ஆன்மிகம்

பிரம்மா காயத்ரி மந்திரம்

Published On 2016-11-22 02:36 GMT   |   Update On 2016-11-22 02:36 GMT
பிரம்மா காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால் கேட்ட வரம் கிடைக்கும். வேதங்களில் சிறந்து விளங்கலாம். ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா, படைப்புக் கடவுளாக போற்றப்படுகிறார். நான்முகன், அயன், கஞ்சன், விரிஞ்சி உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் இவருக்கு உண்டு. விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து தோன்றியவர் பிரம்மன். இவரது மனைவி கல்விக் கடவுளான சரஸ்வதி. பிரம்மனின் உடன்பிறந்தவளாக மகாலட்சுமியைச் சொல்வார்கள். பிரம்மதேவருக்கு சனகர், சனத்குமாரர், சனத்சுஜாதர், சனந்தனர், வசிஷ்டர், புலகர், புலஸ்தியர், பிருகு, தட்சிப்பிரஜாபதி, ஆங்கிரஸ், மரீசி, அத்ரி, நாரதர் ஆகிய மகன்கள் இருப்பதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

உலக உயிர்களை படைக்கும் பிரம்மன், தனது பிரம்ம தண்டம் கொண்டு அனைவரின் தலையெழுத்தையும் எழுதுகிறார். அன்னப் பறவையை வாகனமாக கொண்ட பிரம்மனின் இருப்பிடம் சத்தியலோகம் ஆகும். ஒருமுறை விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் யார் பெரியவர்? என்ற போட்டி ஏற்பட்டது. அப்போது ஈசனின் தலைமுடியைக் கண்டதாக பிரம்மன் பொய் கூறினார். இதனால் அவருக்கு பூலோகத்தில் தனிக்கோவில்கள் இருக்காது என்று ஈசன் சாபமிட்டார். சிவன் கோவிலில் சிவன் சன்னிதியின் சுற்றுப் பிரகாரத்தில் பிரம்மதேவன் வீற்றிருப்பதைக் காணலாம்.

பிரம்மதேவனை வழிபடும்போது, அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை சொல்வது நன்மைகளை வழங்கும்.

பிரம்மா காயத்ரி மந்திரம்

‘ஓம் வேதாத்மகாய வித்மஹே
ஹரண்ய கர்ப்பாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்’

வேதங்களை உருவாக்கியவரை நாம் அறிந்து கொள்வோம். ஹிரண்யன் என்னும் பெயர் பெற்ற அந்தப் பரம்பொருளை தியானம் செய்வோம். பிரம்மதேவனாகிய அவர், நமக்கு நன்மை அளித்து, காத்து அருள்வார் என்பது இதன் பொருள்.

இந்த காயத்ரி மந்திரத்தை, பிரம்மதேவனை வழிபடும் போது தினமும் 108 முறை உச்சரித்து வந்தால் கேட்ட வரம் கிடைக்கும். வேதங்களில் சிறந்து விளங்கலாம். ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

Similar News