ஆன்மிகம்

குடும்ப ஒற்றுமையை காக்கும் ஸ்ரீராமர் காயத்ரி மந்திரம்

Published On 2016-12-16 06:53 GMT   |   Update On 2016-12-16 06:53 GMT
அர்ச்சனைகள், சுலோகங்களை சொல்லிய பிறகு, கற்பூர தீபம் காட்டும் போது, ராம காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்து வர வேண்டும்.
மகாவிஷ்ணுவின் அவதாரத்தில் ஒன்றாக கூறப்படுவது ராம அவதாரம். ஒழுக்கத்தின் பிறப்பிடமாக வாழ்ந்தவர். ஆகையால்தான் அவர் இப்போதும் மக்களின் மனதில் தெய்வமாக குடிகொண்டு வாழ்ந்து வருகிறார். கவுசல்யாதேவி குழந்தை வரம் வேண்டி, ரங்கநாதரை வழிபட்டு வந்தார். அந்த ரங்கநாதரே, ஸ்ரீராமனாக அவதரித்து வந்தார். ஸ்ரீராமன் சத்தியத்தினாலேயே பகைவர்களை அழிப்பவர். ஒரு இல், ஒரு வில், ஒரு சொல் என்ற தத்துவப்படி வாழ்க்கை நடத்தியவர். தேவர்களுக்கெல்லாம் அரசனாக இந்திரன் இருப்பதுபோல, உலக உயிர்களுக்கெல்லாம் அரசனாக ராமன் விளங்குகிறார்.

ஸ்ரீராமரின் கதையைக் கேட்பவர்கள், எல்லாப் பயன்களையும் அடைவர் என்பது நம்பிக்கை. மேலும் ராமாயணத்தையோ அல்லது அதன் ஒரு பாகமாகிய சுந்தரகாண்டத்தையோ படித்து வந்தால், மனதால் எதை நினைக்கிறோமோ அவையெல்லாம் கைகூடும். தந்தை- தாய்க்கு சிறந்த தனயனாக, உடன் பிறந்தவர்களுக்கு இனிய சகோதரனாக, மனைவிக்கு சிறந்த கணவனாக, மக்களுக்கு ஒப்பற்ற அரசனாக, குருவிற்கு சிறந்த மாணவனாக என்று பலவற்றிலும் சிறப்பாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்.

தினமும் ராம நாமத்தைச் சொன்னாலே நற்பலன்கள் ஏற்படும். அதிலும் ராம காயத்ரியை சொல்வதால் சிறப்புமிக்க பலன்களைப் பெறலாம். ஸ்ரீராமர் சம்பந்தப்பட்ட அர்ச்சனைகள், சுலோகங்கள் முதலியவற்றை சொல்லிய பிறகு, கற்பூர தீபம் காட்டும் போது, ராம காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்து வர வேண்டும்.

ராம காயத்ரி மந்திரம் :

‘ஓம் தஸரதாய வித்மஹே
ஸீதாவல்லபாய தீமஹி
தந்நோ ராமஹ் ப்ரசோதயாத்’.

தசரதனின் மகனை அறிந்து கொள்வோம். சீதாதேவியின் கணவன் மீது தியானம் செய்வோம். அந்த ஸ்ரீராமன் நமக்கு எல்லா நலன்களையும் வழங்கி அருள் செய்வான் என்பது இதன் பொருள்.

இந்த காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வருவதால், ஆபத்து காலங்களில் நன்மை விளையும். புத்திரப்பேறு உண்டாகும். பகை விலகும். ஒழுக்கமாக வாழ வழி வகுக்கும். எண்ணிய வாழ்வு அமையும். பாவங்கள் அகலும். குடும்பத்தில் ஒற்றுமை வளரும். தத்துவார்த்தமான ஞானம் பெறலாம்.

Similar News