்டனர். அவன் வளர்ந்ததும், மக்கள் அனைவரும் ‘கண ராஜா’ என்று அழைத்தனர். கண ராஜா பலமும், புத்திசாதுர்யமும் கொண்டவனாக விளங்கினான்.

ஒரு முறை கபிலமுனிவர் வசித்த குடிலுக்குச் சென்றான், கண ராஜா. முனிவர், தன் ஆசிரமம் நாடி வந்த இளவரசனை வரவேற்று தகுந்த மரியாதையை வழங்கினார். மேலும் தன்னிடம் இருந்த சிந்தாமணி ரத்தினத்தைக் கொண்டு, அறுசுவை உணவுகளை வரவழைத்து இளவரசனுக்கு விருந்து படைத்தார். அந்த அற்புதத்தைக் கண்ட கண ராஜா, தனக்கு அந்த சிந்தாமணி ரத்தினத்தை தரும்படி கேட்டான். ஆனால் அதற்கு கபில முனிவர் மறுத்துவிட்டார். இதனால் அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக அந்த ரத்தினத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

இதனால் மிகவும் வருத்தம் அடைந்த கபில முனிவர், துர்க்கை அம்மனை நோக்கி பிரார்த்தனை செய்தார். முனி வரின் பிரார்த்தனையை ஏற்ற துர்க்கை, விநாயகரை நோக்கி தவம் இருக்கும்படி வலியுறுத்தினாள். கபில முனிவரும் அப்படியே செய்தார். முனிவரின் கடும் தவத்தைக் கண்டு மகிழ்ந்த விநாயகர், அவருக்கு முன்பாகத் தோன்றினார்.

அவரை வணங்கிய முனிவர், கண ராஜாவிடம் இருந்து சிந்தாமணி ரத்தினத்தை மீட்டுத் தரும்படி வேண்டுகோள் வைத்தார். இதன் காரணமாக விநாயகருக்கும், கண ராஜாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. இறுதியில் கண ராஜாவை வதம் செய்து, சிந்தாமணி ரத்தினத்தை மீட்டு, கபில முனிவரிடம் ஒப்படைத்தார், விநாயகர். ஆனால் கபில முனிவர் அதை தானே வைத்துக் கொள்ளாமல், அந்த சிந்தாமணி ரத்தினத்தை மாலையாக கோர்த்து, விநாயகரின் கழுத்தில் அணிவித்துவிட்டார். இதனாலேயே இத்தல விநாயகருக்கு ‘சிந்தாமணி விநாயகர்’ என்ற பெயர் வந்தது.

இது தவிர மற்றொரு தல புராணக் கதையும் சொல்லப்படுகிறது. அதையும் பார்த்துவிடுவோம்..

கவுதம முனிவரின் மனைவி, அகல்யா. அவளது அழகில் மதி மயங்கிய தேவேந்திரன், ஒருநாள் அதிகாலையில் கவுதமர் நதிக்கு நீராடச் சென்ற நேரத்தில், அவரது உருவத்தில் அகல்யாவை நெருங்கினான். இதனை தனது ஞான திருஷ்டியால் அறிந்த கவுதமர், இந்திரனுக்கு சாபம் அளித்தார். இதனால் இந்திரனின் உடல் அருவருக்கத்தக்க வகையில் விகாரமாக மாறிப்போனது. இதனால் வருத்தம் அடைந்த இந்திரன், கவுதம முனிவரிடம் சாப விமோசனம் வேண்டினான்.

அவர் விநாயகரை வழிபடும்படி, இந்திரனுக்கு வழிகாட்டினார். அதன்படி கதம்ப மரங்கள் அடர்ந்த வனத்தில், ஒரு கதம்ப மரத்தின் அடியில் அமர்ந்து விநாயகப்பெருமானை, அனுதினமும் பூஜித்து வந்தான், இந்திரன். இவன் இறை வழிபாட்டிற்கு முன்னதாக நீராடிய நதி, ‘சிந்தாமணி நதி’ என்று அழைக்கப்படுகிறது. மரத்தின் அடியில் தேவர்களின் தலைவனான இந்திரன் அமர்ந்து விநாயகரை பூஜித்ததால், இந்த ஊர் ‘தேவூர்’ என்று பெயர் பெற்றது.

இந்த ஆலயத்தில் புரட்டாசி மாதம் பிரதமை திதியில் இருந்து சப்தமி வரையிலும், மாசி மாதத்தில் பிரதமை திதியில் இருந்து அஷ்டமி திதி வரையிலும் உற்சவங்கள் வெகு சிறப்பாக நடத்தப்படுகின்றன. மூன்று கால பூஜை நடைபெறும் இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனுக்கு, உற்சவ காலங்களில் மட்டும் மக்கள் அருகில் சென்று அர்ச்சனை, நைவேத்தியங்கள் செய்யலாம். இத்தல விநாயகர், சுயம்பு மூர்த்தியாக தோன்றியவர் ஆவார். விநாயகரின் கண்களில் ரத்தினமும், நெற்றியில் மாணிக்கமும் பதிக்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News