ஆன்மிகம்

புனிதவல்லி சமேத புஜண்டேஸ்வர சுவாமி கோவில்

Published On 2019-04-15 02:22 GMT   |   Update On 2019-04-15 02:22 GMT
மிகவும் புகழ்வாய்ந்த ஆலயம் கடலூர் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் புனிதவல்லி சமேத புஜண்டேஸ்வர சுவாமி கோவில்.
ஆன்மிக அதிர்வலைகள் நிரம்பிய நாடு தமிழ்நாடு. கண்ணுக்கு தெரியாத ஏராளமான அற்புதங்களும், அதிசயங்களும் இன்னும் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கின்றன. கலியுகத்தில் இடர்களால் மக்கள் பரிதவிப்பதை தவிர்க்கவே பல ஆலயங்கள் வழிபாட்டில் உள்ளன. அந்த வகையில் மிகவும் புகழ்வாய்ந்த ஆலயம் தான், கடலூர் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் புனிதவல்லி சமேத புஜண்டேஸ்வர சுவாமி கோவில்.

நந்திகேஸ்வரர் தமது சீடர்களாகிய புஜண்ட மகிரிஷிக்கும், மார்க்கண்டேயருக்கும், சிவபெருமானின் பெருமையை இந்த இடத்தில்தான் உபதேசித்து அருளினார். அதன் பின்னர் தான் சித்தர் காகபுஜண்டர் இங்கு சிவலிங்கம் நிறுவி வழிபட்டார் என்பது தல வரலாறு. மூலஸ்தானத்தில் உள்ள புஜண்டேஸ்வர சுவாமியாக அருள்பாலிக்கும் சிவலிங்கமும், புனிதவல்லி அம்பாளும், நந்தி பெருமான் சிலையும் சுமார் 1,000 ஆண்டுகள் பழமையானதாகும். கோவிலின் தல விருட்சமாக நாகலிங்க மரம் விளங்குகிறது.

சித்தர் காகபுஜண்டரால் சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதற்கு சான்றாக கோவிலின் தென்புறத்தில் வடக்கு திசை பார்த்தவாறு காகபுஜண்டர், தனது மனைவி பகுளாதேவியுடன் அருள்பாலிக் கிறார். காகபுஜண்டர் பல இடங்களில் சிவலிங்கம் நிறுவி வழிபாடுகள் செய்திருந்தாலும், தமிழகத்திலேயே காகபுஜண்டர் பெயரில் உள்ள சிவலிங்கம் இது மட்டும்தான் என்பது தனிச்சிறப்பாகும்.

காகபுஜண்டர் ஜோதிடத்தில் மிகவும் வல்லவர். இவரை வழிபடுவதன் மூலம், நமக்கு நவக்கிரக தோஷங்கள் இருந்தால் விலகி விடும். இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசையன்று காகபுஜண்டருக்கும், பகுளா தேவிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. புஜண்டேஸ்வரர் முன்பு 21 நெய் விளக்குகள் ஏற்றி சுவாமியையும், அம்பாளையும் வழிபட்டு, சித்தரையும் வழிபாடு செய்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். மேலும் பித்ரு தோஷங்கள் நீங்கும்.

கோவிலை வலம் வரும்போது விநாயகர், வள்ளி -தெய்வானையுடன் முருகன், நவக்கிரகங்கள், பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

கடலூர் - சிதம்பரம் சாலையில் கடலூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆலப்பாக்கம் கிராமம். இங்குதான் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.
Tags:    

Similar News