ஆன்மிகம்

நாகதோஷம் போக்கும் நாகேஸ்வரர் கோவில்

Published On 2019-02-22 02:20 GMT   |   Update On 2019-02-22 02:20 GMT
‘நாகேஸ்வரர் கோவில்’ அல்லது ‘நாகநாதர் கோவில்’ என்று அழைக்கப்படும் ஆலயம் துவாரகைக்கு அருகே அமைந்திருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமான், பக்தர்களின் இன்னல்களை நீக்குவதற்காக ஆலயங்களில் லிங்க வடிவில் வீற்றிருந்து அருள்புரிகிறார். லிங்க வடிவங்களில் ஜோதிர் லிங்கம் என்பவை சிறப்பு வாய்ந்தவை. இந்தியா முழுவதும் 12 ஜோதிர் லிங்க திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமான், தன்னை ஜோதி லிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் திருவாதிரை நாள் ஜோதிர் லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது.

‘நாகேஸ்வரர் கோவில்’ அல்லது ‘நாகநாதர் கோவில்’ என்று அழைக்கப்படும் ஆலயம் துவாரகைக்கு அருகே அமைந்திருக்கிறது. சிவபெருமானுக்காக அமைத்த 12 ஜோதிர் லிங்க தலங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தில் அருளும் இறைவனின் பெயர் நாகநாதர் என்பதாகும். இறைவியின் பெயர் நாகேஸ்வரி ஆகும்.

இந்த ஆலயத்தைப் பற்றி சிவபுராணத்தில் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. சுப்பிரியா என்னும் சிவ பக்தையை, தாருகா என்ற அசுரன் பிடித்துச் சென்றான். அவளை, தாருகாவனம் என்ற இடத்தில் மேலும் பலருடன் சேர்த்து அடைத்து வைத்திருந்தான். பாம்புகளின் நகரமாக விளங்கிய அந்த இடத்திற்கு, தாருகா அசுரன் தான் மன்னனாக இருந்தான். சிறையில் அடைக்கப்பட்டிருந்த சப்பிரியா, சிவபெருமானை நினைத்து அவரது மந்திரங்களை உச்சரித்தாள். மேலும் அங்கிருந்தவர்களையும் சிவனின் மந்திரங்களை உச்சரித்து வணங்கும்படி செய்தாள். இதையடுத்து அங்கு தோன்றிய சிவபெருமான், தாருகா அசுரனைக் கொன்று, அங்கிருந்த கைதிகள் அனைவரையும் விடுவித்தார். அவரே இந்த ஆலயத்தில் ஜோதிர் லிங்கமாக இருப்பதாக பக்தர் களின் நம்பிக்கை.

தாருகா அசுரன் இறக்கும் முன்பாக, இந்த இடம் தன்னுடைய பெயரில் வழங்கப்பட வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டான். அதன்படி நாகர்களின் அரசனாக விளங்கிய அவனது பெயராலேயே ‘நாகநாத்’ என்று இந்த இடம் வழங்கப்படுகிறது. ஆலயமும் நாகநாதர் கோவில் என்று பெயர் பெற்றுள்ளது. இது மிகவும் பழமையான ஆலயங்களில் ஒன்றாகும். பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களில் இதுவே மிக தொன்மையானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த ஆலயத்திற்கு மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. அதாவது தாருகாவனம் என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் பல ரிஷிகள் தங்களின் மனைவியுடன் வாழ்ந்து வந்தனர். அந்த ரிஷிகள் அனைவரும், இறைவனைப் பற்றிய சிந்தனை இல்லாமல், இந்த உலகமே தங்களால் தான் இயங்குகிறது என்று நினைத்துக் கொண்டனர். அவர்களின் கர்வத்தை அடக்க நினைத்த சிவ பெருமான், பிட்சாடன மூர்த்தியாக, தாருகாவனத்திற்கு வந்தார். அவரது அழகில் மயங்கிய ரிஷி களின் மனைவிகள், தங்களின் சுய நினைவை இழந்து, சிவபெருமானின் பின்னால் சென்றனர். இதைக் கண்ட ரிஷிகள் கோபம் கொண்டு, சிவபெருமானை கொல்ல முயன்றனர். உடனே சிவபெருமான் அங்கிருந்து ஒரு பாம்பு புற்றுக்குள் சென்று மறைந்தார். ரிஷிகள் புற்றுக்குள் பார்த்தபோது, அங்கு ஜோதிர் லிங்கமாக இறைவன் காட்சி கொடுத்தார். தங்களது தவறை உணர்ந்த ரிஷிகள், இறைவனிடம் மன்னிப்பு கேட்டனர். லிங்கமாக இருந்த சிவபெருமானுக்கு, நாகப்பாம்பு ஒன்று குடைப்பிடித்தது. இதனால் அவருக்கு நாகநாதர் என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஆலய அமைப்பு :

நான்கு பக்கமும் உயர்ந்த மதில் சுவர்கள் கொண்டு, விசாலமாக அமைந்திருக்கிறது இந்த ஆலயம். நாமதேவர் என்னும் சிவபக்தர், ஊர் மக்களால் விரட்டப்பட்டு ஊரின் தென் திசையில் சென்று இறைவனைக் குறித்துப் பாடினார். நாமதேவரின் பாடல் களைக் கேட்கும் பொருட்டு மூலவர் தென்திசை நோக்கித் திரும்பினார் என்று சொல்லப்படுகிறது. எனவே மூலவர் கருவறை தென்திசை நோக்கியும், கோபுரம் கிழக்கு திசை நோக்கியும் உள்ளன. சிறந்த சிற்ப வேலைகளுடன் கூடிய நீண்ட, கூம்பு வடிவ கோபுரம் இந்த கோவிலில் காணப்படுகிறது. மேலும் ஆலயத்திற்கு வெளியே மிகவும் உயரமான, யோக நிலையில் இருக்கும் சிவனின் சிலை ஒன்றும் உள்ளது. இந்த ஆலயத்தில் சிவராத்திரி மிகவும் சிறப்பாக நடைபெறும். அப்போது இங்கு அதிகமான அளவில் பக்தர்கள் கூடுவார்கள்.

குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகைக்கு அருகில் 17 கிலோமீட்டர் தொலைவில் நாகநாதர் கோவில் அமைந்துள்ளது. ரெயிலில் துவாரகைக்கு வந்து, அங்கிருந்து கார் அல்லது பஸ் மூலம் நாகநாத் செல்லலாம்.
Tags:    

Similar News