ஆன்மிகம்

ரமலான் நோன்பு ஏன்?

Published On 2018-05-18 03:44 GMT   |   Update On 2018-05-18 03:44 GMT
நோன்பு ஒரு பட்டினியா? தன்னைத் தானே வருத்தும் செயலா? நோன்பு நோற்பதால் மனிதனுக்கு, சமூகத்திற்கு என்ன நன்மை? அர்த்தமுள்ள இக்கேள்விக்கு அறிவுப்பூர்வமான விடைகள் உள்ளன.
நோன்பு ஒரு பட்டினியா? தன்னைத் தானே வருத்தும் செயலா? நோன்பு நோற்பதால் மனிதனுக்கு, சமூகத்திற்கு என்ன நன்மை? அர்த்தமுள்ள இக்கேள்விக்கு அறிவுப்பூர்வமான விடைகள் உள்ளன.

தன்னைத் தானே வருத்திக்கொள்ளுதல் என்ற ஒரு கோட்பாடு இஸ்லாத்தில் இல்லை. ஆனால் அதே வேளையில் எந்தத் துறையிலும் ஒரு சில பயிற்சிகளையும் கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ளும்போது சில சிரமங்களை  சந்திக்க நேரிடும். ஆனால் அந்தச் சிரமங்கள் மனிதனை துன்புறுத்துவதாகவோ, இயற் கைக்கு எதிரானதாகவோ, அவரால் தாங்கிக் கொள்ள முடியாததாகவோ இருக்கக் கூடாது.

நோன்பின் நோக்கம் ஒரு ஒழுக்கமான, கட்டுப்பாடான, தயாள சிந்தனை, சமூக உணர்வுடைய மனிதனை உருவாக்குவதே ஆகும். நோன்பின் நோக்கம் ஒழுக்கமே என்கிறது திருக்குர்ஆன்.

நோன்பு மட்டுமல்ல. இஸ்லாம் கடமையாக்கியுள்ள அனைத்து வழிபாடுகளின் நோக்கமும் இதுவேயாகும். திருக்குர்ஆன் ஒழுக்கத்திற்கு - இறையச்சம், இறை உணர்வு (தக்வா) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. “இறையச்சம்” என்பது இறைவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான், அவன் பார்வையிலிருந்தும், பிடியிலிருந்தும் எவரும் தப்ப முடியாது. சட்டத்தையும் சமூகத்தையும் ஏமாற்றலாம். இறைவனை ஏமாற்ற முடியாது என்பதே ஆகும்.
உலகில் மாற்றங்களை கொண்டு வர விரும்புவோர் ஒழுக்கமுள்ள ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும்.

“எவர் (நோன்பு நோற்ற நிலையில்) பொய் சொல்வதையும், பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதையும், தாகித்திருப்பதையும் பற்றி இறைவனுக்கு எந்த அக்கறையுமில்லை” என்கிறார் நபிகள் நாயகம் (ஸல்). (புகாரி) நோன்பாளிகள் பொய்யர்களாக இருக்கலாகாது என்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

ரமலானில் பள்ளிவாசலில் இரு தோழர்கள் புறம் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) “உங்கள் நோன்பு வீணாகிவிட்டது. அதற்கு பகரமாக புதிய நோன்பு ஒன்றை நோற்றுவிடுங்கள்” என்று கூறினார்கள். புறம் பேசினால் நோன்பு முறியும் என்பது இங்கு புலப்படுகிறது.

“நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் நாவால் கெட்ட சொற்களை பேச வேண்டாம். சச்சரவில் ஈடுபட வேண்டாம். கூச்சலிட வேண்டாம். நோன்பாளியிடம் எவராவது வசை மொழி கூறினால் அல்லது சண்டையிட முனைந்தால் தாம் ஒரு நோன்பாளி என்பதை அவர் நினைவில் கொள்ளட்டும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) இங்கு நாவை பேணும் பயிற்சி நோன்பாளிக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு நோன்பு ஒவ்வொரு உறுப்பிற்கும் பயிற்சி அளிக்கின்றது.

நோன்பு ஒரு சடங்கல்ல. ஒழுக்கத்தை வளர்க்கும் பயிற்சித் திட்டமாகும்.
Tags:    

Similar News