ஆன்மிகம்
சாரதாம்பாள் கோவில்

கல்வி வரம் தரும் சாரதாம்பாள் கோவில்

Published On 2020-07-13 02:21 GMT   |   Update On 2020-07-13 02:21 GMT
திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது, அன்னை சாரதாம்பாள் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஸ்தல வரலாறு:

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது, அன்னை சாரதாம்பாள் ஆலயம். சிருங்கேரி சங்கரமடம் என்று வடிவமைக்கப்பட்ட அரைவட்ட முகப்பைக் கடந்ததும் இந்த ஆலயத்தின் முகப்பைக் காணலாம்.

கோவிலுக்குள் நுழைந்ததும் இடது புறம் வித்யா கணபதி சன்னிதியும், வலதுபுறம் பால சுப்பிரமணியர் சன்னிதியும் உள்ளன. இந்த பிள்ளையார் மற்றும் முருகன் திருமேனிகள் வெள்ளை சலவைக்கல்லால் ஆனது என்பது சிறப்பம்சமாகும். பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் பளீரென காட்சி தரும் இந்தத் திருமேனிகள் நம்மை சிலிர்க்க வைப்பவை. அடுத்து உள்ளது மகா மண்டபம்.

16 பிரமாண்ட தூண்களுடன் அனிவெட்டி முறையில் அமைந்துள்ளது இந்த மண்டபம். மண்டபத்தைச் சுற்றி மேல்புறம் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு வண்ண ஓவியத்தில் தீட்டப்பட்டுள்ளது. மகாமண்டபத்தின் மேல்புறம் பஞ்சபூத தலங்களின் இறைவனின் திருவுருவும் ஆலயத்தின் தோற்றமும் வண்ணக் கலவையில் வரையப்பட்டு நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

இதையடுத்து அர்த்த மண்டபம் சற்றே வித்தியாசமான முறையில் காட்சி தருகிறது. இந்த மண்டபத்தின் மேல்பகுதி, எண் சதுர வடிவில் அமைந்திருப்பதுடன் அஷ்டலட்சுமிகளின் திருமேனிகள் சுதை வடிவில் அழகுற அமைந்துள்ளன. கருவறையில் அன்னை சாரதாம்பாள் பத்மாசன நிலையில் இரு கால்களை மடக்கியபடி அமர்ந்த திருக்கோலத்தில் இளநகை தவழும் இன்முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.

இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். அன்னை தனது மேல் வலது கரத்தில் கிளியையும் இடது மேல் கரத்தில் அமிர்த கலத்தையும் தாங்கி, கீழ் வலது கரத்தில் அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் காட்சி தருகிறாள். கீழ் இடது கரத்தில் ஜபமாலையையும் புத்தகத்தையும் தாங்கி நிற்கிறாள்.

இந்த அன்னையின் திருமேனி வெண் பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்டுள்ளதால், அன்னையின் முகம் வெள்ளை வெளேரென்ற நிறத்துடன் ஒளிர்விடுகிறது. அம்பாள் கரத்தில் இருக்கும் புத்தகம் கல்வியையும், ஜபமாலை தியானத்தையும், கிளி ஞானத்தையும், அமர்த கலசம் அழிவற்ற நிலையான முக்தியையும் உணர்த்துவதாக கூறுகின்றனர்.

அன்னையின் வலது புறம் ஆதிசங்கரர் சன்னிதியும் இடதுபுறம் சாரதா பீடத்தின் 33–வது பீடாதிபதி ஸ்ரீ சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி சன்னிதியும் உள்ளன. மூலவரின் இருப்பிட அமைப்பும், மூலவரின் விமானமும் எண் கோண அமைப்பில் அமைந்துள்ளது. விமானத்தின் எட்டு திசைகளிலும் குரு, கிருஷ்ணர், முருகப்பெருமான், விஷ்ணு, சிவபெருமான், பார்வதி, பிரம்மா, தத்தாத்திரேயர் ஆகிய எட்டு பேரின் சுதை வடிவ திருமேனிகள் ஆளுக்கு ஒரு திசையாக எட்டு திசை நோக்கி அருள்பாலிக்கின்றன.

தாமரைப்பூ கவிழ்ந்திருக்கும் நிலையிலான தோற்றத்தில் காணப்படுகிறது அம்மன் கருவறை விமானம். சிவ–விஷ்ணு பேதம் களையும் தலமாக இத்தலம் விளங்குகிறது. அன்னை சாரதாம்பாளின் கருவறையில் சிறிய அளவில் சிவபெருமானின் லிங்கத் திருமேனி உள்ளது. பிரதோஷ நாட்களில் இந்த லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.

திருவிழாக்களும் பூஜைகளும் :

அனைத்து பவுர்ணமி நாட்களிலும் ஸ்ரீ சக்கர நவாவரண பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் சுமங்கலி கன்னியா பூஜையும் சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த பூஜை முடிந்ததும் சுமங்கலி பெண்களுக்கு புடவை, சட்டைத்துணி, மங்கலப் பொருட்களை தருவது வழக்கமாக உள்ளது.

சிறுமிகளை அம்மனாகப் பாவித்து பாவாடைத் துணியையும் அன்பளிப்பாகத் தருகின்றனர். இந்த ஆலயத்தில் வருடத்தில் நான்கு நவராத்திரி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த விழாக்கள் ஒவ்வொரு முறையும் 9 நாட்கள் நடைபெறும். தை–மாசி மாதத்தில் ராஜ மாதங்கி நவராத்திரியும், ஆடி மாதத்தில் வாராகி நவராத்திரியும், பங்குனி–சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசியில் சாரதா நவராத்திரியும் கொண்டாடப்படுகின்றன.

இந்த நாட்களில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகளும், மாலையில் எந்திரத்தை வைத்து ஆவரண பூஜையும் நடைபெறும். அன்னைக்கு தினசரி லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்யப்படுகிறது. இந்த பாராயண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். தை மாதம் இரண்டு மற்றும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சுமார் 300 பக்தர்கள் பங்குபெறும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடைபெறுகிறது.

மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று, கூட்டு வழிபாடு நடைபெறுகிறது. சுமார் 100–க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு குங்கும அர்ச்சனை செய்து பயன்பெறுகின்றனர். புரட்டாசி மாத நவராத்திரியின் கடைசி நாளன்று, உலக நன்மைக்காக அன்னையின் முன் சண்டிஹோமம் நடத்தப்படுகிறது.

திருமணமாக வேண்டி கன்னிப் பெண்கள் அம்பாளிடம் தங்கள் கோரிக்கைகளைக் கூறி வேண்டிக் கொள்கின்றனர். மணமானதும் அன்னைக்கு புடவை கொண்டு வந்து சாத்துகின்றனர். இந்த புடவைகளை ஆலய நிர்வாகம், குடிசை வாழ் பெண்களுக்கு தானமாகத் தந்து உதவுவது உண்மையில் பாராட்ட வேண்டிய செயலாகும்.

கல்விச் செல்வம் வேண்டி ஏராளமான மாணவர்கள் அன்னையை வேண்ட, அவர்களின் பிரார்த்தனைகள் பலிப்பதும் நிஜம். ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் மகாவிஷ்ணுவின் தசாவதாரத் திருமேனிகள் வரிசையாக வீற்றிருக்கின்றன. மச்சம், கூர்மம், வராகர், நரசிம்மர், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி ஆக பத்து அவதாரங்களின் திருமேனிகள் கண்கவர் அழகில் பார்ப்பவர் மனதைக் கவருகின்றன.

கிழக்குப் பிரகாரத்தில் அகல்யா, திரவுபதி, சீதை, தாரா, மண்டோதரி ஆகிய பஞ்ச கன்னிகைகளின் சன்னிதி உள்ளது. இவர்களை வணங்குவதால் பாவம் அகலும். கெட்ட கனவுகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களின் சன்னிதி அமைந்துள்ளது.

தனி மண்டமாக காட்சி தரும் இந்த மண்டபத்தின் மேல் பகுதியில் அழகிய விமானம் காட்சி தருகிறது. இந்த விமானத்தில் அஷ்டதிக்கு பாலகர் களின் சுதை வடிவ திருமேனிகள் உள்ளன. நவக்கிரகங்களை நாம் சுற்றும் போதே இந்த எட்டு திசைகளையும் பாதுகாக்கும் அஷ்டதிக்கு பாலகர்களையும் நாம் சுற்றி வந்துவிடலாம்.

தினசரி காலை 6 மணிக்கு இரண்டு மயில்கள் இந்த ஆலயம் வந்து, இறைவியின் விமானத்தின் அருகே சுமார் ஒரு மணி நேரம் அமர்ந்து மெல்லிய குரல் கொடுத்துவிட்டு பின் பறந்து சென்று விடுவது இன்றும் காணக்கூடிய அதிசய காட்சியாகும். தினசரி 3 கால பூஜை நடக்கும்

இந்த ஆலயம் காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் இருந்து, இந்த ஆலயத்திற்கு நடந்தே சென்று விடலாம். ஆட்டோ வசதியும் உண்டு. கல்வி கண்ணை திறக்கவும், கன்னியருக்கு விரைந்து மணம் நடந்தேறவும் அன்னை சாரதாம்பாள் அருள்புரிவாள் என்று பக்தர்கள் நம்புவது உண்மையே!
Tags:    

Similar News