ஆன்மிகம்

நோன்பின் மாண்புகள்: நன்றே செய் இன்றே செய்

Published On 2018-06-11 05:26 GMT   |   Update On 2018-06-11 05:26 GMT
இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள், இறைவனின் படைப்புகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள், நமக்கு நாமே செய்ய வேண்டிய கடமைகள் என மூன்று வகை கடமைகள் நம் முன் உள்ளன.
இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள், இறைவனின் படைப்புகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள், நமக்கு நாமே செய்ய வேண்டிய கடமைகள் என மூன்று வகை கடமைகள் நம் முன் உள்ளன.

‘ஐந்து விஷயங்களுக்கு முன் ஐந்து விஷயங்களை அரிதாகக் கருதுங்கள்’ என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

“முதுமைக்கு முன் இளமையையும், நோய்க்கு முன் உடல் நலத்தையும், வறு மைக்கு முன் செல்வத்தையும், வேலைக்கு முன் ஓய்வையும், மரணத்திற்கு முன் வாழ்வையும் அரிதாகக் கருதி அவற்றை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.” (மிஷ்காத்)

இளமை ஓர் அருட்கொடை. நற்செயல் அதிகம் புரிவதற்கு ஏற்ற பருவம். உடல் வலிமையும், மன வலிமையும், சிந்திக்கும் ஆற்றலும் உள்ள பருவம். இதனை வீணாக்கலாமா? எனவே, உடல் ஆரோக்கியம் இருக்கும்போதே நல்லவற்றை செய்துவிடு. நோய் எப்போது தாக்கும் என்று யாருக்கும் தெரியாது.

செல்வம் உன்னிடத்தில் உள்ளபோதே அறக்கொடைகளை வழங்கிவிடு, நெருக்கடி எப்போதும் வரலாம். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு நற்செயலில் ஈடுபடு. ஓய்வை வீணான செயல்களிலும், கேளிக்கைகளிலும் கழித்துவிட்டு பின்னர் வருந்தாதே.

இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம். இழந்த ஆரோக்கியத்தையும் பெறலாம். ஆனால் இழந்த நேரத்தை மீண்டும் பெற முடியாது.

இறைவன் நிர்ணயித்துள்ள கால அவகாசத்தை யாராலும் நீட்டிக்க முடியாது. எனவே நற்செயல் புரிவதை தள்ளிப்போடாதே.

“நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள், உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக. மேலும், அந்த நேரத்தில் அவர் கூறுவார்: “என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிதுகாலம் அவகாசம் அளிக்கக்கூடாதா, நான் தானதர்மம் செய்வேனே, நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே. ஆனால், ஒருவருக்கு அவர் செயல்படுவதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்துவிட்டாலோ எந்த மனிதனுக்கும் மேலும் கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக அளிப்பதில்லை.” (63: 10-11)

இன்னும் சிலர் மரணத்திற்கு பின்னும் இப்படிப் புலம்புவார்களாம்.

“...என் இறைவனே! நான் விட்டு வந்துள்ள உலகுக்கு என்னைத் திரும்ப அனுப்புவாயாக! அங்கு நான் நற்செயல் புரிவேனே!” என்று கூறத் தொடங்குவான்.  அவ்வாறு ஒருபோதும் நடக்காது. இது அவன் பிதற்றிக் கொண்டிருக்கின்ற வெறும் வார்த்தைகள்தாம்”. (23:99-100)
நன்றே செய்க! இன்றே செய்க!

டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
Tags:    

Similar News