ஆன்மிகம்

ஸ்ரீ தோடகாஷ்டகம் - தமிழாக்கம்

Published On 2017-01-21 08:28 GMT   |   Update On 2017-01-21 08:28 GMT
வடமொழியில் உள்ள தோடகாஷ்டகத்தைத் தமிழில் மொழி பெயர்ந்தது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தோடகாஷ்டகத்தை தினமும் சொல்லி வந்தால் நன்மைகள் உண்டாகும்.
ஸ்ரீ சங்கரரின் மேல், ஸ்ரீ தோடக ஆச்சாரியாள் எனும் சீடர் 'தோடக' விருத்தத்தில் 8 பாடல்கள், (அஷ்டகம்) அருளிச் செய்தார். 1984-ஆம் வருடம், ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ மகாஸ்சுவாமிகளை பாரதிவை ராமச்சந்திரன் தரிசித்தபொழுது, வடமொழியில் உள்ள தோடகாஷ்டகத்தைத் தமிழில் மொழி பெயர்த்து பாடச் சொன்னார்.

தோடகாஷ்டகத்தின் தமிழாக்கம் வருமாறு:-

சங்கர குருவே சரணம்... சரணம்
உயரிய சாஸ்திர அமுதக் கடலே
உபநிடம் கூறும் உண்மைப் பொருளே!
சங்கர குருவே சரணம், சரணம்!

கருணை வடிவே! கடல்போல் வாழ்வில்
கவலைகள் தீர்த்தே காத்திட வேண்டும்!
காவியம், சாஸ்திரம் உணர்த்திட வேண்டும்
சங்கர குருவே சரணம், சரணம்!

உம்முடைப் பிறப்பால் உலகம் உய்ந்தது,
உண்மை, ஞானம் உணர்த்திட வைத்தது!
ஒள்ளிய ஆத்தும அறிவினை அருள்வாய்
சங்கர குருவே சரணம், சரணம்!

மங்களம் தந்திடும் சங்கரர் நாமம்
மனதில் மகிழ்வினை உடனே தந்திடும்!
மாளா ஆசைகள் நீக்கிடச் செய்வாய்
சங்கர குருவே சரணம், சரணம்!

நற்செயல் பற்பல செய்திட அருள்வாய்
நல்லவர் பார்வை ஒன்றிடத் செய்வாய்!
நாடிடும் இந்த எளியனைக் காப்பாய்
சங்கர குருவே சரணம் சரணம்!

உலகைக் காத்திடும் உத்தமர்கள் பலர்
உலகில் நன்மையை வேண்டியே நிற்பர்!
ஒளிர்ந்திடும் கதிரவன் ஒளியினைப் போலாம்
சங்கர குருவே சரணம் சரணம்!

தவமுனி பலரினிலும் மேலாம் குருவே
தரணியில் உனைப்போல் ஞானியும் உண்டோ?
தாளினைப் பணிபவர் தாபங்கள் தீர்ப்பாய்
சங்கர குருவே சரணம் சரணம்!

கலைகள் எவையும் யான் அறியனே!
குருவினை வணங்கும் வகை தெரியேனே!
கடிதென வந்தே காத்திட வேண்டும்
சங்கர குருவே சரணம் சரணம்!

Similar News