ஆன்மிகம்

நிலப்பிரச்சினைகளை தீர்க்கும் கருப்பண்ணசாமி

Published On 2019-03-15 07:18 GMT   |   Update On 2019-03-15 07:18 GMT
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாவலடி கருப்பண்ணசாமி முற்றுப்பெறாத நிலப்பிரச்சினை, நிலம், வீடு வாங்குவது, விற்பது தொடர்பான பிரச்சினைகள், வேலையின்மை, போன்ற பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கடவுளையே ஜட்ஜ் சாமி என்று பக்தர்கள் மனு கொடுத்து வழிபாடு செய்கிறார்கள். சீமைத்துரை ஜட்ஜ் நாவலடி கருப்பண்ணசாமி என்றழைக்கப்படும் அந்த சாமி வீற்றிருக்கும் கோவில், நாமக்கல் மாவட்டம், மோகனூருக்கு அருகே ஒரு கிலோமீட்டர் தொலைவில் குமரிபாளையம் கிராமத்தில் இருக்கிறது. இந்தக் கோவிலின் முன்பகுதியில் அழகிய பிரமாண்டமான இரண்டு குதிரை வாகனங்கள் உள்ளன.

பக்தர்கள், தங்களது பிணி நீங்கவும், விவசாயம் செழிக்கவும், குழந்தை வரம், வராக்கடன் கிடைக்கவும் இத்தல இறைவனை வேண்டிக்கொள்கின்றனர். மேலும் முற்றுப்பெறாத நிலப்பிரச்சினை, நிலம், வீடு வாங்குவது, விற்பது தொடர்பான பிரச்சினைகள், வேலையின்மை, படிப்பு, திருமணம் என தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி சமர்ப்பிக்கின்றனர்.

நாவலடியானிடம் தங்கள் குறைகளை கூறி மனு எழுதி கொடுக்க வருபவர்களும், களவுப்போன பொருட்கள் திரும்ப கிடைப்பதற்கும் இங்கு அது தொடர்பாக கோரிக்கைகளை மனுவாக எழுதி வைக்கிறார்கள். அதேபோல் காரியம் கைகூடியவுடன் அவர்கள் காணிக்கை செலுத்த வருவதும் தொடர்கிறது என்பதை காணும் போது நாவலடியானின் மகிமை கண்கூடாக தெரிகிறது.

ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவிலில் பூஜைகள் நடைபெறும். சிறப்பு பூஜையாக இரவு 12 மணிக்கு மேல் நாவலடியானுக்கு சத்திய பூஜை நடைபெறும். சத்திய பூஜைக்கு மல்லிகை, சம்பங்கி மலர்கள் பயன்படுத்தப்படும். சாமிக்கு செவ்வரளி, மல்லிகை, சம்பங்கி, செவ்வந்தி, ரோஜா போன்ற பூக்களால் மலர் பந்தலிட்டு வழிபாடு நடைபெறும்.
Tags:    

Similar News