ஆன்மிகம்

விநாயகப்பெருமான் காயத்ரி மந்திரம்

Published On 2016-11-29 03:05 GMT   |   Update On 2016-11-29 03:05 GMT
விநாயகருக்கு வழிபடுவதற்கு ஏராளமான மந்திரங்களும், துதிபாடல்களும் இருந்தாலும், கணேச காயத்ரி மந்திரம் கூறி, விநாயகரை வழிபடுவது தனிச் சிறப்பாகும்.
நினைத்த மாத்திரத்தில் எளிமையாக அமைத்து வழிபடக்கூடிய ஒரே தெய்வம் விநாயகப்பெருமான். விநாயகர் என்ற சொல்லுக்கு, தலைவர்களில் நிகரற்றவர், இடையூறுகளை நீக்குபவர் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கும். இந்து சமயத்தின் ஆறு பிரிவுகளில் முதன்மையானது கணபதி வழிபாடாகும். மேலும் கணபதியை இந்து மதத்தில் உள்ள அனைவரும் வழிபடுவர்.

ஒரு செயலைத் தொடங்கும் முன்பு, அந்தச் செயல் நல்ல விதமாக நடைபெற, விநாயகப்பெருமானை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். அவ்வாறு செய்தால் அந்தச் செயல் எவ்வித தடங்கலும் இல்லாமல் இனிதாக நடைபெறும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. தடைகளை நீக்கி அருள்பவர் விக்னேஸ்வரர்.

ஒரு முறை சிவபெருமான் திரிபுரத்தை எரிப்பதற்காக புறப்பட்டார். அப்போது அவர் விநாயகரை வழிபட மறந்து விட்டார். ஆகையால் செல்லும் வழியில் ஈசனின் தேர் அச்சு முறிந்து விட்டது. சிவபெருமானுக்கே இந்த நிலைமை என்றால், மற்றவர்களின் நிலைபற்றி சொல்லத் தேவையில்லை. எனவே முழுமுதற் கடவுளான விநாயகருக்கு முதல் வணக்கம் தெரிவிப்பது அவசியமாகிறது. அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு ஏராளமான மந்திரங்களும், துதிபாடல்களும் இருந்தாலும், கணேச காயத்ரி மந்திரம் கூறி, விநாயகரை வழிபடுவது தனிச் சிறப்பாகும்.

கணேச காயத்ரி மந்திரம் :


‘ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்திஹி ப்ரசோதயாத்’

பரம்பொருளை நாம் அறிந்து கொள்வோம். வக்ர துண்டன் மீது தியானம் செய்வோம். தந்தினாகிய அவன் நம்மை காத்து அருள்பாலிப்பான் என்பது இதன் பொருளாகும்.

விநாயகப் பெருமானை வழிபட்டு, பூஜை முடிவில் கற்பூர தீபம் காட்டும்போது, இந்த காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்வது சிறப்பு சேர்க்கும். இவ்வாறு சொல்வதால் வினைகள் விலகும். காரியத்தடை அகலும். காரியங்களில் வெற்றி உண்டாகும். பாவங்கள் நீங்கும். உடலும், உள்ளமும் வலிமையாக திகழும்.

Similar News