ஆன்மிகம்

இஸ்லாம் ஊக்குவிக்கும் அறக்கொடை

Published On 2018-05-27 05:13 GMT   |   Update On 2018-05-27 05:13 GMT
தொழுகை, நோன்பு, பாவமன்னிப்பு கோருதல், திருமறை ஓதுதல் ஆகியவற்றை உடல் வழி வணக்கங்களாக இறைவன் நமக்கு அளித்துள்ளான். உடல் வலிமை எனும் அருட்கொடைக்கு உடலின் மூலம் நன்றி செலுத்த வேண்டும். அதே வேளையில் இறைவன் அளித்துள்ள பொருள் வளத்திற்கு பொருளை வழங்கி நன்றி செலுத்த வேண்டும்.

தொழுகை, நோன்பு, பாவமன்னிப்பு கோருதல், திருமறை ஓதுதல் ஆகியவற்றை உடல் வழி வணக்கங்களாக இறைவன் நமக்கு அளித்துள்ளான். உடல் வலிமை எனும் அருட்கொடைக்கு உடலின் மூலம் நன்றி செலுத்த வேண்டும். அதே வேளையில் இறைவன் அளித்துள்ள பொருள் வளத்திற்கு பொருளை வழங்கி நன்றி செலுத்த வேண்டும். இதற்காகக் கடமையாக்கப்பட்ட கடமைதான் ‘ஜகாத்’, ‘சதகா’ எனும் தானதர்மக் கடமைகள்.

தானதர்மம் இரண்டு வகைப்படும். ஒன்று ‘ஜகாத்’ எனப்படுவது. இது, கட்டாயக் கடமையாகும். இரண்டாவது, ‘சதகா’ என்பது  இது உபரியான கடமையாகும்.

ஜகாத் யார் கொடுக்க வேண்டும்? எவ்வாறு கொடுக்க வேண்டும்? யாருக்குக் கொடுக்க வேண்டும்? என்பது தெளிவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ‘சதகா’ எனும் உபரித் தொகைக்கு அளவே இல்லை.

இஸ்லாம் அறக்கொடையை ஊக்குவித்து கஞ்சத்தனத்தை கடுமையாக சாடுகின்றது. கலீபா அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் சிலர் ‘தொழுவோம் ஆனால் ஜகாத் கொடுக்க மாட்டோம்’ என்று கூறியபோது ‘ஜகாத் கொடுக்க மறுப்பவர்கள் மீது நான் போர் தொடுப்பேன்’ என்றார்கள் கலீபா அபூபக்கர் (ரலி) அவர்கள்.

“உங்களுடைய செல்வங்களில், யாசிப்பவருக்கும் இல்லாதவருக்கும் உரிமை இருக்கிறது” என்ற இறைவசனம் (51:19) நமக்கு அருளப்பட்ட செல்வம் நமக்காக மட்டுமல்ல பிறருக்கும் சேர்த்தே என்று கூறுகிறது. எனவே நமது செல்வத்தில் ஒரு பகுதியை நலிவுற்ற மக்களுக்கு வழங்காவிடில் அவர்களது பொருளை நாம் அபகரித்ததாகவே கருதப்படும்.

“செல்வம் உங்களிலுள்ள செல்வந்தர்களுக்கிடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்க வேண்டாம்“ என்ற வசனம் (59:7) செல்வம் ஓரிடத்தில் தேங்கி நிற்காமல் மக்களிடையே சுழல வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

“நபியே! மக்களுடைய பொருட்களிலிருந்து தானத்தை வசூல் செய்து அதன் மூலம் அவர்களை தூய்மைப்படுத்துவீராக” என்ற வசனம் (9:103) ஜகாத் ஒரு வரியைப் போல மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு நலிவுற்ற மக்களுக்கு கொண்டு சேர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

“அல்லாஹ்வுடைய வழியில் தங்கள் பொருள்களைச் செலவழிப்போர்களின் செலவுக்கு உவமானம், ஒரு தானிய விதையைப் பயிரிடுவது போன்றதாகும். அதிலிருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன. ஒவ்வொரு கதிரும் நூறு தானிய மணிகளைக் கொண்டுள்ளது. (இவ்வாறு) அல்லாஹ் தான் நாடுவோருக்கு (அவர்களுடைய நற்செயல்களின் பயன்களை) பன்மடங்காக்குகின்றான்.” (திருக்குர்ஆன் 2: 261)

தானம் கொடுப்பதால் எவரது செல்வமும் குறைந்துபோவதில்லை. தானம் கொடுப்பவருக்கு இறைவன் இம்மையிலும் மறுமையிலும் அதனை பன்மடங்காக திருப்பித் தருவான்.
Tags:    

Similar News