ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

ரமலான் நோன்பின் மகத்துவங்கள்: இறைவழிபாடுகள் தரும் சிறப்புகள்

Published On 2021-04-17 03:15 GMT   |   Update On 2021-04-17 03:15 GMT
இஸ்லாமிய மார்க்கத்தின்படி இறைவன் விரும்பக்கூடிய, அவன் பொருந்திக் கொள்ளக்கூடிய நற்செயல்கள், நற்குணங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் அனைத்தும் ‘இபாதத்’ ஆகும்.
புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருல் இபாதத்’ வணக்க வழிபாடுகள் நிறைந்த மாதம் எனும் தத்துவப் பெயரும் உண்டு.

இஸ்லாமியப் பார்வையில் ‘இபாதத்’என்றால் என்ன?

‘இபாதத்’ என்பதற்கு அரபி அகராதியில் ‘வழிபடுதல்’, ‘பணிதல்’, ‘இறைவன் முன்பு தாழ்வை வெளிப்படுத்துதல்’ என்பது பொருள் ஆகும்.

இஸ்லாமிய மார்க்கத்தின்படி இறைவன் விரும்பக்கூடிய, அவன் பொருந்திக் கொள்ளக்கூடிய நற்செயல்கள், நற்குணங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் அனைத்தும் ‘இபாதத்’ ஆகும். இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும், ‘நல்லோர்கள் பிரியப்படக்கூடிய செயல்பாடுகளும் ‘இபாதத்’ என்று சொல்லப்படும்’.

இந்த அடிப்படையில் இன்சொல்லும், நற்செயலும், தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், சதகா, உண்மை, நம்பிக்கை, பெற்றோர்களுக்கு நன்மை புரிதல், உறவுகளுடன் உறவாடுதல், வாக்குறுதியை நிறைவேற்றுதல், நன்மையை ஏவி, தீயதை தடுத்தல், உபகாரம் செய்தல், ஏழைகள், விதவைகள், அனாதைகள், வழிபோக்கர்கள், நலிந்த மக்கள் அனைவருக்கும் பாடுபடுவதும், உயிரினங்களின் மீது கருணை காட்டுவதும், சகித்துக் கொள்வதும், நன்றி செய்வதும், பிரார்த்திப்பதும், குர்ஆன் ஓதுவதும், இறைவனை நினைப்பதும், இறையச்சம், உள்ளச்சம் இன்னும் இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்தும் ‘இபாதத்’ ஆகும்.

இவற்றை ஒரு நோன்பாளி, நோன்பு காலங்களிலும், மற்ற நேரங்களிலும் பேணி, கடைப்பிடித்து வாழ்ந்தால், அவரின் வாழ்க்கையே இறையச்சமும், இறைவழிபாடும் நிறைந்ததாக மாறிவிடும். இதற்கு தான் மனிதனை படைத்ததாக திருக்குர்ஆனில் இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

‘இன்னும் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை’. (திருக்குர்ஆன் 51:56)

வணக்க வழிபாடுகள் செய்வதற்கு புனித ரமலான் பெயருக்கு ஏற்றாற்போல் சிறந்த மாதமாக விளங்குகிறது. ரமலானில் ஹஜ்ஜைத் தவிர மற்ற வணக்க வழிபாடுகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறது. எனினும் புனித மக்கா சென்று ஹஜ் செய்யமுடியாத குறையை ‘உம்ரா’ எனும் மக்கா பயணம் நிவர்த்தி செய்கிறது. ‘எவர் ஒருவர் ரமலான் மாதத்தில் ‘உம்ரா’ செய்கிறாரோ, அவர் என்னுடன் ஹஜ் செய்தவர் போன்றவர் ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

மற்ற மாதங்களை காட்டிலும் புனித ரமலானில் கடமையான ஐங்காலத் தொழுகைகள் அழகாக நிறைவேற்றப்படுகின்றது; இரவு நேர சிறப்புத் தொழுகையான ‘தராவீஹ்’ தொழுகை கூட்டம் கூட்டமாக நிறைவேற்றப்படுகின்றது. ‘ஜகாத்’ எனும் கடமையான ஏழை வரியும், ‘சதகா’ எனும் தர்ம நிதியும், ‘ஜகாத்துல் பித்ர்’ எனும் நோன்புப் பெருநாள் தர்மமும், ‘தஹஜ்ஜத்’ எனும் ஸஹ்ர் நேரத் தொழுகையும் பிரத்யேகமான முறையில் நிறைவேற்றப்படுகின்றது.

புனித ரமலானில் உடல் ரீதியான கடமை தொழுகை, மன ரீதியான கடமை நோன்பு, பொருள் ரீதியான கடமை சதகா, ஸகாத், ஜகாத்துல் பித்ர் ஆகும். உடல் மற்றும் பொருள் ரீதியான கடமை ‘உம்ரா’ இவை அனைத்தும் ஒரு சேர ஒன்றாக நிறைவேற்றப்படக்கூடிய வணக்க வழிபாடுகள் நிறைந்த மாதம் தான் புனித ரமலான் மாதம். புனிதமான இந்த மாதத்தில் இதன் சிறப்புக்கள் அனைத்தையும் நாம் பெற்று சிறப்புடன் வாழ வழி காண்போம்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

இப்தார்: மாலை 6.37 மணி

நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.37 மணி
Tags:    

Similar News