ஆன்மிகம்

நோன்பும், மனிதநேயமும்

Published On 2018-05-20 04:53 GMT   |   Update On 2018-05-21 04:06 GMT
நோன்பு ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு பயிற்சி அளிப்பதோடு மனித நேயத்தையும் கற்றுத் தருகிறது.

ரமலானில் உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் நோன்பு நோற்கின்றனர். ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி, அறிஞர், பாமரர், ஆள்வோர், ஆளப்படுவோர் என்று அனைவரும் நோன்பு நோற்கின்றனர். உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே மாதத்தில் நோன்பு நோற்கின்றனர் என்ற எண்ணம் சமத்துவம், சகோதரத்துவ உணர்வை உண்டாக்குகிறது.

நோன்பு காலத்தில் பசியின் கொடுமைகளை மனிதன் உணர்வதால், கதியற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நிலையை உண்டாக்குகின்றது. வறுமை, நோய், கொடுமை, அநீதி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இதுபோன்ற நிலை எவருக்கும் வரக்கூடாது என்றும், இதுபோன்ற நிலை வந்தோருக்கு உதவ வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் அமைப்புகளையும் ஏற்படுத்துகின்றனர். நோன்பாளிகளும் இத்தகைய மனிதநேய உணர்வைப் பெற்று ஏழைகளுக்கு உதவத் தொடங்கிவிடுகின்றனர்.

மேலும் ரமலான் மாதத்தில் தானம் அளிப்பதால் இறைவனிடமிருந்து பல மடங்கு கூலி கிட்டும் என்ற நபிமொழியை மனதில் கொண்டு ஏழைகளுக்கு தாராளமாகவே வழங்குகின்றனர். இதன் காரணமாகவே சமூகத்தில் பல அறநிறுவனங்கள், ரமலான் மாதத்தில் அதிக நன்கொடைகளை பெறுகின்றன. இது நோன்பு ஏற்படுத்திய தாக்கமாகும். மேலும் ரமலான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடை அளிப்பதில் முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டி மக்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளார்கள்.

நபிகளாரைப் பற்றி அவரது தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) கூறுவதைக் கவனியுங்கள். “அண்ணல் நபி (ஸல்) கொடை வள்ளலாகவும் மற்றவருக்கு தாராளமாக வாரி வழங்குபவராகவும் திகழ்ந்தார்கள். இருப்பினும் ரமலான் மாதம் வந்துவிட்டாலோ அண்ணலாரின் கொடை இன்னும் அதிகமாகிவிடும். வேகமாக வீசும் காற்றைப்போல் அவர்களின் கொடை மேலும் அதிகமாகிவிடும்.”

ஒருபுறம் பசிக் கொடுமையை உணர்ந்ததால் ஏற்பட்ட தாக்கம். இன்னொருபுறம் நபிகளாரின் முன்மாதிரி, ஏழைகளுக்கு வழங்கும் ஆர்வத்தை நோன்பாளிகளிடம் ஏற்படுத்திவிடுகிறது. நபிகளார் ரமலானை கருணையின் மாதம் (முவாஸத்), அதாவது ஏழைகள் மற்றும் தேவையுடையோர் மீது அனுதாபம் கொள்ளும் மாதம் ஆகும் என்றார்கள்.

எனவே ரமலானில் இல்லை என்று வருபவர்களுக்கு இல்லை என்று கூறாது வாரி வழங்குவோம்.
Tags:    

Similar News