ஆன்மிகம்

நோன்பின் மாண்புகள்: சமநிலைச் சமுதாயம்

Published On 2018-06-08 07:32 GMT   |   Update On 2018-06-08 07:32 GMT
இஸ்லாமியக் கோட்பாடுகளை பின்பற்றும் சமூகத்தை “உம்மத்தன் வஸத்தன்” என்று குர்ஆன் (2:143) வர்ணிக்கிறது. அதன் பொருள் நடுநிலைச் சமுதாயம்-சமநிலைச் சமுதாயம் என்பதாகும்.
இஸ்லாமியக் கோட்பாடுகளை பின்பற்றும் சமூகத்தை “உம்மத்தன் வஸத்தன்” என்று குர்ஆன் (2:143) வர்ணிக்கிறது. அதன் பொருள் நடுநிலைச் சமுதாயம்-சமநிலைச் சமுதாயம் என்பதாகும்.

இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் எதிலும் நடுநிலை பேண வேண்டும். ஒரு பக்கமாகச் சாய்ந்து விடக்கூடாது. உண்ணுதல், பருகுதல், செலவிடுதல், வணங்குதல் என எல்லாவற்றிலும் இது கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

“அவர்கள் செலவு செய்யும்போது வீண் விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக, அவர்களுடைய செலவுகள் இந்த மிதமிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும்.” (திருக்குர்ஆன் 25 : 67)

“உமது கையை கழுத்தோடு சேர்த்துக் கட்டி விடாதீர்; முற்றிலும் அதனை விரித்து விடாதீர். அப்படிச் செய்தால் பழிப்புக்குரியவராகவும் இயலாதவராகவும் நீர் ஆகிவிடுவீர்.” (திருக்குர்ஆன் 17 : 29)

கஞ்சத்தனமும் வேண்டாம், வீண்விரயமும் வேண்டாம். இரண்டுக்கும் இடையில் ஒரு நடு நிலையைக் கடைப்பிடிக்குமாறு குர்ஆன் கூறுகிறது. ஓர் அடியான் இம்மையின் இன்பத்தில் மூழ்கி விடவேண்டாம், அதே இம்மையை முற்றிலுமாக துறந்துவிடவும் வேண்டாம், என்பதை கீழ்க்கண்ட வசனம் உணர்த்துகின்றது.
“(மக்களில்) சிலர் “எங்கள் இறைவனே! உலகத்திலேயே எங்களுக்கு எல்லாவற்றையும் தந்து விடு!” என்று பிரார்த்திக்கின்றனர். அத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற் பேறும் இல்லை.

இன்னும் சிலர் “எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக; மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும் நரக வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக!” எனப் பிரார்த்திக்கின்றனர்.”

“இத்தகையவர்களுக்கு அவர்கள் எதனைச் சம்பாதித்தார்களோ அதற்கேற்ப (ஈருலகிலும்) நற்பேறு உண்டு.” (திருக்குர்ஆன் 2 : 200- 202)

இம்மைக்கும் மறுமைக்கும் இடையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நடு நிலைப்போக்கு எப்படி இருக்க வேண்டும் என்பது இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.
“உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் விரயம் செய்யாதீர்கள். திண்ணமாக அல்லாஹ் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை.” (திருக்குர்ஆன் 7 : 31)
உண்ணுவதிலும், பருகுவதிலும் நடுநிலை தேவை என்பது இங்கு உணர்த்தப்படுகிறது.

“உமது தொழுகையில் உமது குரலை மிகவும் உயர்த்த வேண்டாம்; மிகத்தாழ்த்தவும் வேண்டாம். இவ்விரண்டுக்கும் இடையில் மிதமான தொனியைக் கடைப்பிடியும்.” (திருக்குர்ஆன் 17 : 110)

“உனது நடையில் மிதமான நிலையை மேற்கொள். உன்னுடைய குரலைச் சற்று தாழ்த்திக்கொள்.” (திருக்குர்ஆன் 31 : 19) தன்னை வருத்திக் கொள்ளும் அளவு தொழுதவர்களையும், நோன்பு நோற்பவர்களையும் பெருமானார் கண்டித்தார்கள்.

ஆன்மாவிற்கும் உடலுக்கும் இடையில் நடுநிலை, தனிமனித நலனுக்கும், சமூக நலனுக்கும் இடையில் நடுநிலை, இறைவனுக்கு செய்யவேண்டிய கடமைகளுக்கும், மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளுக்கு இடையில் நடுநிலை என்று ஒவ்வொரு துறையிலும் நடுநிலை பேணப்பட வேண்டும். நடுநிலையோடு செய்யப்படும் செயல்களையே நிலையாகச் செய்ய முடியும்.

“உங்கள் மார்க்கத்தில் அநியாயமாக எதையும் மிகைப்படுத்தாதீர்கள்” என்ற திருக்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் நாம் அனைவரும் செயல்படுவோம்.

டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.

Tags:    

Similar News