ஆன்மிகம்

நோன்பின் மாண்புகள்: மனித உரிமைகள்

Published On 2018-06-02 03:53 GMT   |   Update On 2018-06-02 03:53 GMT
இம்மையில் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டு அதேவேளையில் மனிதர்களுக்கு எதிரான செயல்களை செய்திருந்தால் அவனுக்கு மறுமையில் எதுவும் கிட்டாது.
மனிதர்களுக்கு உதவுவதும் மனிதநேயம், மனிதர்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருத்தலும் மனிதநேயம்.

இஸ்லாம் மனித உரிமைகள் பற்றி விரிவாக பேசுகிறது. மனித உரிமைகளும் இறைவனால் விதிக்கப்பட்டவையே. வழிபாடுகளை வகுத்த அதே இறைவன்தான் மனித உரிமைகளையும் வகுத்துள்ளான். மனித உரிமைகளை மீறுவது இறைக்கட்டளைகளை மீறுவதற்கு சமமாகும்.

ஒருவர் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடைமைகளில் தவறிழைத்தால் இறைவனிடத்தில் மட்டும் மன்னிப்பு கோரினால் போதும். மனித உரிமைகளை பறித்தால் இறைவனிடமும் மனிதர்களிடமும் அவர் மன்னிப்பு கோர வேண்டும்.

லஞ்சம், ஊழல், மோசடி, நாட்டின் வளங்களை சுரண்டுதல், நிலங்களை அபகரித்தால், ஊதியத்திற்கேற்றபடி உழைக்காதிருத்தல், மக்களின் ஒற்றுமையை குலைத்து துவேஷம், வெறுப்பு ஆகியவற்றை உண்டு பண்ணுதல் போன்றவை நாட்டிற்கு சமூகத்திற்கும் எதிரான குற்றங்களாகும். இக்குற்றங்களை நாட்டு மக்கள் மன்னிக்காதவரை அவன் செய்த பாவங்கள் அவனை விட்டு விலகாது.

ஒருபுறம் தொழுகை நோன்பு போன்ற வழிபாடுகள், இன்னொரு புறம் மனிதர்களுக்கு எதிரான பாவங்கள், இவ்வாறு செய்வோரை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நயவஞ்சகர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நயவஞ்சகர்களின் பண்புகள் மூன்று ஆகும். அவை

1. பேசினால் பொய்யே பேசுவான்.
2. வாக்குறுதி கொடுத்தால் மீறுவான்.
3. நம்பி ஒப்படைத்த பொருள்களில் மோசடி செய்வான்.

அப்படிப்பட்ட மனிதன் நோன்பு நோற்று தொழுது உம்ராவை (புனிதபயணம்) நிறைவேற்றினாலும், இறைவனுக்குரிய கடமைகளை செய்து கொண்டே மனிதர்களுக்கு தீங்கிழைப்பவர்கள் நயவஞ்சகர்களாக கருதப்படுவார்கள்.

இம்மையில் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டு அதேவேளையில் மனிதர்களுக்கு எதிரான செயல்களை செய்திருந்தால் அவனுக்கு மறுமையில் எதுவும் கிட்டாது. மறுமையில் திவாலாகிப்போன நிலையில் அவன் இருப்பான் என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோழர்களிடம் ஏழை என்பவன் யார்? என்று வினவினார்கள். எவரிடம் பணமோ வேறு எந்தப்பொருளோ இல்லையோ அவரே எங்களில் ஏழை எனத்தோழர்கள் பதிலளித்தனர்.

நபிகள் (ஸல்) கூறினார்கள்: ஒருவன் மறுமைநாளில் தன் தொழுகை, நோன்பு, ஜகாத் (தானதர்மம்) ஆகியவற்றுடன் இறைவனிடம் வருவான். இவற்றுடன் அவன் உலகில் எவரையேனும் திட்டியிருப்பான். எவர் மீதாவது அவதூறு கூறியிருப்பான் எவரையேனும் கொலை செய்திருப்பான் எவரையேனும் நியாயமின்றி அடித்திருப்பான். எனவே அவனது நன்மைகள் அவனால் அநீதிக்குள்ளாக்கப்பட்டவர்களிடையே பங்கிடப்படும். அவனது நன்மைகள் தீர்ந்து போய் அநீதிக்குள்ளானவர்களின் பாவங்கள் அவன் கணக்கில் எழுதப்படும். பிறகு அவன் நரகத்தில் வீசி எறியப்படுவான். அத்தகையோரே உண்மையான ஏழை ஆவார். ( நூல்: முஸ்லிம்)

எனவே இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டேன். எனவே எப்படியும் சுவனத்தில் நுழைந்து விடுவேன் என்று கனவு காண வேண்டாம்.

- டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
Tags:    

Similar News