இஸ்லாம்
இஸ்லாம்

மனிதனின் முத்தான மூன்று சொத்துக்கள் எது?

Update: 2022-03-10 07:25 GMT
உண்மையான சொத்து என்பது நாம் பிறருக்கு செய்யும் பொருளாதார உதவியும், தானதர்மம் மட்டும்தான். இந்த வாய்ப்பு இந்த உலக வாழ்க்கையில் மட்டுமே வாய்க்கும். மறுவுலகில் விருப்பப்படி வாய்ப்பு கிடைக்காது.

வாழ்வில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்கிறார்கள். ஓய்வின்றி கண்விழித்து பாடுபடுகிறார்கள். இரவும் பகலும் உடலை வருத்தி, உணவை சுருக்கி, ஓய்வை குறைத்து, உடல்நலம் பேணாமல் பொருளாதாரத்தை மட்டுமே இலக்காக வைத்து தானியங்கி இயந்திரத்தை போன்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கருவறையிலிருந்து கல்லறை வரைக்கும் சில்லரை தேவை என்ற ஒற்றைக் குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே பலர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மனித வாழ்க்கைக்கு பொருளாதாரம் அவசியம். பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கை அல்ல, சொத்து மட்டுமே வாழ்க்கை அல்ல.

“அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) கூறியதாவது: “நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்டது’ (திருக்குர்ஆன் 102:1,2) என்ற வசனங்களை ஓதிக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், “ஆதமின் மகன் (மனிதன்) எனது செல்வம்; எனது செல்வம்” என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும், உடுத்திக் கிழித்ததையும், தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?” என்று கேட்டார்கள்”. (நூல்: முஸ்லிம்)

 “அடியான், ‘என் செல்வம்; என் செல்வம்’ என்று கூறுகின்றான். அவனுடைய செல்வங்களில் மூன்று மட்டுமே அவனுக்குச் சொந்தமானதாகும். அவன் உண்டு கழித்ததும், உடுத்திக் கிழித்ததும், அல்லது கொடுத்துச் சேமித்துக் கொண்டதும்தான் அவனுக்குரியவை. மற்றவை அனைத்தும் கைவிட்டுப் போகக் கூடியவையும், மக்களுக்காக அவன் விட்டுச் செல்லக்கூடியவையும் ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)

நமது சொத்து என்பது நாம் சேர்த்து வைத்தது அல்ல. அது நமது வாரிசுகளுக்கு உரியதாகும். நாம் இறந்ததும் அவற்றை அவர்கள் பங்கு வைத்து, பாகம் பிரித்துக் கொள்வார்கள். உண்மையான நமது சொத்து என்பது இதுவரைக்கும் நாம் உண்டு அனுபவித்ததும், உடுத்தி அனுபவித்ததும்தான். மூன்றாவதாக நாம் பிறருக்காக செய்த தர்மம் மறுவுலகில் நமக்கு நன்மைகளாக மாற்றப்பட்டு, நமது கணக்கில் சேமித்து வைக்கப்படும். மற்றவை நமது கையை விட்டு சென்றுவிடும்.

உண்மையான சொத்து என்பது நாம் பிறருக்கு செய்யும் பொருளாதார உதவியும், தானதர்மம் மட்டும்தான். இந்த வாய்ப்பு இந்த உலக வாழ்க்கையில் மட்டுமே வாய்க்கும். மறுவுலகில் விருப்பப்படி வாய்ப்பு கிடைக்காது.

“உங்களில் ஒருவருக்கு மரணம் வரும் முன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாமல் மரணிக்கும் சமயம்) ‘என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக்கூடாதா? அப்படியாயின் நானும் தானதர்மம் செய்து நல்லவர்களில் ஒருவனாக ஆகிவிடுவேன்’ என்று கூறுவான். ஆனால், அல்லாஹ் எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்தமாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 63:10,11)

வாருங்கள் நண்பர்களே, வாழும் போதே தர்மம் செய்வோம். இறைவனின் அன்பை பெறுவோம்.

அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
Tags:    

Similar News